ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் நாளை கௌரவிக்கப்படவுள்ளார் !

  நாளை வெள்ளிக்கிழமை(25) மாலை 3 மணிக்கு நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள அம்பாரை மாவட்ட ஊட கவியலாளர் சம்மேளனத்தின் 20வது ஆண்டு நிறைவு விழாவும், ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு நிகழ்விலும் வீரகேசரி மற்றும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதேச செய்தியாளர் எஸ்.எம்.அறூஸ் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளார்.

aroos

அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் தனது ஆரம்பக் கல்வியை அட்டாளைச்சேனை அல்-முனீரா பெண்கள் உயர்பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயத்திலும், உயர் கல்வியை அக்கரைப்பற்று அஸ்ஸிறாஜ் மகாவித்தியாலயத்திலும் கற்றுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக 2002-2003ம் ஆண்டுகளில் ஆரம்பமான ஊடகத்துறை டிப்ளோமா கற்கை நெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளதுடன் இலங்கையின் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடக அமைப்புக்கள் நடத்திய பல்வேறு ஊடக செயலமர்வுகளிலும் பங்கு பற்றி சான்றிதழ்கள் பெற்றுள்ளார்.

ஊடகத்துறைக்குள் 1998ம் அண்டுகளில் பிரவேசித்த எஸ்.எம்.அறூஸ் இலங்கையின் தமிழ் செய்திப் பத்திரிகைகள் பலவற்றிலும் அட்டாளைச்சேனை நிருபராகக் கடமையாற்றுவதுடன் முன்னணி தொலைக்காட்சி அலைவரிசைகளான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி என்பவற்றின் அம்பாரை மாவட்ட செய்தியாளராகவும் பணியாற்றி வருகின்றார்.

அரசியல் மற்றும் விளையாட்டுக் கட்டுரைகளையும் எழுதி வருகின்ற இவர் இலங்கையில் தமிழ் மொழியில் விளையாட்டுக் கட்டரைகளை எழுதி வருகின்ற எழுத்தாளர்களில் இவரும் ஒருவராகத் திகழ்வதுடன் இளைமறை காயாக உள்ள விளையாட்டு வீரர்களின் திறமைகளை ஊடகங்;களில் கூடுதலாக எழுதுவதுடன் அவர்களுக்கு கொழும்பு பிராந்தியத்தில் விளையாடுவதற்குரிய வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபத்தின் தென்றல் வானொலியில் ஒளிபரப்பாகும் விளையாட்டு நிகழ்ச்சிக்கும், சக்தி எப்.எம்.வானொலிக்கும் கூடுதலான விளையாட்டு செய்திகளை எழுதியுள்ளார். விடிவெள்ளி பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டபோது அதன் விளையாட்டுப் பக்கத்திற்கு பொறுப்பாகவும் இருந்துள்ளார்.

2004ம் ஆண்டு தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தை ஆரம்பித்து அதன் மூலம் ஊடகவியலாளர்களின் நலன்களுக்காக பாடுபட்டதுடன் மூத்த ஊடகவியலாளர்கள் பலரையும் பாராட்டிக் கௌரவித்துள்ளார்.ஊடகவியலாளர்களுக்கெதிராக இடம்பெறும் தாக்குதல்கள்,அச்சுறுத்தல்கள், கொலைகள் என்பவற்றினை கண்டித்து இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள்,கூட்டங்களிலும் பங்கு கொண்டுள்ளார்.

2012ம் ஆண்டு முதல் களம் பெஸ்ட் இணையத்தளத்தை ஸ்தாபித்து நடத்தி வருவதுடன் அதன் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் செயல்படுகின்றார்.

சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் அமைச்சின் ஊடக இணைப்பாளராவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.
சிறந்த விளையாட்டு வீரரான எஸ்.எம்.அறூஸ் தேசிய விளையாட்டுப் போட்டிகள் பலவற்றிலும் கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகத்தின் தலைவராக பல வருடங்களாகக் கடமையாற்றி வருகின்ற இவர் முஸ்லிம் இளைஞர் கூட்டமைப்பின் ஸ்தாபகத் தலைவருமாவார். அட்டாளைச்சேனை புறத்தோட்டம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவராகவும் கடந்த பல வருங்களாக இருக்கின்றார்.

2007ம் ஆண்டு அம்பாரை மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட எஸ்.எம்.அறூஸ் அம்பாரை மாவட்டத்தின் தமிழ்,முஸ்லிம்,சிங்கள இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக செயற்பட்டதுடன் தேசிய இளைஞர் கழக சம்மேளனத்திலும் அங்கம் வகித்துள்ளார்.

அம்பாரை கரையோர மாவட்டத்திலுள்ள தமிழ்,முஸ்லிம் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு கரையோரக் காரியாலயம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை பலமாக முன்வைத்து முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் நடைபெற்ற தேசிய சம்மேனக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தவர்.

2007ம் ஆண்டு நடைபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கலாசாரப் பிரிவினால் நடாத்தப்பட்ட கௌரவிப்பு விழாவில் ஊடகத்துறைக்காக ஆற்றிவரும் பணிக்காக பதக்கம் மற்றும் சான்றிதழ்வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளையும் ஊடகங்களில் வெளிக்கொண்டு வந்ததுடன் அதற்கான தீர்வுகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். ஊடகத்துறையில் மக்கள் சேவகனாகவே தன்னை இனம்காட்டியுள்ள ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் எந்த சக்திகளின் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது தனது ஊடக பணியை மிக நேர்மையாக செய்து வருகின்றார்.

தற்போது அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் இங்கும் கோணாவத்தை பொது நூலகத்தின் நூலக உதவியாராகவும் கடமையாற்றி வருகின்றார்.

இவர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஆதம்பாவா சம்சுதீன், அப்துல் மஜீத் கலிமத்தும்மா தம்பதிகளின் புதல்வருமாவார்.