அரசாங்கத்தின் எதிர்கால வருமான இலக்கு தெளிவில்லை எனவும் வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகையை ஈடு செய்வது இலங்கைக்கு சிரமமான காரியமாக இருக்கும் எனவும் சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒரே தடவையில் கிடைக்கும் வருமானம் இல்லாமல் போயுள்ளதால், 2016ம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் குறிப்பிடத்தக்களவுக்கு குறையும் ஆபத்து இருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
67 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில், இலங்கை தனது வரி அறவீடு மற்றும் நிதியை கையாள்வது சம்பந்தமாக உரிய மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும் எனவும் மேலும் வரிச் சலுகைகளை வழங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் வரி அடிப்படையை அதிகரித்து கொள்ளவும் வரி நிர்வாகத்தை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலேயே இதற்கான அடிப்படை நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.