ஞானசார தேரர், முதலில் பஞ்ச சீலத்தை படித்து உணரவேண்டும் என்கிறார் மசூர் மௌலானா!

 

 

-எம்.வை.அமீர்

 

அல்குர்ஆனை இலங்கையில் தடை செய்ய வேண்டுமென கூறியிருக்கும் ஞானசார தேரர், முதலில் நன்றாக பஞ்ச சீலத்தை படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று, இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவரும் சமூக சிந்தனையாளருமான அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

masoor m

மத நிந்தனை தண்டனைக்குரிய குற்றமென பாராளுமன்ற்த்தில் சட்டம் இயற்றிய பின்னரும் இனவாதிகளின் கொட்டம் அடங்கவில்லையென்பது வேடிக்கையான வேதனையாகவிருக்கிறது.

 

சாந்தி,சமாதானம்.சகோதரத்துவம் என்பவற்றை போதிக்கும் சன்மார்க்க நெறியின் வழிகாட்டியாம் அல்குர்ஆனை தடை செய்யக் கோரும் தேரரின் உச்சக்கட்ட இனவாதத்தை இனியும் இலங்கை முஸ்லிம்கள்பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. 

 

தேரர் பின்பற்றும் பஞ்ச சீலம் கூட பிற மதத்தினரை சொல்லால் செயலால் துன்புறுத்துவதை வலியுறுத்தும் போதனைகளை உள்ளடக்கியிருக்கவில்லை. எல்லோரும் ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழவே பஞ்ச சீலமும் சொல்கிறது. 

 

இப்படியிருக்க, குறுகிய அரசியல் தேவைகளுக்காக மக்கள் நேசிக்கும் புனித குர் ஆன் மீது அபாண்டம் சுமத்தும் இனவாதிகளின் கூற்றை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது. பெருன்பான்மை மக்களுடன் தேரர் அவர்களும் குர் ஆனை மிக ஆழமாகப் படித்துணர வேண்டும்.  

 

குர் ஆனின் உபதேசங்களை பின்பற்றும் எந்த மனிதனும் சக மனிதனிடத்தில் பாரபட்சமும் வெறுப்பும் காட்டமாட்டான். ஆகவே, இனவாதிகள் இஸ்லாத்தின் மீதும் புனித இறை வசனங்கள் மீதும் அவதூறுகளைபரப்புவதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். 

 

இலங்கை முஸ்லிம்களை  புண்படுத்தும் நிகழ்வுகள் நல்லாட்சியிலும் தொடர்வது வேதனைக்குரிய விடயமாகும். முஸ்லிம்களை தொடர்ச்சியாக வெறுப்பேற்றும் கைங்கரியங்களை முன்னெடுக்கும் இனவாதிகளை கைது செய்து நாட்டில் ஐக்கியத்தை நிலை நாட்ட இவ்வரசு கரிசனையுடன் செயற்படுவது அவசியமாகும்.

 

ஞானசார தேரர் அவர்களே, 

 

குர்ஆனில் ஏதும் வழுக்கள் அல்லது தீய போதனைகள் இருக்குமென நீங்கள் நினைத்தால் அவற்றை நான் தங்களுக்கு தெளிவுபடுத்துகிறேன். என்னுடைய தெளிவு தங்களுக்கு போதவில்லையென்றால் சவூதி அரேபியாவின் தலை சிறந்த உலமாக்களைக் கொண்டு தங்களுக்கு தெளிவுபடுத்த முஸ்லிம் எனும் வகையில் நான் கடமைப்பட்டுள்ளேன்.

 

நான் தங்களுக்கு சவால் விடுக்கிறேன், எக்காலத்திற்கும் பொருத்தமான இறைமறை வேதத்தில் நீங்கள் ஒரு அணு கூட பிழை காண முடியாது. முஸ்லிம்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் அல் குர்ஆன் மீது அவதூறு சொல்வதை நீங்கள் இத்தோடு நிறுத்துவதுடன் முஸ்லிம்களிடத்தில்  பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும்எனவும் கேட்டுக் கொள்கிறேன்.