விக்கியின் தமிழ் மக்கள் பேரவையை வரவேற்கின்றேன் : கருணா !

 வடக்கில் புதிதாக உதயமாகியுள்ள ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற அமைப்பை வரவேற்றுள்ள முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா), அதில் தானும் இணைவது தொடர்பில் பரிசீலிக்கிறார் என்றும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பங்குபற்றலுடன் கடந்த சனியன்று ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற அமைப்பு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. 

karunaa

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும், அதன் அதிருப்தியாளர்கள் பலரும் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்றதால் இது கூட்டமைப்புக்கு எதிரான கூட்டு என விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், மேற்படி அமைப்பின் இணைத் தலைவரான வடக்கு முதல்வர் அதை நிராகரித்துள்ளார். 

எது எப்படியிருந்த போதிலும் இந்த புதிய அமைப்பு தொடர்பில் பல கோணங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

இந்நிலையில், ‘தமிழ் மக்கள் பேரவை’ தொடர்பில் கருத்து வெளியிட்டார் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளுள் ஒருவராக இருந்து அவ்வமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன். 

இது தொடர்பாக கருணா மேலும் கூறியவை வருமாறு:- 

“பல கட்சிகள் கூட்டான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்படவேண்டும் என்று பல தரப்பினராலும் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. எனினும், தலைமைப்பீடம் இதற்குப் பச்சைக்கொடி காட்டவில்லை. 

கூட்டமைப்புக்குள் ஒரு கட்சியின் எதேச்சாதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாலும், மக்களின் ஆணைக்குப் புறம்பான வகையில மத்திய அரசுடன் உறவு வைத்திருப்பதாலுமே புதியதொரு அமைப்பு உருவாகியுள்ளது. 

இந்தக் கூட்டணியை நான் வரவேற்கிறேன். புதிய அமைப்பின் உருவாக்கம் தொடர்பில் குற்றச்சாட்டை மாத்திரம் முன்வைக்கக்கூடாது. ஏன் இவ்வாறானதொரு அமைப்பு உருவாகியது, அதற்கான காரணம் என்ன என்று ஆராயப்படவேண்டும். 

புதிய கூட்டணியின் முற்போக்கான சிந்தனைகளை வரவேற்கிறேன். அதன் நோக்கம், செயற்பாடு, கொள்கை தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறோம். 

அத்துடன், கிழக்கு மாகாணத்தையும் உள்வாங்கும் வகையில் மேற்படி அமைப்பு விஸ்தரிக்கப்படவேண்டும். இதில் இணையுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டால் அது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்கப்படும் என்றார்.