சலுகைகளுக்காக மாகாண சபையின் அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசிற்கு வழங்கமுடியாது !

றியாஸ் ஆதம்

 

மாகாண சபைக்கு 13 ஆவது சரத்தில் குறிப்பிட்ட அத்தனை அதிகாரங்களையும் வழங்கப்பட வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கைவிடுத்து வரும் நாம் நமக்கு கிடைக்கும் சலுகைகளுக்காக மாகாண சபையின் அதிகாரங்களை இழந்துவிடக்கூடாது கிழக்கு மாகாண சபைகளில் இதுவரை இருந்த நிதி அதிகாரங்களை மத்திய அரசின் உள்ளுராட்சி, மாகாண சபை அமைச்சின் அதிகாரத்திற்கு சென்றுள்ளன. இந்த விடயங்களை சிறிய விடயம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம் மாகாண சபைகளின் அதிகாரங்களை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் கிராம இராச்சியங்கள் என்ற விடயங்களும் அமுல்படுத்தப்பட இருப்பதாக அறிகின்றோம். இந்த விடயங்களில் நாம் கவனமாக செயல்பட்டு மாகாண சபையின் அதிகாரங்களைப் பெற வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

uthuman

கிழக்கு மாகாண சபையின் அமர்வு தவிசாளர் திரு சந்திரதாச கலப்பதி தலைமையில் (21.12.2015) நேற்று நடைபெற்ற போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அவர்களினால் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சபையில் சமரப்பிக்கப்பட்டது.
இதன்போது கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி சார்ப்பில் விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றும் வேளையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கிழக்கு மாகாண சபைக்குச் சென்ற வருடத்தை விட 2016 ஆம் ஆண்டில் சற்று நிதி கூடுதலாக கிடைத்துவிட்டது என்று நினைத்துவிடாதீர்கள். போரினால் பாதிக்கப்பட்ட இந்த கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு இன்னும் நிதிகளைப் பெற வேண்யுள்ளது.

 
கிழக்கு மாகாண சபை இலங்கைக்கே உதாரணமான சபையென வாயளவில் வீரர்கள் போன்று பேசிவிட்டு கிழக்கு மாகாண சபையின் செயல்பாடுகளில் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. பேச்சில் மாத்திரம் நல்லாட்சி என்று சொல்லிக்கொண்டு உள்ளத்தில் பலிவாங்கும் எண்ணத்துடன் கிழக்கு மாகாண சபை நிர்வாகம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது நியாயம் தானா? என்பதனை சற்று சிந்தித்து பாருங்கள்.
கிழக்கு மாகாண அமைச்சர்கள் குறித்தொதுக்கும் நிதியில் சமத்துவம் பேணப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். சமூகங்களிடையே விரிசல்களை தவிர்த்து நல்லாட்சியை நிலை நிறுத்துவதற்கு முதற்கட்டமாக அபிவிருத்தி நிதிகளையும், அரச துறைசார்ந்தசேவை மற்றும் வேலை வாய்ப்புக்களையும் சகல சமூகங்களிடையே சமமான வகையில் நீதியான முறையில் பகிரப்பட வேண்டும்.

 
கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்பு கூறும் கடப்பாடு என்பதனை உறுதி செய்வதுடன் அபிவிருத்தி பணிகளில் மாவட்ட மட்டங்களில் சமநிலை பேணப்பட வேண்டும்.
கிழக்கு மாகாணம் தனியொரு இனத்தையோ, மாவட்டத்தினையோ தன்னகத்தை கொண்ட மாகாணமல்ல 3 மாவட்டங்களையும் தமிழ், முஸ்லிம், சிங்களவர் என மூவின மக்கள் வாழும் மாகாணமாகும். இந்த வருடம் அமைச்சுக்கள் மூலமாகவும் விஷேட பிராந்திய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளில் சமநிலைப் பேணப்படாததால் இனங்களுக்கிடையில் கசப்புணர்வு ஏற்பட்டது. அமெரிக்கா அரசாங்க நிதியினால் மேற்கொள்ளப்பட்ட பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் ஒரு சிங்களப் பிரதேச பாடசாலைக் கூட உள்ளடக்கப்படவில்லையென மாகாண சிங்கள அரசியல் தலைவர்களும், தமிழ் பாடசாலைகள் உள்வாங்கப்படவில்லையென தமிழ் அரசியல் தலைவர்களும் பகிரங்கமாகவே கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்கின்ற நிலைமை உருவாகியுள்ளது.

 

கிழக்கு மாகாண கல்வி அமைச்சராகவிருந்து கடந்த ஆறரை வருடங்கள் மூவின மக்களுக்கும் கல்வி, காணி விடயங்களில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட திரு.விமலவீர திஸாநாயக்க அவர்களின் சிபாரிசில் நீயுகுண கிராமத்தில் பால் குளிரூட்டும் தொழிற்சாலை அமைப்பதற்காக சமமான அபிவிருத்தி திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டன. அவரின் அமைச்சுப் பதவியையும் இல்லாமல் செய்துவிட்டு சிங்கள மக்களின் கிராமமான நீயுகுண கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளீர்கள், வாங்காமம் கிராமமும் இத்திட்டத்தில் நீக்கப்பட்டு வேறு கிராமத்திற்கு நிதி மாற்றப்பட்டது. இந்த தவறான நடவடிக்கைகள் பற்றி கிழக்கு மாகாண அதிகாரிகளுக்கு நன்கு விபரங்கள் தெரியும்.

 
எனவே, அழகான சிறப்பான உடைகளை அணிந்து இச் சபைக்கு வந்து இலங்கையில் இல்லாத தேசிய அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் இயங்குகிறதென பேச்சளவில் கூறுவது நன்றாகத் தான் தெரியும். உங்களின் செயற்பாடுகளில் தேசிய அரசாங்கம் என்ற உணர்வை காட்டுங்கள். சிலர் அரசியல் அதிகாரங்கள் நிரந்தரமானவையென நினைத்து செயல்படுகின்றனர்;. நமது நாட்டில் உயர்ந்த அதிகாரத்தில் இருந்து கொடிய யுத்தத்தை இல்லாமல் செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 07 மணித்தியாலங்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டு விசாரணையெதுமின்றி வந்துள்ளார். இந்த நிகழ்வுகளை நாம் பார்க்கும் போது அரசியல் அதிகாரங்கள் மாறக்கூடியது என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் நாங்கள் அறிந்துள்ளோம். நமது நாட்டில் இருந்த நிறைவேற்று அதிகாரத்தை சிறுபான்மை மக்களின் ஒத்துழைப்புடன் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. புதிய அரசியல் அமைப்பு, புதிய தேர்தல் முறைகளில் சிறுபான்மை மக்களுக்கு என்ன நடக்கப் போகின்றது என்பது தொடர்பாக இதுவரை எதுவும் புரியாத நிலைமை தொடர்கிறது. புதிய அரசியல் அமைப்பு குறித்து பேசப்படாமல் தமிழ் பேசும் சமூகங்களிடம் இது குறித்து இதுவரை பேசப்பட்டதாக தெரியவில்லை.

 
எனவே, சிறுபான்மை மக்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும். கிழக்கு மாகாண சபை முற்று முழுதாக மத்திய அரசாங்கத்தின் நிதியில் தங்கி இருக்காமல் நமது மாகாண நிதியினை அதிகரிக்க பல வழிகளிலும் முயற்சிகள் செய்யப்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.