நாட்டுக்கு வெளியே விடுமுறையில் செல்ல சம்பளமற்ற விடுமுறையை தாமதமின்றி உரிய காலத்தில் வழங்க வேண்டும் !

றியாஸ் இஸ்மாயில், அபு அலா 

 புனித ஹஜ் மற்றும் உம்றா யாத்திரைகளுக்காக நாட்டுக்கு வெளியே விடுமுறையில் செல்ல சம்பளமற்ற விடுமுறையை தாமதமின்றி உரிய காலத்தில் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் துரிதமாக செயற்பட்டு காலதாமதம் ஏற்படாதவாறு குறிப்பிட்ட உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற விடுமுறைகளை வழங்குவதற்கு அதிகாரிகள் செயற்படவேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.எல்.தவம் இன்று (21) தெரிவித்தார்.

11141169_1632200283659648_1072022279289667098_n_Fotor

கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்டத்துக்கான மாகாண சபை அமர்வு இன்று திங்கட்கிழமை காலை (21) தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் கிழக்கு மாகாண ஆளுணர் செயலகம், பேரவைச் செயலகம், பொதுச்சேவை ஆணைக்குழு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு ஆளும்கட்சி சார்பாக உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

இலங்கையிலுள்ள 8 மாகாணங்களில் சம்பளமற்ற விடுமுறை பெறுவதற்கு எந்தவிதமான தடைகளுமின்றி அரச உத்தியோகத்தர்கள் குறுகிய காலத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து காலதாமின்ற இலகுவாக பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் கிழக்கு மாகாண சபை அதிகாரத்துக்குட்பட்ட அரச நிறுவனங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறான நிலை இல்லை.

விண்ணப்பங்களை சமர்ப்பித்தும் உரிய காலத்தில் சம்பளமற்ற விடுமுறை கிடைக்கப்பெறுவதில்லை. அரச உத்தியோகத்தர்களின் நலன்கருதி மார்க்க கடமைக்காக விண்ணப்பிக்கின்ற உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சம்பளமற்ற விடுமுறை பெறுவதற்கான அனுமதிக் கடிதங்களை ஆளுணர் செயலகம் எதிர்வரும் காலங்களில் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

அத்துடன் அரச சேவையில் இருக்கும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாட்டுக்கு வெளியே செல்லும்போது சம்பளமற்ற விடுமுறையை அனுமதிக்கவேண்டும். இது அவ்வாறில்லாமல் தாபன விதிக்கோவைக்கு முரணாக விடுமுறை கோரப்படும் நாட்களின் அளவு, சேமித்த பிணி விடுமுறை கோரும் நாட்டில் இருக்கும் எங்களுக்கு அதிலும் விசேடமாக வேறெந்த மாகாணத்திலும் இல்லாத விதிகளை கிழக்கு மாகாண சபை விதித்துள்ளது.  

இதனால், போதிய சேமித்த பிணி விடுமுறை இல்லாத கிழக்கு மாகாணப் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் தமக்கு விதியான ஹஜ், உம்றா கடமையை சம்பளமற்ற விடுமுறையில் நாட்டுக்கு வெளியே சென்று நிறைவேற்ற முடியாத நிலைமையில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அவ்வாறு போதிய பிணி விடுமுறையின்றிச் செல்பவர்கள் பதவியிலிருந்து பணி நீக்கம் செய்யப்படும் அபாய நிலைமைக்கும் ஆளாகியும் வருகின்றனர்.

மேலும் தாபன விதிக் கோவையின் அத்தியாயம் 23:1 மற்றும் 23:2 உப விதிகளுக்கு முற்றிலும் முரணாக இந்த விதிகள் அமைந்து காணப்படுகின்றன. இந்த சுற்றுநிருபத்தை நல்லாட்சி அரசு தொடர விடாமல் இதற்கான நல்ல தீர்வினை தர முன்வரவேண்டும். அத்துடன், தாபன விதிக்கோவையிலுள்ள குறித்த உபவிதிகள் முழுமையாக அமுல்படுத்தப்படல் வேண்டும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படவேண்டும்.

வெளிநாடுகளில் சம்பளமற்ற விடுமுறையில் கல்வி பயிலும் மற்றும் தொழில் வாய்ப்புக்களை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மீண்டும் தொடர்ச்சியாக சம்பளமற்ற விடுமுறையை பெறுவதற்கு குறிப்பிட்டவர்கள் வெளிநாடுகிளில் இருந்து விண்ணப்பங்களை அங்கிருந்து அனுப்பியபோதும் அவர்களுக்கான அனுமதி விரைவாக கிடைப்பதில்லை. அலுவலகங்களிலேயே இந்த விண்ணப்பங்கள் தேங்கிக்கிடக்கின்றன. இதனால் குறிப்பிட்டவர்கள் நாட்டுக்கு சமூகமளித்து தங்களின் கடமைகளுக்கு செல்கின்றபோது சம்பளமற்ற விடுமுறைக்கான அனுமதி இல்லை என அதிகாரிகள் குறிப்பிட்ட உத்தியோகத்தர்களுக்கு தெரிவித்துவிடுகின்றனர்.

அதனால் தொழில் இழக்கவேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு உத்தியோகத்தர்கள் தள்ளப்படுகின்றனர். இந்த நடவடிக்கைகள் உடனடியாக திருத்தம் செய்யப்படவேண்டும் என்றார்.