ஐக்கிய தேசியக் கட்சி தனது யாப்பினை மறுசீரமைக்கும் பணியில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சியினை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சியில் இருந்த நிலையில் கட்சியின் தலைமைத்துவத்துக்குத் கடும் நெருக்கடி கொடுத்து உருவாக்கப்பட்ட துணைத்தலைவர் பதவி மற்றும் தலைமைத்துவக் குழு என்பன ரத்துச் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களை வளர்த்தெடுப்பதற்கான செயற்பாடு என்ற ரீதியில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் முரண்பட்டு நின்றவர்களை படிப்படியாக ஓரம் கட்டி, புதியவர்களை முன்னுக்கு கொண்டு வரும் செயற்திட்டமொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை தனக்கு விருப்பமானவர்களான ருவன் விஜயவர்த்தன மற்றும் அகில விராஜ் காரியவசம் ஆகியோரை எதிர்காலத் தலைவர்களாகவும், செயலாளராகவும் வளர்த்துவிடுவதற்கு ரணில் விக்ரமசிங்க எண்ணியுள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்குத் தடையாக இருக்கும் அனைத்து சிரேஷ்ட அரசியல்வாதிகளுக்கும் எதிர்வரும் நாட்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அவர்களின் எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அண்மையில் நடைபெற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றியபோது,
கட்சியின் அடுத்த தலைமைத்துவம் குறித்து கனவு கண்டு கொண்டிருப்பவர்களுக்கு கிடைக்காது என்றும் சிறந்த முறையில் செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கே தலைமைத்துவம் தேடி வரும் என்றும் பிரதமர் ரணில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.