இந்தோனேசியாவில் 180 பேருடன் பயணம் செய்த சொகுசு கப்பல் கடலில் மூழ்கியது!

இந்தோனேசியாவில் 180 பேருடன் பயணம் செய்த சொகுசு கப்பல் கடலில் மூழ்கியது.

இந்தோனேசியாவில் சுலாவேசி தீவில் கொலாகா என்ற இடத்தில் இருந்து ஒரு பயணிகள் சொகுசு கப்பல் புறப்பட்டு சென்றது. அதில் 180 பேர் பயணம் செய்தனர். சிவா துறைமுகத்துக்கு புறப்பட்டு சென்ற அக்கப்பல் மூழ்க தொடங்கியது.

அது குறித்து கப்பல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே 6 மீட்பு படகுகள் வரவழைக்கப்பட்டன. ஆனால் கடுமையான காற்று காரணமாக கடலில் அலைகளின் வேகம் அதிகமாக இருப்பதால் மூழ்கும் படகு அருகே செல்ல முடியவில்லை.

எனவே, மீட்பு பணியில் பெரிய கப்பல்கள் மற்றும் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்பு விமானங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவை மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இருந்தும் தட்பவெப்ப நிலை மோசமாக இருப்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கப்பலில் பயணம் செய்யும் 180 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை.

கடலில் மோசமான தட்ப வெப்பநிலை காரணமாக கடுமையாக வீசும் காற்றினால் கப்பல் கருவி உடைந்து நொறுங்கியது. அதுவே கப்பலில் பழுது ஏற்பட்டு மூழ்க காரணம் என தெரிய வந்துள்ளது.

இந்தோனேசியாவில் 17 ஆயிரம் தீவுக் கூட்டங்கள் உள்ளன. அவற்றில் சிறிய கப்பல்கள் மற்றும் படகுகள் மூலம் பயண போக்குவரத்து நடக்கிறது. ஆனால் அவற்றில் பாதுகாப்பான பயணம் நடைபெறுவதில்லை. இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது.