இதன்போது, பட்ஜட்டுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகள் வாக்களிக்கவுள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பட்ஜட்டுக்கு சார்பாக வாக்களிக்கவுள்ளது.
ஜே.வி.பி. பட்ஜட்டுக்கு எதிராக வாக்களிக்கவுள்ளது. அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள – பொது எதிரணி உறுப்பினர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் மஹிந்த ஆதரவு அணி உறுப்பினர்களும் எதிராக வாக்களிக்கவுள்ளனர்.
குறிப்பாக மஹிந்த ஆதரவு அணி உறுப்பினர்கள் சிலர் மைத்திரி பக்கம் சாயும் நோக்கில் பட்ஜட்டை ஆதரிக்கக்கூடும் என்று அறியமுடிகின்றது.
நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.
சபாநாயகர் அறிவிப்பு,பொதுமனுத் தாக்கல் வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆகியன முடிவந்த பின்னர், 10 மணியளவில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சுமீதான குழுநிலை விவாதம் ஆரம்பமாகும்.
12.30 மணியளவில் அது முடிவடைந்த பின்னர், நிதி அமைச்சு மீதான குழுநிலை விவாதம் மாலை 5 மணிவரை இடம்பெறும்.
இவ்விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க, வரவு – செலவுத் திட்டத்தில் எவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், அதனால் ஏற்பட்டுள்ள மேலதிக செலவீனங்கள் எவ்வாறு ஈடுசெய்ய்பபடும் என்றும் விவரிக்கவுள்ளார்.
அவரின் உரையின் பின்னர் பட்ஜட்டின் மூன்றாம்வாசிப்புமீதான வாக்கெடுப்பு பெயர்கூவி நடத்தப்படும். பட்ஜட் நிறைவேறிய பின்னர் கட்சித் தலைவர்களுக்கு உரையாற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்படும்.
பட்ஜட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 2ம் திகதி நடைபெற்றது. இதற்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அந்தவகையில் இரண்டாம் வாசிப்பு 107 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. எனவே, மூன்றாம் வாசிப்பும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் இன்று நிறைவேறும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.