சீனாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு காற்று மாசுபாடு அதிகரித்துள்ள காரணத்தால் அங்கு அண்மையில் இரண்டாவது முறையாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. இதையடுத்து 2,100 தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
காற்று மாசுபாடு காரணமாக 3-வது நாளாக காற்றில் நச்சு கலந்து பனிப்புகை நிலவுகிறது. கடந்த சனிக்கிழமை முதல் இந்த சூழ்நிலையை சமாளிக்க தலைநகர் பெய்ஜிங்கில் இரண்டாவது முறையாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 2,100 தொழிற்சாலைகளில் நடைபெறும் உற்பத்தியை குறைக்கவும், சில தொழிற்சாலைகளில் முற்றிலுமாக நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சீனாவின் கிழக்கு மற்றும் மத்திய சீனாவின் பீஜிங் உட்பட 33 நகரங்களில் பனிப்புகை சூழ்ந்துள்ளது. இதை 30 சதவீதம் வரை குறைப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாக நகரின் சுற்றுச் சூழல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெய்ஜிங்கில் கடந்த 7-ம் தேதி முதல் முறையாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.