பாகிஸ்தான் அணு ஆயுதங்களை குவிப்பதில் ஆர்வம் காட்டி வருவதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை குழுவால் கூட்டப்பட்ட அமர்வில் பாகிஸ்தான் குறித்த விவாதம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் கலந்து கொண்டு தனது கருத்தை முன்வைத்த ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் சிறப்பு பிரநிதி ரிச்சர்டு ஓல்சன் பேசியதாவது:-
பாகிஸ்தான் அணு ஆயுதங்களை குவித்து வருவது குறித்து உங்கள் கவலைகளை நீங்கள் பகிர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏவுகணை திட்டத்தில் பாகிஸ்தான் காட்டும் வேகமும் நோக்கம் குறித்து நாங்கள் கவலை அடைந்துள்ளோம். பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதும் பின்பற்றுவதும் கவலை அளிப்பதாகவே உள்ளது.
அணு பயன்பட்டால் தென்மேற்கு ஆசியாவில் தொடரும் மரபுவழி மோதல்கள் அதிகரிக்கும். இது அப்பகுதிகளில் மிகப்பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என நாங்கள் அஞ்சுகிறோம். பாகிஸ்தானின் உயர்மட்ட அதிகாரிகளிடம் நாங்கள் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இந்த போச்சுவார்த்தையின் போது எங்களின் குறிப்பிட்ட கவலைகளை தெளிவாக எடுத்துரைத்துள்ளோம். மேலும், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை மேம்பாட்டுத் திட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியாவுடனான உறவை மேம்படுத்த பாகிஸ்தான் ஆர்வம் காட்டவில்லை என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிரையன் ஹிக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறும்போது, “பாகிஸ்தான் அணு ஆயுத குவிப்பில் இந்தியாவுடன் போட்டி போட்டுக்கொண்டு ஈடுபட்டு வருகிறது. உலக அமைதிக்காக செயல்பட்டு வரும் கார்னெகி அறக்கட்டளை வெளியிட்டுள்ள தகவலின்படி, அடுத்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தான் 350 அணு ஆயுதங்களை குவித்து, இந்தியா, பிரான்சு, இங்கிலாந்து, சீனாவை பின்னுக்கு தள்ளி உலகின் 3-வது அணு ஆயுத வல்லரசாக மாறும்“ என்றார்.