மக்களின் வயிறு காய்கின்றது , அவற்றை அரசு கவனத்தில் கொள்ளவில்லை : மஹிந்த !

 
 

 தேசிய பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு வடக்கிலும் கிழக்கிலும் என்ன நடக்கின்றது? சர்வதேசத்தையும் புலம்பெயர் புலிகளையும் திருப்திப்படுத்தும் நோக்கில் மீண்டும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவே அரசு முயற்சிக்கின்றது. இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். 

Mahinda-Rajapaksa_2806986b

அரசை எதிர்த்து மக்களை இணைத்துக்கொண்டு போராட வேண்டிய காலம் வந்துவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டார். 

மஹிந்த ஆதரவு அணியினரின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

எமது ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு அபிவிருத்தி செயற்பாட்டையும் இந்த அரசு முன்னெடுக்கவில்லை. மக்களின் வயிறு காய்கின்றது. அவற்றை அரசு கவனத்தில் கொள்ளவில்லை. 

இந்த அரசு எமது நாட்டு மக்களை பற்றி சிந்திக்காது புலம்பெயர் புலிகளின் தேவையை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது பற்றி சிந்தித்து வருகின்றது. 

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதுடன் வடக்கில், கிழக்கில் பாதுகாப்பு பகுதிகளை நீக்கி இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றுகின்றனர். 

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அதன் மூலமாக மீண்டும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். 

நாட்டு எதிரான இந்தச் செயற்பாடுகளைக் கண்டிக்கவோ நாடாளுமன்றத்தில் எதிர்த்துப் பேசவோ பலமான எதிர்க்கட்சி கூட இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.