அமைச்சர் ரிசாத் – ஆனந்த தேரர் விவாதம் , அச்சத்தில் மூழ்கியுள்ள முஸ்லிம் இனவாதிகள் !

 
 
சம்மாந்துறை -அப்துல் காதர் சலீம்
 
rishad
 
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று மகிந்த ஆட்சியில் ஆரம்பித்து நல்லாட்சியிலும் தொடர்ந்த வண்ணமுள்ளது.
 
வில்பத்துக் காட்டுக்குள் வடக்கு முஸ்லிம்கள் ஒரு அங்குலமேனும் காணியை அடாத்தாக பிடிக்கவில்லை என அரசும் அமைச்சரவையும் உறுதியாக தெரிவித்த பின்பும் பெரும்பான்மை இனவாதிகள் அந்த விடயத்திலிருந்து விலகிச்செல்வதாக தெரியவில்லை. பொதுபலசேனா தொடங்கி இன்று ஆனாந்த தேரர் வரை வடக்கு முஸ்லிம்களுக்கான இனவாதக் கருத்து கோலோச்சியே வருகின்றது. 
 
வடக்கு முஸ்லிம்கள் வில்பத்துக் காட்டுக்குள் அடாத்தாக குடியேறுகிறார்கள் என்ற இனவாதிகளின் குற்றச்சாட்டு இன்று அந்த மக்களும் அந்த மக்களுக்காக அயராது பாடுபடும் ரிசாத் பதியுதீனும் குடுவிபாயபாத்தில் ஈடுபடுகிறார்கள் என்று அபத்தமாக கூறும் அளவுக்கு திசை மாறிச் சென்றுகொண்டிருக்கின்றது.
 
என்னை அழித்தாலும் பரவாயில்லை. எனது மக்களின் நற்பெயருக்கோ எனது சமுகத்தின் நற்பெயருக்கோ தனது நற்பெயருக்கோ அழிவை ஏற்படுத்த ஒரு போதும் இடமளிக்க மாட்டேன் என்ற ரிசாத் பதியுதீனின் உறுதிப்பாடுதான் ஆனந்த தேரருடனான விவாவதத்திற்கான அடிப்படைக் காரணமாகும்.
 
முஸ்லிம் சமுகத்தின் இருப்பை கேள்விக்குட்படுத்த முனைந்த போதுதான்  ஆனந்த தேரருடனான விவாதத்திற்கு ரிசாத் பதியுதீன் தயாராகியுள்ளார்.
 
ரிசாத் பதியுதீனுக்கும் ஆனந்த தேரருக்குமிடையிலான நேரடி விவாதம் நாளை மறுதினம் திங்கட் கிழமை (28) ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெறவுள்ளது. 
 
 
இதே போன்றதொரு சம்பவம் தான் அன்று அஸ்ரப் அவர்களின் காலத்திலும் இடம்பெற்றது. அம்பாறை மாவட்டத்தில் தீகவாபியை மையப்படுத்தி அதனைச் சூழவுள்ள முஸ்லிம் பகுதிகளை அடாத்தாக பேரீனவாதம் கைப்பற்ற முயற்சித்த போதுதான் இறுதியாக மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபுக்கும் சோமஹிமி தேரருக்குமிடையிலான விவாதம் அன்று இடம்பெற்றது.
 
தலைவர் அஸ்ரப் அன்று இந்தப்பிக்குவுடன் உலகம் பார்க்க ஆதாரங்களை முன்வைத்து விவாதித்ததினால் தான் சர்வேதசமும் தேசிய அரசியல் பிரதிநிதிகளும் முஸ்லிம்களின் கருத்தை அங்கிகரிக்க முற்பட்டார்கள்.
 
அதே நிலைமை தான் இன்று வடக்கிலும் ஏற்பட்டுள்ளது. வில்பத்து வனப்பகுதி என்று கூறி முஸ்லிம்களின் பூர்வீக குடியிருப்புக்களையும் காணிகளையும் அபகரிக்கும் திட்டம் இன்று மிகக் கட்சிதமாக அதே பெரும்பான்மை இனவாதிகளால் முன்னெடுக்கப்படுகின்றது.
 
அதனால் தான் ரிசா பதியுதீன் இந்த விவாதத்திற்கு தயாராக வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
முஸ்லிம் சமுகம் பௌத்த பேரீனவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிவரும் இன்றைய நாட்களில் சில முஸ்லிம் இனவாதிகள் தங்களது சுயநலத்திற்காக கதைகளை கட்டிவிடுவதில் ஈடுபட்டுவருகிறார்கள்.
 
அஸ்ரபை போன்று ரிசாத் பதியுதீன் தன்னை காட்டிக்கொள்ளத்தான் இந்த விவாதம் என்ற தொனியில் பௌத்த இனவாதிகளைப் போன்று வாய்க்கும் மூளைக்கும் சம்மந்தமில்லாம் கதைகளை பரப்புகிறார்கள்
அஸ்ரபுக்கு ஈடாக ரிசாத் பதியுதீனை முன்னிலைப்படுத்துவதா என்பதல்ல இங்குள்ள பிரச்சினை. அன்றய காலத்தில் அஸ்ரபுக்கு இருந்த பொறுப்புணர்வு தான் இன்றைய காலத்தில் ரிசாத் பதியுதீனுக்கு ஏற்பட்டுள்ளது என்பதுதான் அதன் வெளிப்படைத் தன்மை. 
 
ஆனால் இதுவெல்லாம் உண்மை என தெரிந்திருந்தும் முஸ்லிம்களின் காணிகளை வில்பத்துக் காட்டுக்குள் இணைத்தாலும் பரவாயில்லை. இதன் மூலம் ரிசாத் பதியுதீனுக்கு முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் நற்பெயரோ அந்தஸ்தோ ஏற்பட்டு விடக்கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியின் உச்சக்கட்;டமாக வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தையும் அதற்காக அயராது உழைக்கும் ரிசாத் பதியுதீனையும் மலினப்படுத்த திட்டமிட்ட அடிப்படையில் செய்திகள் பரப்பப்படுகின்றன. இதற்காக முஸ்லிம் இனவாதிகளைக் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
 
ஆனந்த தேரருக்கும் ரிசாதுக்கும் இடையிலான விவாதம் திங்கட் கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்த மலினப்படுத்தும் முயற்சி அரங்கேற்றப்பட்டு வருகின்றது.
வடக்கு முஸ்லிம்கள் குடுவியாபாரத்தில் ஈடுபடுபவர்கள்தான் என்று ஆனந்த தேரர் நிரூபிக்க வேண்டும் என்று பிரார்த்திற்கும் அளவுக்கு அல்லாஹ்வை மறந்து இந்த விவாவதத்தை மலினப்படுத்த முயற்சி எடுக்கப்படுகின்றது.
 
ரிசாதுக்கு எதிரான – ரிசாதை அரசியலிலிருந்து ஓரம்கட்ட வேண்டும் என்று நினைக்கின்ற – முஸ்லிம்களின் தலைமைத்துவத்திலிருந்து ரிசாதை ஒழிக்க கங்கணம் கட்டிநிற்கும் புலம் பெயர்ந்த இனவாதக் கூட்டத்தின் அற்பத்தனமாக பணத்திற்கு அடிமைப்பட்டே ரிசாதுக்கு எதிராக இலங்கையில் செயற்படும் கூட்;டம் இந்த மலினப்படுத்தலை முன்னெடுப்பது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
 
வடக்கு முஸ்லிம்கள் குடுவியாபாரம் செய்கின்றார்கள் – வடக்கு முஸ்லி;ம்கள் அத்துமீறி காணி பிடிக்கின்றார்கள் என்றால் இந்த கருத்து ரிசாதையும் தாக்கும். ரிசாதுக்கு எதிராக அரசியல் செய்கின்ற வடக்கு முஸ்லிம் பிரமுகர்களையும் தாக்கும். அவர்களை வழிநடத்துகின்ற அதிகாரம் மிக்க முஸ்லிம் அரசியல் வாதிகளையும் தாக்கும். ஆனால் அவர்களோ ஆனந்த தேரரின் குற்றசாட்டுக்களுக்கு இதுவரை பதிலளிக்காமல் மௌனம் காப்பது மேற்சொன்னவாறு புலம் பெயர்ந்தோரின் பணத்திற்கு அடிமைப்பட்டுள்ளனர் என்பதை நிரூபிக்க சான்றாக அமைகின்றது. 
 
வடக்கு முஸ்லிம்கள் குடுவியாபாரத்தில் ஈடுபடவில்லை , வில்பத்துக் காட்டுக்குள் ஒரு அங்குல காணியேனும் முஸ்லிம்கள் கைப்பற்றவில்லை என்பது உண்மை என்பதை இந்த அரசும் அமைச்சரவையும் சிங்கள இன பெரும்பாண்மையினரும் ஏற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் திங்கட் கிழமை விவாதத்தில் எந்த வித ஆதாரங்களும் இன்றி சமுகளிக்கும் ஆனந்த தேரர் நிச்சயமாக தோல்வியடையத்தான் வேண்டும். இது தான் யதார்த்தமும் கூட .
 
இதனை வெளிப்படையாக உணர்ந்துள்ள மேற்சொன்ன சதிகாரக் கும்பல் ஆனந்த தேரர் தோல்வியடைவார் என்ற உண்மையை நன்கு உணர்ந்து கொண்டவர்களாக விவாதம் இடம்பெறுவதற்கு முன்பதாகவே ஆனந்த தேரர் தோல்வியடைவார் என்பதினை முன்கூட்டிய கூறி விவாத்தின் முடிவை மக்கள் மத்தியில் திசை திருப்ப முயற்சிக்கின்றனர். 
 
தீகவாபிக்காக அன்று அஸ்ரப் போராடியது போல் தான் – ரிஎன்எல் தொலைக்காட்சியில் சோமஹிமி தேரருடன் விவாதம் நடத்தியது போன்று தான் இன்று ரிசாத் பதியுதீன் மறுச்சிக்கட்டிக்காக மடித்துக் கட்டிக்கொண்டிருக்கின்றார்.
 
அஸ்ரப் அன்று தீகவாபிக்காக போராடிய போது ஒரு சிறு இனவாதக் கும்பலே அன்று காணப்பட்டது. நாட்டில் இனவாதம் என்பது கிஞ்சித்தும் இல்லாத வேளையது. மறுபக்கம் பயங்கரவாதமே தாண்டவமாடியது. ஆனால் இன்றைய நிலைமையோ பயங்கரவாதம் முற்றாக ஒழிந்து இனவாம் முஸ்லி;ம்களுக்கு எதிராக தலைவிரித்து ஆடும் காலம் இது.. 
 
பொது பலசேனா, சிங்கள ராவய, ஆனந்த தேரர் ,உதய கம்பன்வில குழு, வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிரான புலம் பெயர்ந்த இனவாதக்குழு மற்றும் முஸ்லிம்களுக்குள்ளேயே இருக்கும் கறுப்பு ஆட்டுக்குழு என பல்வேறு இனவாதக்குழுக்களுக்கு மத்தியில் தான் ரிசாத் தன்னந்தனியாக இந்த சமுகப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.
 
வடபுல முஸ்லி;ம்கள் என்பவர்கள் ரிசாத் பதயுதீனுக்கு மட்டும் எழுதிக் கொடுக்கப்பட்டவர்கள் அல்ல. முகா பிரமுகர் தான் அங்கு நீண்ட காலம் எம்பியாகவும் இருந்திருக்கின்றார். தற்போது சுதந்திரக் கட்சி உறுப்பினர் மஸ்தான் எம்பியாகியுள்ளார். இவர்கள் எல்லாம் இதுகால வரை மௌனிகளாகவே இருந்து வருகின்றனர். 
 
முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சியாக தங்களைக் கூறிக் கொள்கின்ற முகா தலைவர் இதுவரை வாயே திறக்கவில்லை. இவ்வாறானவர்களிடம் எல்லாம் சென்று ஏன் நீங்கள் மௌனியாக இருக்கின்றீர்கள்? உங்களுக்கு தைரியம் இல்லையா? என்று கேட்கும் நிலையில் தான் ரிசாதுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டும் கும்பலிடம் முஸ்லிம் சமுகம்  இன்று கேள்வி எழுப்பி நிற்கின்றது. 
 
ரிசாத் பதீயுதீன் தன்னை தேசியத் தலைவராக காட்டிக் கொள்வதற்காகத் தான் இவ்வாறு எல்லாம் செய்கிறார் என்று கூறும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் அதன் அடிவருடிகளும்  மௌனத்தை கலைந்து வடபுல முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க முன்வந்தால் ரிசாத் இவ்வாறு விவாதம் நடத்த வேண்டிய அவசியமே ஏற்படாது
 
 நீங்கள் இனவாதிகளுக்கு எதிராக குரல் எழுப்பாமல்  ரிசாதை மட்டும் இலக்கு வைக்கின்றீர்கள் என்ற கேள்வியையும் முஸ்லிம் சமுகம் எழுப்பி நிற்கின்றது.
 
பொத்துவிலில் பத்து முஸ்லிம்கள் அறுக்கப்பட்ட போது அதன் சூட்டோடு சூடாக சில தினங்கள் மாத்திரம் கொதித்தெழுந்தார் ஹக்கீம்
 
உடதலவின்னையில் பத்து முஸ்லிம் இளைஞர்களின் உயிர் பறித்தெடுக்கப்பட்டபோது அதனைகாட்டி கண்டியில் வெற்றி பெற்ற ஹக்கீம் அந்த தேர்தல் முடிவோடு அதனையும் கைவிட்டார்.
 
தர்கா டவுனில் பொதுபலசேனா கொலை கொள்ளையில் ஈபட்டதை மறுநாள் சென்று பார்iவியிட்டு அறிக்கைவிட்டதுடன் மறந்து விட்டார். 
 
அதே போன்று வடக்கு முஸ்லிம்களின் காணிகளை புலிகளின் ஆதாரவாளர்கள் அபகரிக்க முனைந்த போது அதற்கு எதிராக கிளரந்தெழுந்து முஸ்லிம்களுக்காக போராடியது மட்டுமன்றி ஆறு வழக்குககளுக்கு ரிசாத் பதியுதீன் முகம் கொடுத்துக்கொண்டிருக்க நிலையில் வெறுமனே வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருட நிறைவு விழாவை மட்டும் கொழும்பு ஏசி அறைக்குள் அனுஸ்டித்துப் போட்டு வடக்கு முஸ்லிம்களை அன்றோடு மறந்து போனார் ஹக்கீம்.
 
மேற்சொன்ன விடயங்களையெல்லாம் முகா தலைவர் ஹக்கீம் தனது தனிப்பட்ட அரசியலுக்காக பயன்படுத்தி விட்டு மறந்து போனது போன்று தான் இந்த வில்பத்து விவகாரத்தையும் அவர் கையில் எடுத்திருப்பாரென்றால் அதனையும் நடு வீதியில் வைத்து விட்டு வடக்கு முஸ்லிம்களையும் கைவிட்டுவிட்டுச் சென்றிருப்பார் என்ற எதார்த்த பூர்வமான நியாயத்தையும் இன்று முஸ்லிம் சமுகம் தெளிவாக சுட்டிக் காட்டி நிற்கின்றது.
 
ஹக்கீம் போன்று அல்லாது ரிசாத்  இந்த நிமிடம் வரை வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காக போராடி வருவதால் தான் அந்த மக்களின் காணிகள் இன்றும் வில்பத்துக் காட்டுக்குள் அகப்படாமல் தப்பிப்பிழைத்து வருகின்றது.
 
அம்பாறை மாவட்டத்தில் மயில் கட்சியில் போட்டியிட்ட உபவேந்தர் இஸ்மாயில் முகாவுக்கு போட்டியாக வந்ததை உணர்ந்து ஹக்கீம் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ததை தவிரே – முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக இதுவரை நடந்த ஏதாவது ஒரு அடாவடித் தனத்தை கண்டித்து எங்கோ ஒரு நீதிமன்றத்திலாவது ஒரு வழக்கையேனும் தாக்கல் செய்துள்ளாரா?  என்ற கேள்விக்கு மட்டும் பதில் தாருங்கள்