புதிய முறையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்த பிரதான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு !

 புதிய முறையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்த 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
election

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தை அவசரமாக திருத்தி அதன் அடிப்படையில் தேர்தலை நடாத்த பத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. 

ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கடந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள தேர்தல் முறைமை மாற்றத்தை எதிர்த்துள்ளன. 

இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முறைமை ஒரு அரசியல் கட்சிக்கு நன்மை ஏற்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

சின்ன சின்ன பிழைகளை திருத்திக் கொள்வதனால் ஒட்டுமொத்த பிழைகளையும் திருத்திக் கொள்ள முடியாது என எதிர்ப்பை வெளியிட்டு வரும் கட்சியொன்றின் பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளார். 

ஒட்டுமொத்த முறைமையையும் மீள் பரிசீலனை செய்து சரியான ஓர் தேர்தல் முறைமையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

எனவே பழைய முறையில் தேர்தலை நடாத்தி அவசரமில்லாது திருத்தங்களை மேற்கொண்டு எதிர்வரும் காலங்களில் புதிய முறைமையை அறிமுகம் செய்ய முடியும். 

இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து தெளிவுபடுத்த உள்ளதாக குறித்த கட்சியின் பிரதிநிதி கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.