விசா கட்டணத்தை இரு மடங்காக உயர்த்திய அமெரிக்கா !

அமெரிக்க குடியுரிமை இன்றி அங்கு தங்கி பணிபுரிய விரும்பும் வெளிநாட்டினருக்கு 85 ஆயிரம் ‘எச்1பி விசா’ வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எண்ணிக்கையை 70 ஆயிரமாக குறைக்கக் கோரி அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் 2 எம்.பி.க்கள் மசோதா தாக்கல் செய்துள்ளனர். இது சட்டமானால், இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று பணியாற்ற விரும்பும் தகவல் தொழில் நுட்பத் துறையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

US-Visa
இந்த நிலையில் அந்த துறையினருக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், எச்1பி விசா மற்றும் எல்-1 விசா கட்டணங்களை அமெரிக்கா இரு மடங்காக உயர்த்தி உள்ளது.

இதன்படி எச்1பி விசாவில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு 4 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.2 லட்சத்து 68 ஆயிரம்) சிறப்பு கட்டணம் விதிக்கப்படும். எல்-1 விசாவுக்கு சிறப்பு கட்டணமாக 4 ஆயிரத்து 500 டாலர் (சுமார் ரூ.3 லட்சம்) வசூலிக்கப்படும்.

ஒபாமா அரசு கொண்டு வந்துள்ள சுகாதார சட்ட அமலாக்கம் மற்றும் பயோ மெட்ரிக் டிராக்கிங் அமைப்பினை செயல்படுத்துதல் ஆகியவற்றுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்1பி விசா மற்றும் எல்-1 விசா ஆகிய இரு விசாக்களுமே இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் இடையே மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

எச்1பி விசாவில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு 4 ஆயிரம் டாலர் சிறப்புக்கட்டணம் யாருக்கு பொருந்தும் என்றால், குறைந்த பட்சம் 50 பணியாளர்களை கொண்டுள்ள நிறுவனம், அவர்களில் 50 சதவீதத்தினர் எச்1பி விசா அல்லது எல்-1 விசா பெற்றிருந்தால், அவர்களுக்கு பொருந்தும். இதே விதிமுறைதான் எல்-1 விசாவுக்கும் பொருந்தும்.

முன்பு விசா கட்டணம் 5 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் இந்த முறை 10 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்த விசா கட்டணம், செப்டம்பர் 30-ந் தேதியுடன் காலாவதியாகி விட்டது.

இப்போது இந்திய தகவல் தொடர்பு நிறுவனங்கள் விசா கட்டணமாக ஆண்டுக்கு 7 கோடி டாலர் முதல் 8 கோடி டாலர் வரை (சுமார் ரூ.469 கோடி முதல் 536 கோடி வரை) செலுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை எச்1பி விசா கட்டணமாக 2 ஆயிரம் டாலர் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது.

விசா கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது இந்திய-அமெரிக்க உறவில் பாதிப்பினை ஏற்படுத்தும் என அமெரிக்க பாராளுமன்ற தலைவர்களிடம் ஜனாதிபதி மாளிகை கவலை தெரிவித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் குடியரசு கட்சியினர் பெரும்பான்மையாக உள்ளதால், இந்த கவலையை பொருட்படுத்தாமல் விசா கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி உள்ளனர்.

இந்த நிலையில் பாரீஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் உடன்பாடு எட்டப்படுவதில் முக்கிய பங்காற்றிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தொலைபேசியில் அழைத்து பேசியதாகவும், அப்போது விசா கட்டண உயர்வு பிரச்சினையை பிரதமர் மோடி எழுப்பியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.