நகர சபை செயலாளருக்கு ஜம்இய்யதுல் உலமா கடிதம் !!

 

வஹ்ததுல் வுஜூத் பிரிவினரின் நிகழ்வு இடம்பெற்றால் அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என ஜம்இய்யாவின் செயற்குழு அஞ்சி நிகழ்வினை இரத்துச் செய்யுமாறு நகர சபை செயலாளருக்கு பரிந்துரை செய்து ஜம்இய்யதுல் உலமா கடிதம் –
 
பழுலுல்லாஹ் பர்ஹான்
வஹ்ததுல் வுஜூத் பிரிவினரின் நிகழ்வு 24-12-2015 நாளை வியாழக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றால் அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என ஜம்இய்யாவின் செயற்குழு அஞ்சுவதாக காத்தான்குடி நகர சபை செயலாளருக்கு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா கடிதம் ஒன்றை உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்துள்ளது.
மேற்படி கடிதத்தில் 24-12-2015ம் திகதி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வு தொடர்பாக என தலைப்பிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாவது….
இன்று 23-12-2015ம் திகதி இடம்பெற்ற காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் அவசர நிர்வாக கூட்டத்தீர்மானத்தினை தங்களுக்கு இத்தால் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கடந்த 28-05-2015ம் திகதி கொழும்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நடாத்திய மாநாட்டில் வஹ்ததுல் வுஜூத் என்ற பிரிவினர் வழிதவரிய ஒரு சிந்தனைப் பிரிவினர் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதை தங்களுக்கு அறியத் தருகின்றோம். அந்த வகையில் மேற்குறித்த சிந்தனைக் கோட்பாட்டினைக் கொண்ட பிரிவினரால் எதிர்வரும் 24-12-2015ம் திகதி தங்களது நிர்வாகத்திற்குட்பட்ட ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் கருத்தரங்கொண்றினை நிகழ்த்தவுள்ளதாக எமக்கு எழுத்து மூலம் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
எனவே மேற்படி நிகழ்வு இடம்பெறும் பட்சத்தில் நமது பிரதேசத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என ஜம்இய்யாவின் செயற்குழு அஞ்சுகின்றது.
எனவே மேற்படி சமூக நலனைக் கருத்திற் கொண்டு குறித்த நிகழ்வு இடம்பெறாது நகர சபை செயலாளருக்கு கடிதம் ஒன்றினை அனுப்புதல் வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைவாக தாங்கள் 24-12-2015ம் திகதி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வினை இரத்துச் செய்யுமாறு இத்தால் பரிந்துரை செய்யப்படுகின்றது.
எனவே ஜம்இய்யதுல் உலமாவின் மேற்குறித்த பரிந்துரையை தாங்கள் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வீர்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்து  காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் (பலாஹி) அதன் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.ஜி.எம்.ஜெலீல் (மதனி) ஆகியோர் கையொப்பமிட்டு இந்த கடிதம் காத்தான்குடி நகர சபை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் ,இதன் பிரதி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.