சுலைமான் றாபி
இலங்கையில் ஜனவரி 08ற்குப் பின் ஊடகவியலாளன் என்ற ஒரு சொல்லிற்கு தனி மதிப்புவந்துள்ளது. இருந்தாலும் ஊடகவியலாளர்கள் எழுதும் போது உண்மையை மட்டும் எழுத வேண்டும் என சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிம் கடந்த (25) நிந்தவூரில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20வது ஆண்டு நிறைவுக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு உரை நிகழ்த்துகையில் ;
இன்று எங்கு பார்த்தாலும் ஊடகவியலாளர்கள் எவ்வித தயக்கமும் இன்றி யாரையும் விமர்சிக்கும் சக்தியைக் கொண்டுள்ளனர். இதனை ஊடகவியலாளர்கள் தங்களுக்கு அனுகூலமாக பாவித்தாலும், எழுதும் போது உண்மையை மட்டும் எழுத வேண்டும். இந்த உண்மைத்தன்மைகள் ஒரு ஊடகவியலாலனிடம் காணும் போது அவன் மிகவும் உயர்ச்சியடைந்து பல வெற்றிகளைப் பெற்றுக் கொள்வான்.
ஒருவரைத் தாக்க வேண்டும், அல்லது அவரைப் பற்றி அவதூறாகப் பேசவேண்டும் என்று நினைத்துக் கொண்டு எழுதும் போது அது பாரிய முரண்பாடுகளையும், பிரச்சினைகளையும் தோற்றுவிக்கின்றது. எனவே ஊடகவியலாளர்கள் சமூகத்திற்கு மட்டும் அல்ல முழு நாட்டிற்கும் நம்பிக்கையான ஒரு சொத்தாகும்.
சில ஊடகவியலாளர்கள் எம்மிடம் இருக்கும் பேனாவை வைத்துக் கொண்டு ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று கூறுவார்கள். ஆனால் இவ்விடயத்தில் மக்கள் எழுச்சியடைந்தால் இந்த கொள்கைகள் செயலற்றதாய்ப் போய்விடும். இதனை மாத்திரம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே மக்கள் ஆதரவு இந்த விடயத்தில் ஒத்துப் போகுமானால் இவ்விடயங்களை செய்வது ஊடகவியலாளர்களுக்கு சாதகமாக அமைந்துவிடும்.
எனவே ஊடகவியலாளர்கள் ஒவ்வொருத்தரும் சமூகம் பற்றிய சிந்தனையுடன், அவர்களின் ஒற்றுமைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு செய்திகளை எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.