யாழ்ப்பாணத்தில் கடந்த 11ம் திகதியிலிருந்து 16ம் திகதி வரை நடைபெற்ற காணாமல்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வில் சாட்சியமளிப்பதற்காகச் சென்ற காணாமல்போனோரின் உறவினர்கள் பலர், இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் போன்ற இடங்களுக்கு இராணுவத்தினர் வந்தபோது தங்களது உறவுகள் இராணுவத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களிடம் சரணடைந்தனர் என்றும், தற்போது அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியாத நிலையில் தாம் உள்ளோம் என்றும் கதறியழுதவாறு சாட்சியங்களைப் பதிவுசெய்திருந்தனர்.
அத்தோடு, 2006, 2007, 2008ம் ஆண்டுகளில் தங்களது கண் முன்னால் உறவுகள் யாழ்ப்பாணத்தில் வைத்து இராணுவத்தால் கடத்திச் செல்லப்பட்டனர் என்றும், பின்னர் இராணுவத்தினர் அதை மறுத்தனர் என்றும் காணாமல்போனோரின் உறவினர்கள் சிலர் தங்களது சாட்சியங்களைப் பதிவுசெய்திருந்தனர்.
இராணுவத்தால் கடத்தப்பட்ட, இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகளை எங்கு தேடுவது எனவும் அவர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை ஜனாதிபதி ஆணைக்குழு தேடிக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
காணாமல்போனோரின் உறவினர்களின் இந்தச் சாட்சியமளிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே ஆணைக்குழுவின் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இராணுவம்தான் கடத்தியது என்றும், இறுதிப் போரில் இராணுவத்திடம்தான் சரணடைந்தார்கள் என்றும் காணாமல்போனோரின் உறவினர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளார்கள். தாங்கள் கண்ணால் கண்டதாகவும் அவர்கள் கூறியுள்ளார்கள்.
அப்படி அவர்களின் உறவுகளை இராணுவம்தான் கடத்தியது என்றால், இராணுவத்திடம்தான் தமது உறவுகளை ஒப்படைத்திருந்தால் அதற்கு இராணுவமே முழுப் பொறுப்பு. இராணுவத்தினர்தான் பொறுப்புக் கூறவேண்டும்.
குறித்த போர்க் காலப்பகுதியில் நீங்கள் கூறும் இடங்களில் பொறுப்பாகக் கடமையாற்றிய இராணுவத்தினர் விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள்.
அத்தோடு, சிலவேளைகளில் அந்த நேரம் அங்கு கடமையாற்றிய இராணுவத்தினர் ஓய்வுபெற்றுச் சென்றிருப்பார்கள். அப்படி ஓய்வுபெற்றுச் சென்றிருந்தாலும் அவர்களும் விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள் என்றார் மக்ஸ்வெல் பரணகம.