நாட்டில் முதலாளித்துவம் ஒழிக்கப்பட்டது : நீதி அமைச்சர் !

vijayathasa

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை தியாகம் செய்வதாக ஜனாதிபதி அறிவித்தமையானது முதலாளித்துவம் ஒழிக்கப்பட்டமைக்கு நிகரானது என நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சரினதோ அல்லது பிரதமரினதோட அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நிறைவேற்று அதிகாரத்தை தியாகம் செய்ய ஜனாதிபதி முன்வந்ததமையூடாக முதலாளித்துவம் ஒழிக்கப்பட்டதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் நாட்டில் சுயாதீன குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள அதேவேளை நீதிமன்றம், அரசசேவை மற்றும் பொலிஸ் துறை ஆகியன சுயாதீனமாக செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அப்பலோ மற்றும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்கள் அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் இலாபத்துடன் செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி கூறிய கருத்தினை நீதி அமைச்சர் இதன் போது சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அந்த வகையில் இந்த கருத்தினை தாம் வரவேற்பதாகவும், மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்ட அவர், கடந்த ஆண்டு கோப் குழு முன்வைத்த அறிக்கையை அடிப்படையாக கொண்டே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

எனினும் கடந்த காலத்தில் கோப் குழுவின் முன்மொழிவுகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்திய போதும் ஒரு முன்மொழிவு கூட நிறைவேற்றப்படவில்லை என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வரவு செலவுத் திட்டம் மிகவும் பலவீனமானது என  முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.