ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் – தொடர்பில் ஹிருணிகாவின் விளக்கம் !

 
 தெமட்டகொடை பிரதேசத்தில் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு எனது ‘டிபென்டர்’  வாகனம் பயன்படுத்தப்பட்டது உண்மை. ஆனால், அது எனது அனுமதியுடன் செய்யப்பட்ட ஒன்றல்ல என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
57907_1

 

 எது எவ்வாறிருப்பினும், பொலிஸ் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இதனுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் எனது சேவையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அறுவரை, கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில், சம்பந்தப்பட்ட டிபென்டருடன் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில் 

எனது அலுவலகத்தில் பணிபுரியும் பாதுகாப்பு தரப்பினரிடம் வந்த, அவர்களது நண்பரும் 12 மற்றும் 4 வயது பிள்ளைகள் இருவரின் தந்தையுமான ஒருவர் தனது மனைவி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

இது குறித்து அன்றைய தினமே பொலிஸில் முறைப்பாடு செய்த போதும், அதனை பெரிதாக கவனத்தில் கொள்ளாத பொலிஸார் “மனைவி சென்றால் அதை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும்..” என்பது போல கூறியதாகவும், அந்த நபர் கூறினார். 

அதன் பின்னர் அந்த நபரின் மனைவியை கடத்திச் சென்றவர் இருப்பதாக கூறப்படும் இடம் தனக்கு தெரியும் எனக் கூறிய அவருடன் எனது சேவையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள், சென்றனர், அங்கு சென்று அவருடன் பேச வேண்டும் என அழைத்த போது, அவர் வர மறுத்ததால் பலவந்தமாக அந்த நபரை அழைத்துச் செல்ல நேரிட்டுள்ளது. 

பின்னர் எனது தலையீட்டினால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் அவரது கணவருடன் அனுப்பி வைக்கப்பட்டார். இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தேன். 

எனினும், தான் தாக்கப்பட்டதாகவும் கடத்தப்பட்டதாகவும் அவர் முறைப்பாடு செய்துள்ளமை பின்னரே எனக்கு தெரியவந்தது. 

எது எவ்வாறு இருப்பினும் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண், அவரைக் கடத்தியதாக கூறப்படும் நபருடன் தனக்கு தொடர்பிருந்ததாகவும், எனினும் தனது பிள்ளைகளை எண்ணி கணவருடன் இணைய முற்பட்ட வேளை அதனை மற்றைய நபர் தடுத்ததாகவும் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். 

மேலும் தான் மீண்டும் கணவரிடம் சென்றால் கணவர் அவரைக் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும், அது குறித்து அவர் பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளார். 

இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.