ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆள்சேர்க்கும் சிறந்த ஏஜெண்ட்டாக மாறிவிட்டார், டொனால்ட் டிரம்ப்: ஹிலாரி கிளிண்டன் நெத்தியடி

images
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் கடந்த இரண்டாம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த ஒரு முஸ்லிம் தம்பதியர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டதையடுத்து அங்கு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த வெறுப்புணர்வுக்கு தூபமிடுவதுபோல், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ‘இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது’ என வெளியிட்ட விஷக்கருத்து, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களிடையே அமெரிக்காவின் மீதும், கிறிஸ்துவ மதத்தின்மீதும் அதிருப்தியையும், பகையையும் சம்பாதித்து தந்துள்ளது. 

இந்நிலையில், இஸ்லாமியர்கள் அனைவரையும் அபாயகரமானவர்களாக சித்தரிக்கும் டொனால்ட் டிரம்ப்பின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் நோக்கில் ஆதரவு திரட்டிவரும் ஹிலாரி கிளிண்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, வாஷிங்டன் நகரில் நடைபெற்ற தனது ஆதரவு திரட்டும் நிகழ்ச்சியின்போது ஹிலாரி கிளிண்டன் பேசியதாவது:-

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆள்சேர்க்கும் சிறந்த ஏஜெண்ட்டாக டொனால்ட் டிரம்ப் மாறிவிட்டார். இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள்மீது அவர் வெறுப்பை கக்கும் பேச்சுக்களை மக்களிடம் காட்டி, தங்களுக்கு ஆதரவாக ஆள்திரட்ட ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில்தான் அவரது பேச்சுக்கள் உள்ளன.

இதைப்போன்ற துவேஷத்தையும், அச்சத்தையும் வெளிப்படுத்துவது என்பது ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் நிலைப்பாடு அல்ல. 

டொனால்ட் டிரம்ப் போன்ற குடியரசு கட்சியினரின் இத்தகைய நிலைப்பாடும், வெளிப்பாடும் குறித்து நான் மிகுந்த கவலை கொண்டுள்ளேன். இதைப்போன்ற கருத்துகள், உலக நாகரிகங்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது போலவும், மேற்கத்திய நாடுகள் இஸ்லாமுக்கு எதிராக போர்தொடுக்க தாயாராகி, திட்டமிட்டு வருவதாகவும் அர்த்தம்கொள்ளும் வகையில் அமைந்துவிடும். மதமோதல் என்ற தீப்பொறியை விசிறியால்வீசி, மிகப்பெரிய தீப்பிழம்பாக மாற்றும் முயற்சியாக இதைப்போன்ற கருத்துகள் அமைந்துவிடும்.

ஆவேசப்பட வைக்கும் வகையிலும், எரிச்சலடைய வைக்கும் வகையிலும் பேசி, மிக சிரமமான கேள்விகளுக்கு எளிதான விடைகள் இருப்பதைப்போல் மக்களை நினைக்க வைப்பதில் டொனால்ட் டிரம்ப் வல்லவர். ஆனால், பிரச்சனைகளை கையாளும் முறை இதுவல்ல. நாம் சந்தித்துவரும் அச்சுறுத்தல்களை ஒருமைப்பாட்டுடன் இணைந்து எதிர்கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் சந்தேகப்படும்படியாக ஏதுமிருந்தால் அதைப்பற்றி பிறருக்கு தெரிவிக்கும் வகையில் நாம் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.

அவர்களின் உதவி நமக்கு தேவைப்படும் முக்கியமான தருணத்தில் அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்களை ஓரம்கட்டி, ஒதுக்கிவைப்படுவதாக அவர்கள் நினைக்காமல் இருப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும். 

அமெரிக்க இஸ்லாமிய சமுதாயத்தினருடன் நாம் மேலும் இணக்கமாக இருந்து தீவிரவாதத்துக்கு எதிராக உழைக்க வேண்டும். அமெரிக்கர்களான சில இஸ்லாமிய குழுவினரை கடந்தவாரம் நான் சந்தித்தபோது, மதபிரிவினைவாதத்தை தடுக்க தாங்கள் செய்துவரும் முயற்சிகளை அவர்கள் எடுத்து கூறினர். அவர்கள் நமக்கு ஆரம்பகால எச்சரிக்கை மணியாக இருப்பார்கள். அதனால்தான், குடியரசு கட்சியினரைபோல் அவர்களை பிசாசாக சித்தரித்து ஒதுக்கி வைக்காமல் அவர்களுடன் சேர்ந்து உழைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். 

இவ்வாறு அவர் பேசினார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி கிளிண்டன், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.