ஸ்ரீ. மு.கா. தற்போது முஸ்லிம் சமூகம் வேண்டி நிற்கின்ற பௌதீக அபிவிருத்திகளிலும் கூடிய கவனம் செலுத்தி வருகிறது !

 

சப்றின்

 

மிக நீண்டகாலமாக இலங்கை முஸ்லிம்களின் அரசியலை, சமூக உரிமைகளை முன்னிலைப்படுத்தி செயற்பட்டுவந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தற்போது முஸ்லிம் சமூகம் வேண்டி நிற்கின்ற பௌதீக அபிவிருத்திகளிலும் கூடிய கவனம் செலுத்தி வருகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம்.ஹனிபா மதனி கூறினார்.

hm

அக்கரைப்பற்று புதுப்பள்ளியடி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காரியாலயத்தில் கட்சி முக்கியஸ்தர்களுடன் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில் – நல்லாட்சி அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே ‘தெயட்ட கிருள்ள’ திட்டத்தின் மூலம் அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் தொடங்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையிலிருந்த கட்டிட நிர்மாணப்பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான 41 மில்லியன் ரூபா நிதியினை கட்சியின் அமைப்பாளர், கட்சியின் அக்கரைப்பற்று ஆதரவாளர்களின் வேண்டுகோளின் பெயரில் அப்போதைய சுகாதார இராஜாங்க அமைச்சரும், செயலாளர் நாயகமுமான ஹசனலி ஒதுக்கீடு செய்திருந்தார். அதன் பின்னர் ஏற்பட்ட தடையினை அமைப்பாளர் ஹனிபா மதனி தற்போதைய சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமிடம் தொடர்பு கொண்டு முடங்கிக் கிடந்த அந்நிதியினை விடுவித்து கட்டுமானப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அக்கரைப்பற்றில் மாகாணசபையின் கீழுள்ள ஏனைய சுகாதாரத் தேவைகளை இனங்கண்டு தீர்ப்பதற்கான ஒதுக்கீடுகளை மாகாண சுகாதார, சுதேச வைத்திய சமூக சேவைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் செய்திருப்பதையிட்டும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த வகையில் நாம் வேண்டிக் கொண்டதற்கிணங்க மிக நீண்டகாலமாக அரச காரியாலயமொன்றில் தற்காலிகமாக இயங்கிவந்த மாவட்ட சமூக சேவைக் காரியாலயத்திற்கான நிரந்தரக் கட்டடம் ஒன்றை நிர்மாணிக்க மாகாண சுகாதார அமைச்சரினால் 4 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்குடியிருப்பில் அமைந்துள்ள ஆயுர்வேத மருந்து தயாரிக்கும் நிலையத்தினை மேம்படுத்துவதற்கு அவசியமாகவிருந்த பல்வேறு இயந்திரங்களையும் கொள்வனவு செய்வதற்காகவும் மாகாண சுகாதார அமைச்சினால் 0.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிக்குடியிருப்பு வைத்தியசாலையின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்து மக்களுக்கு தரமான சுகாதார சேவையினை வழங்கும் வைத்தியசாலையாக தரமுயர்த்தவும், ஆலிம்நகர் சுகாதார மத்திய நிலையத்தினை வைத்தியசாலையாக தரமுயர்த்தி அப்பிரதேச மக்கள் சுகாதாரத் தேவைகுறித்து பலகாலமாக எதிர்கொண்டுவரும் துன்பங்களை துடைக்கவும் உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் மாகாண சுகாதார அமைச்சர் எம்மிடம் வாக்குறுதியளித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுத்துவரும் மாகாண சுகாதரா அமைச்சருக்கு அக்கரைப்பற்று மக்கள் சார்பாக நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.