அச்சுறுத்தல்கள் தொடருமா…!!

mahinda and gotabaya 

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸவின் ஆட்சி யுத்தத்திற்கு முன்பு,யுத்தத்திற்கு பின்பு என்ற இரு பகுதிகளாக பிரித்து நோக்கப்படுகிறது.யுத்தத்திற்கு முன்பு மிகவும் சீரிய விதத்தில் காணப்பட்ட மஹிந்தவின் ஆட்சி யுத்தத்திற்கு பிறகு அப்படியே தலை கீழாய் மாற்றப்பட்டது.யுத்தத்தை வெற்றி கொண்டதன் காரணமாக சிங்கள மக்களின் ஏகோபித்த தெரிவாக மஹிந்த ராஜ பக்ஸ மிளிர்ந்தார்.2005ம் ஆண்டு மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் ஜனாதிபதிப் பதவியைத் தவற விட்ட ஐ.தே.க மிகக் குறுகிய காலத்தில் அதன் அத்தனை தளங்களையும் இழந்தது.இதன் பின்பு இலங்கையின் ஜனநாயகம் கேள்விக்குட்படுத்தப்பட்டது.கொலை,கொள்ளை,கப்பம்,ஆட் கடத்தல்,போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டன.சாதாரண மகனும் அச்சம் கொள்ளும் அளவு மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசின் போக்கு காணப்பட்டது.

ஒரு நாட்டின் முக்கிய துறையாக கருதப்படும் நீதித் துறையில் அரசியற் தலையீடுகள் மிகைத்திருந்தன.இலங்கையின் 43வது நீதியரசராக நியமிக்கப்பட்ட ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் குற்றப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு பதவி நீக்கப்பட்டிருந்தார்.அந் நேரத்தில் நாடாளுமன்றத் தெரிவுக் குழு மூலம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை செல்லாது என இலங்கை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.இதனையெல்லாம் மீறியே அவரின் பதவி பறிக்கப்பட்டிருந்தது.இதன் போது நாட்டின் பாராளுமன்றத்திற்கும் நீதித் துறைக்குமிடையில் முரண்பாடு தோற்றுவிக்கப்பட்டிருந்தது.இதன் பிறகு ஆட்சியமைத்த மைத்திரி அணியினர் மீண்டும் ஷிராணி பண்டார நாயக்கவை குறித்த பதவியில் அமர்த்தி அவரை கண்ணியமிக்க முறையில் ஓய்வு பெறச் செய்திருந்தார்கள்.மேலும்,சுயாதீன ஆணைக்குழுவை நிறுவி நீதித் துறை கட்டமைப்பின் சீரிய பயணித்திற்கு பலமிக்க முட்டும் வழங்கியுள்ளர்கள்.

thajudeen

இதைப் போன்றே இலங்கையில் மூன்று தசாப்தங்களாய் தொடர்ந்திருந்த யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதில் அளப் பரிய பங்காற்றிய சரத் பொன்சேகாவிற்கு எதிராக யுத்தக் குற்றச் சாட்டுகளை முன் வைத்து அவரது ஜெனரல் பதவி பறிக்கப்பட்டதோடு சிறையிலும் தள்ளப்பட்டார்.மஹிந்தவின் வீழ்ச்சியில் உதித்த நல்லாட்சியில் அவருக்கு பீல்ட் மார்சல் என்ற உயரிய அந்தஸ்து வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தார். மஹிந்த ஆட்சிக் காலத்தில் ஊடகங்கள் மீதான அரசியற் தலையீடுகள் அதிகம் காணப்பட்டன.ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்.ஊடக சுதந்திரம் பறிக்கப்படிருந்தது.அதிகமான ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.இன்று தகவல் அறியும் சட்ட மூலத்தை நிறைவேற்ற அரசு கரிசனை கொள்வதன் மூலம் இன்று ஊடகத் துறை சாதாரண மகனின் கைகளில் தவழும் நிலைக்கு வந்துள்ளது.கொலை,கொள்ளை,கப்பம்,ஆள் கடத்தல்,போதைப் பொருள் கடத்தல் போன்றவை ஓய்ந்து விட்டது போன்றே இலங்கை நாடு காட்சி தருகிறது.இவைகளோடு சம்பந்தப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் விசாரிக்கப்பட்டும் வருகின்றனர்.

மஹிந்த ராஜ பக்ஸ பிற நாடுகளுடன் கடைப்பிடித்த அரசியற் கொள்கை,யுத்தத்திற்கு பிறகு மஹிந்த அரசு தமிழ் மக்கள் விடயத்தில் நடந்து கொண்ட விதம் போன்றன சர்வதேசத்தின் முன்னிலையில் இலங்கையை இக்கட்டானதொரு நிலைக்குத் தள்ளி இருந்தது.மைத்திரி அரசு எதிர் கொண்ட முதலாவது ஜெனீவா அறிக்கையில் இலங்கை மீது சர்வதேசத்தின் அழுத்தங்கள் பெருமளவு குறைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.சர்வதிகாரத்திற்கு வித்திடும் நிறைவேற்று அதிகாரத்தின் சொந்தக் காறரான ஜே.ஆர் ஜெயவர்த்தனவைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இலங்கை ஜனாதிபதிகள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்போம் என்ற வாக்குறுதிகளுடனே ஆட்சிக்கு வந்தனர்.மஹிந்த ராஜ பக்ஸ 17ம் சீர்திருத்தத்தை ஒழித்து 18ம் சீர் திருத்தத்தை நிறைவேற்றியதனூடாக தனது சர்வதிகாரப் போக்கை மேலும் வலுப்படுத்தினார்.மஹிந்தவின் இச் செயல் இலங்கையின் ஜனநாயகத்தை மேலும் சவாலுக்குட்படுத்தியது.மைத்திரி அணியினர்  19ம் சீர் திருத்தத்தை அதீத பெரும் பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம் இதனை வலுவிழக்கச் செய்திருந்தனர்.அதாவது மேலுள்ள பல விடயங்கள் மஹிந்தவின் மூலம் சவாலுக்குட்படுத்தப்பட்ட இலங்கையின் ஜனநாயகம் மைத்திரி அணியினர் மூலம் நிவர்த்திக்கப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டுகிறது.ஆனால்,மஹிந்தவின் இரண்டாம் ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு நொடியும் அச்சத்துடன் தங்கள் வாழ்வைக் கழித்த முஸ்லிம்கள் விடயத்தில் இவ் நல்லாட்சி எந்தளவு கரிசனை கொண்டுள்ளது?

யுத்த காலத்தில் காணாமல் போன தமிழ் மக்களைக் கண்டு பிடிப்பதில் அரசு தீவிரமாக செயற்படுகிறது.யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மாத்திரம் காணாமல் போகவில்லை.முஸ்லிம்கள் பலரும் காணாமல் போய் இருந்தனர்.யுத்த காலத்தில் எத்தனயோ முஸ்லிம் பெரும் புள்ளிகள் கொல்லப்பட்டிருந்தனர்.மஹிந்த அரசில் அமைச்சராக இருந்த அன்வர் இஸ்மாயிலின் மர்மம் இன்றும் துலங்கப்படாத ஒன்றாகவே உள்ளது.சந்திரிக்கா ஆட்சிக் காலத்தில் உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்ட மு.காவின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபின் மரணமும் அவ்வாறே பல கேள்விகளுடன் இன்றும் முற்றுப் பெறாது தொக்கி நிற்கின்றது.யுத்தத்தின் காரணமாக தங்கள் வாழ் விடங்களைத் தொலைத்த வில்பத்து முஸ்லிம்களின் குடியேற்றம் இன்றும் சூனியமாகவே உள்ளது.அம்பாறை மாவட்ட நுரைச்சோலை சுனாமி வீட்டுத் திட்டம் இன வாதக் கருத்துக்களால் இன்னும் கையளிக்கப்படாத நிலையிலேயே உள்ளது.கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல ஏக்கர் காணிப் பிரச்சனை உள்ளது.இப்படி பிரச்சனைகளை அடிக்கிக் கொண்டே செல்லலாம்.முஸ்லிம்களின் பிரச்சனைகளில் இவ் அரசு எதற்கு தீர்வை வழங்கியுள்ளது?

இது வரை நடந்த எத் தேர்தலிலும் தமிழ் மக்கள் மஹிந்த அரசை ஆதரித்த வரலாறில்லை.ஆனால்,முஸ்லிம்கள் பல தேர்தல்களில் ஆதரித்தே வந்துள்ளனர்.எப்போது பொது பல சேனா வந்ததோ அன்று முதலே முஸ்லிம்கள் மஹிந்த அரசை விட்டும் விலகினர்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களில் 95 வீதத்திற்கும் அதிகமானோர் மைத்திரியை ஆதரித்து வாக்களித்தனர்.இவர்களின் வாக்களிப்பில் மைத்திரிக்கு வழங்கிய முதற் செய்தி பொது பல சேனாவை கட்டுப்படுத்துங்கள் என்பதாகும்.பொது பல சேனா விடயத்தில் இந்த அரசு எந்தளவு செயற்பட்டுள்ளது? மஹிந்த ராஜ பக்ஸ ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக பொது பல சேனாவின் கோரத் தாண்டவம் அளுத்கமையில் அரங்கேற்றப்பட்டிருந்தது.பல கோடிச் சொத்துக்களும் சில உயிர்களும் காவு கொள்ளப்பட்டிருந்தன.இதன் பிரதான சூத்திரதாரி இன்றும் அதே வேகத்துடன் தனது துவேஷக் கருத்துக்களை வெளியிட்ட வண்ணமே உள்ளார்.ஆதாரத்தை தேடிக் கண்டு பிடித்து வசீம் தாஜுதீன் விடயத்தில் நீதியை நிலை நாட்ட அவா கொள்ளும் அரசு கண் எதிரே ஆதராம் இருந்தும் எது வித சிறு நடவடிக்கையேனும் மேற்கொள்ளாதிருக்கின்றது.முஸ்லிம்கள் தங்கள் உள்ளத்தில் மிகவும் மரியாதைக்குரியதாக கருதப்படும் குர்ஆனிற்கு பொது பல சேனா தவறான வியாக்கியானம் வழங்கி வருகிறது.ஏற்கனவே பொது பல சேனா மீது குர்ஆன் பற்றிய மத நிந்தனை வழக்கு நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ் விடயத்தில் நீதி மன்றம் பொது பல சேனாவை எச்சரித்தும் இருந்தது.எனினும்,பொது பல சேனா அண்மையில் வெளியிட்டு வரும் குர்ஆன் மீதான விமர்சனங்களைப் பார்க்கும் போது,அது நீதி மன்றத்தின் உத்தரவை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது.

பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் இரு தடவைகள் நீதி மன்றத்திற்கு உரிய நாளில் சமூகமளிக்காததன் காரணமாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.தான் இனிமேல் நீதி மன்றம் செல்ல மாட்டேன் என்ற கருத்துக்களை எல்லாம் பகிரங்கமாகவே கூறியும் இருந்தார்.இதுவெல்லாம் இலங்கை நீதித்துறையின் நலிவான போக்கையே எடுத்துக் காட்டுகிறது.என்ன தான் பலமிக்க மஹிந்த அரசை மைத்திரி அணியினர் வெற்றி கொண்டாலும் இனவாதத்திற்கு முன் வீரியத்துடன் செயற்பட முடியாதவர்களாகவே உள்ளனர்.அண்மையில் பொது பல சேனா நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் குர்ஆன் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகளை நாடு பூராகவும் நடாத்தப்போவதாகவும் எச்சரித்துள்ளார்.இது சாதரணமாக எடை போடக் கூடிய ஒரு விடயம் அல்ல.இவர் குர்ஆன் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை முஸ்லிம்களிடையே நடத்தினால் பறவாயில்லை.அதனை யாரும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.

download

இவரது தவறான வியாக்கியானங்கள் அப்பாவி சிங்கள மக்களிடம் வெளிப்படுத்தும் போது அவர்கள் அதனை கண் மூடித் தனமாக ஏற்றுக் கொள்ள வாய்ப்புள்ளது.இதன் மூலம் முஸ்லிம்,சிங்கள மக்களிடையேயான விரிசல் அதிகரிக்கும்.இவர்கள் இக் கருத்துக்களை எதனையும் ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளக் கூடிய மக்களிடம்  கொண்டு சேர்ப்பார்களாக இருந்தால் அதுவே இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் செயலாகவும் அமையும்.இஸ்லாம் விமர்சனங்களால் அதிகம் வளரும் ஒரு மார்க்கமும் கூட.இஸ்லாத்தை குறை காணும் நோக்கில் குர்ஆனை ஆராய்ந்தோர் அதற்கு அடிமையான வரலாறுகள் அதிகம் உள்ளன.எனினும்,இலங்கை மக்களிடம் எதனையும் ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளக் கூடிய விழிப்புணர்வு அதிகம் இல்லை என்பதால் இச் செயல் இன ரீதியான மோதலுக்கு வித்திடவே அதிகம் வாய்ப்புள்ளது.எனவே,பொது பல சேனாவை கட்டுப்படுத்தும் வகையில் அரசு தனது பார்வையைச் செலுத்த வேண்டும்.தற்போது குற்றவியல் சட்டக் கோவையில் மாற்றம் இடம்பெற்று பாராளுமன்ற அனுமதிக்காக காத்து நிற்கின்றது.இது பல்வேறு விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ள போதும்,இதனைக் கொண்டாவது இலங்கை அரசு உறங்கு நிலையில் உள்ள பொது பல சேனாவின் கொட்டத்தை அடுக்குமா? என்பதை காலம் கனியும் போதே அறிந்து கொள்ளலாம்.

இலங்கையில் இஸ்ரேலிய நலன்புரி நிலையம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இச் செயற்பாடு முஸ்லிம்களிடையே பலத்த அச்சத்தை தோற்றுவித்துள்ளது.இது பற்றி மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி பல மாதங்கள் முன்பே கூறி இருந்தார்.தற்போது முஜீபுர் ரஹ்மான் இவ் விடயத்தில் தனது அதீத கவனத்தை செலுத்தியுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸ பலஸ்தீன நட்புறவு மன்றத்தின் தலைவராக பலஸ்தீனத்துடன் தனது நெருங்கிய தொடர்புகளையும் பேணி இருந்தார்.இவ் விடயத்தில் இவ் அரசானது முன்னாள் ஜானாதிபதி மஹிந்தவை விடவும் மோசமாக நடந்து கொள்கிறதா? என்ற கேள்வியை முஸ்லிம்களிடையே தோற்றுவித்துள்ளது.இன்னுமொரு விதத்தில் மத சிந்தனைகளுக்கு அப்பால் சிந்திக்கும் போது ஒரு நாடு இன்னுமொரு நாட்டுடன் நட்புறவுடன் இருப்பதை குறை கூறவும் முடியாது.முஸ்லிம்களின் எதிரி தான் இந்த இஸ்ரேல் என்ற லேபனை எடுத்துக் கொண்டு முஸ்லிம்கள் இஸ்ரேலின் இலங்கை உள் நுழைவை தடுக்க விளைவது சாதூரியமான செயற்பாடல்ல.அதனை ஏற்க இது ஒரு முஸ்லிம் நாடும் அல்ல.அதற்காக இதனை விட்டு விட்டுச் செல்ல யூதர்கள் சாதாரணமானவர்களும் அல்ல.பொது பல சேனாவின்  காலி தலைமையகக் கட்டடத்தை ஒரு யூதனே பொது பல சேனாவிற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.இவ் விடயமானது பொது பல சேனாவிற்கு பின்னால் யூதர்கள் சதி உள்ளதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

1983ம் ஆண்டு காலப்பகுதியில் ஜே.ஆர் ஜெயவர்த்தன தமிழ் ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்த இஸ்ரேலை இலங்கைக்குள் அழைத்திருந்தார்.அன்று எதற்கு இலங்கை அரசு இஸ்ரேலை உள் வாங்கியதோ அதற்கு எதிர் மாறாக யுத்தத்தை வளர்ப்பதிலேயே இஸ்ரேல் மறைமுகமாக செயற்பட்டிருந்தது.இதனை அறிந்த ஆர்.பிரேமதாசா 1990ம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பில் இஸ்ரேல் நலன் பேணும் அமைப்பை மூடி இருந்தார்.இஸ்ரேலின் நரித்தனத்தின் விளைவை ஏற்கனவே இலங்கை நாடு அனுபவித்துள்ளது.இவைகளை சுட்டிக் காட்டுதல்,இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும் முஸ்லிம் நாடுகளினூடாக அழுத்தம் வழங்குதல்,பகிரங்கமாக எதிர்க்காது இரகசியாமாக இதனை தடுக்கும் ஆற்றலுள்ளவர்களிடம் சென்று விளக்குதல் போன்ற சாதூரியமான செயற்பாடுகளினூடாக இதனை எதிர் கொள்வதே சிறந்ததாகும்.எடு பிடி என அரசியல் ஆதாயம் தேடும் நபர்களுக்குப் பின்னால் சென்று இவ் விடயத்தை அணுகும் போது இதன் மூலம் கிடைக்கப்போகும் பலா பலன்கள் அப்படி இப்படி என சுட்டிக் காட்டப்படுவதன் மூலம் எமது பக்க நியாயங்கள் நலிவாக்கப்படுவதற்கான சந்தர்பங்கள் அதிகம் உள்ளன.மேலும்,பொது பல சேனா போன்ற அமைப்புக்கள் இதனைக் காரணம் காட்டி “எமது நாட்டின் அபிவிருத்தியை முஸ்லிம்கள் தடுக்கின்றார்கள்” என்ற கோசத்தை முன் வைத்து பேரின மக்களை தன் பக்கம் ஈர்க்க இச் செயல் வழி சமைத்துக் கொடுக்கும்.எமது பக்க நியாயங்களானது மத ரீதியானது என்பதால் பேரின மக்களிடம் எடுபடுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு.இவ் அரசின் இச் செயற்பாடுகள் மூலம் முஸ்லிம்கள் நவீனத்துவ அச்சுறுத்தலுக்கு உள்ளாகப் போகிறார்காளா? என்ற வினாவைத் தோற்றுவித்துள்ளது.

இதை எல்லாம் விட இலங்கை நாட்டிற்கே மஹிந்த சார்பு அணியினர் பாரிய அச்சுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.அது தான் கடந்த வெள்ளிக் கிழமை பாராளுமன்றத்தில் முஜீபுர் ரஹ்மான் தாக்கப்பட்ட விடயமாகும்.முஜீபுர் ரஹ்மான் வெளியிட்ட கருத்துத் தொடர்பாக ஒழுங்குப் பிரச்சனை ஒன்று எழுந்த போது,முஜீபுர் ரஹ்மான் குறிப்பிட்டிருந்த விடயத்தின் சில வார்த்தைகளை பாராளுமன்ற பதிவேட்டிலிருந்து நீக்க சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.அனைத்துக் கோணங்களையும் புறக்கணித்து இவ் விடயத்தை வைத்து ஆராயும் போது முஜீபுர் ரஹ்மான் சர்ச்சைக்குரிய விடய மொன்றில் கை வைத்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளலாம்.எனினும்,தாக்குதல் என்பது அதற்கு ஒரு போதும் தீர்வல்ல.பராளுமன்றமானது ஒரு நாட்டின் முக்கிய வழி காட்டிகளை உள்ளடக்கிய ஒரு சபையாகும்.இதன் செயற்பாடுகள் ஒரு நாட்டிற்கே முன் மாதிரியாக காணப்பட வேண்டும்.இவ்வாறான முன் மாதிரிகளை இந் நாட்டு நாட்டு மக்கள் கடைப்பிடித்தால் இந்த நாட்டின் எதிர்கால நிலை தான் என்ன? இது இலங்கை மிகக் கேவலமான கலாச்சாரத்தை நோக்கி பயணிப்பதை எடுத்துக் காட்டுகிறது.

mujeeb (2)_Fotor

சண்டித் தனத்தில் சாதிக்க முயலாமல் ஒழுங்குப் பிரச்சனையை எழுப்பி முஜீபுர் ரஹ்மானின் கருத்தை மஹிந்த அணியினர் எதிர் கொண்டிருந்தால் பிரச்சனை வேறு வடிவம் எடுத்திருக்கும்.அநேகமாக மஹிந்த அணியினர் பக்கமே நியாயம் நின்றிருக்கும்.சண்டித்தனத்தில் சாதிக்க முற்பட்ட போது பிரச்சனை முஜீபுர் ரஹ்மான் பேசியதை விடுத்து இச் சண்டித்தனத்தின் மீது திரும்பியது.மறு நாள் இது பற்றி உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்பு பாரளுமன்றத்திற்கு வெளியில் முஸ்லிம்களைத் தாக்கினீர்கள்.தற்போது பாராளுமன்றத்தினுள்ளேயே தாக்குகிறீர்கள் எனக் கூறியுள்ளார்.பிரதமரின் இக் கருத்தை நோக்கினால் முஸ்லிம் என்றதாலேயே முஜீபுர் ரஹ்மான் தாக்கப்பட்டது போன்றதொரு வடிவத்தை வழங்கியுள்ளார்.இது முஸ்லிம் என்பதால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு பிரச்சனையல்ல என்பது இங்கு நாம் கவனத்திற் கொள்ள ஒரு முக்கிய விடயமாகும்.

வசீம் தாஜுதீன் பிரச்சனை பாரிய அரசியல் பின் புலம் கொண்ட ஒரு பிரச்சனையாகும்.இதனைக் கிளறுவதன் மூலம் நாட்டிலுள்ள சில முக்கிய புள்ளிகள் அகப்படலாம் என்ற கதை உள்ளது.வெளிப்படையாகக் கூறப்போனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸவின் குடும்பத்திற்கும் இதற்கும் இடையில் ஒரு பாரிய தொடர்புள்ளதாக அதிகம் சிலாகிக்கப்படுகிறது.இது எந்தளவு உண்மை என்பதை நீதி மன்றத் தீர்ப்பே அறியப்படுத்தும்.இதன் காரணமாக தோண்டப்பட்ட ஒரு பிரச்சனை தான் இந்த வசீம் தாஜுதீனின் பிரச்சனையாகும்.வசீம் தாஜுதீன்,முஜீபுர் ரஹ்மான் என்ற இரு பெயர்களும் முஸ்லிமாக இருப்பதால் இப் பிரச்சனைக்கு முஸ்லிம்களின் பிரச்சனை போன்று தோற்றம் கொடுத்து அரசியல் செய்ய ஏதுவாக அமைந்துள்ளது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.