தள வைத்தியசாலையில் மிக முக்கிய பிரிவுகள் இல்லாததனால் விடுதியில் சிகிச்சை பெருகின்ற நோயாளர்கள் அவதி!

அபு அலா –

அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலைக்கு நவீன ஆய்வுகூடம், பற்சிகிச்சைப் பிரிவு மற்றும் கதிரியக்கப் பிரிவு (X-RAY) போன்றவற்றை அமைத்து தரக்கோரி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளதாக அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் இன்று (17) தெரிவித்தார்.

DSC_9751

அவர் மேலும் கூறுகையில்,

அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலைக்கு வைத்திய சிகிச்சைகளை பெறவருகின்றவர்களின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்ற அதேவேளை விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறுகின்றவர்களின் வீதமும் அதிகரித்து வருகின்றது.

விஷேடமாக, இங்கு சிகிச்சைபெற வருகின்றவர்களில் மிக அதிகமான நோயாளர்கள் வெளி மாகாணத்தைச் சேர்ந்தவர்களாகவும், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகவும், வைத்தியசாலையை அன்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர்.

இவ்வாறு விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறுகின்றவர்களுக்கு அவர்களின் நோய் தொடர்பாக மேலதிக வைத்திய சிகிச்சை வழங்குவதற்கு மிக அத்தியவசியமாக ஆய்வுகூடம், பற்சிகிச்சைப் பிரிவு மற்றும் கதிரியக்கப் பிரிவு (X-RAY) போன்ற பிரிவுகள் தேவைப்படுகின்றது. இப்பிரிவுகள் இல்லாததனால் நோயாளர்கள் பல இன்னல்களை எதிர்கொண்டும் வருகின்றனர்.

வைத்தியசாலையின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி இக்குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்துதருமாறும் கோரிய கடிதம் ஒன்றையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீருக்கு நேற்றய தினம் (16) அனுப்பி வைத்துள்ளதாகவும் அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் மேலும் தெரிவித்தார்.