ரஷ்ய அதிபர் புதினுடன் தனிமையில் சந்தித்து உரையாடிய பிரதமர் மோடி!

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் கவுரவமிக்க சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 
ab8d49ee-c321-4c00-a9c7-82e9d9a3f2d9_S_secvpf
பின்னர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் நரேந்திர மோடி தனிமையில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின் அவர் டுவிட்டரில், ரஷ்ய அதிபர் புதினுடன் இரு நாட்டு உறவுகள் குறித்து உரையாடியதாகவும், அவருடனான சந்திப்பு தித்திப்பான அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்தார். 

இந்த சந்திப்பிற்குப் பின்னர், புதின் அளிக்கும் இரவு விருந்திலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார். இன்று இரு தலைவர்களும் முறைப்படி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்த சந்திப்பில் கூடங்குளத்தில் உள்ள 5–வது, 6–வது அணு உலைகள் கட்டுவதற்கு புதினும், மோடியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர். ரஷ்யாவில் வசிக்கும் 3000 இந்தியர்கள் முன்பாகவும் மோடி உரையாற்றவுள்ளார். 

மேலும், அணுசக்தி மற்றும் பாதுகாப்பு உட்பட பல்வேறு துறைகள் தொடர்பான இரு நாடுகளுக்கிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இதனிடையே இந்த பயணத்தின் மூலம் இருநாடுகளின் உறவுகளும் மேம்படும் என்று டுவிட்டர் வலைதளத்தில் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ரஷ்ய சுற்றுப்பயணத்தை முடித்து தாயகம் திரும்பும் வழியில் 25–ந்தேதி ஆப்கானிஸ்தானுக்கு பிரதமர் மோடி செல்கிறார். 90 மில்லியன் டாலர் செலவில் இந்தியா கட்டிக் கொடுத்துள்ள பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 

கடந்த முறை மோடி ரஷ்யா சென்றிருந்தபோது 2035–ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 12 அணு மின் உலைகள் கட்டிக் கொடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.