ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட அதிசொகுசு வாகனங்கள் வரி அறவீடின்றி துறைமுகத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கின்றது.
எனினும் குறித்த செய்தி தவறானது என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
குறித்த வாகனங்கள் கடந்த அக்டோபர் மாதத்துக்கு முன்னதாக இறக்குமதி செயற்பட்டவையாகும்.
அப்போது அதனைத்தடுத்து வைத்த நாம் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரியின் பிரகாரம் 35வீத வரியை வாகனங்களுக்கு விதித்திருந்தோம்.எனினும் இதனை விடக் குறைந்த விலையில் குறித்த வாகனங்களை இறக்குமதி செய்யமுடியும் என்றும், அதன் காரணமாக வரி விதிப்பு தவறானது என்றும் முறைப்பாடு ஒன்று வந்திருந்தது.
இதனை ஆராய்ந்த நாம் ஐந்து வீத வரியைமட்டும் செலுத்தி வாகனங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறு இணக்கப்பாடு ஒன்றுக்கு வந்துள்ளோம். இதனையே ஊடகங்கள் வரி மோசடி என்று தவறாக சித்தரிக்கின்றன.
ஆனால் கடந்த 2014ம் ஆண்டு தொடக்கம் வாகன இறக்குமதி தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள வரிகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தால் ராஜபக்ஷவினரின் ஆட்சியில் எவ்வளவு வரி மோசடிகள் நடைபெற்றுள்ளது என்று தெரியவரும். அதுதொடர்பான விபரக்கோவை ஒன்றைத் தயாரிக்கமாறு சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
அதன்பின்பு உண்மை நிலை தெரிய வரும் என்றும் ரவி கருணாநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.