ஜோர்தான் நாட்டிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எல்.எம்.லாபீர், தனது உத்தியோகபூர்வ அறிமுகக் கடிதத்தினை ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனிடம் அண்மையில் கையளித்தார்.
ஜோர்தான் மன்னரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜோர்தான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் நாசர் ஜுடே மற்றும் மன்னரின் அரச மாளிகை வாசஸ்தல பிரதம அதிகாரி மேதகு பாயஸ் தறவ்னே ஆகியோர் கலந்துகொண்டனர்.
தூதுவர் ஏ.எல்.எம்.லாபீர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது ஆசி நல்வாழ்த்துக்களுடன் மன்னரின் தேகாரோக்கியம், நாட்டின் மகிழ்ச்சி மிக்க உறுதியான முன்னேற்றம் மற்றும் நாட்டு மக்களின் செழுமையான நல்வாழ்வுக்கான வாழ்த்துக்களினையும் மேற்குறிப்பிட்ட எமது நாட்டின் தலைவர்கள் சார்பாக மன்னரிடம் இதன்போது தெரிவித்துக்கொண்டார்.
தூதுவர் தனது குறிப்பில், ‘2015ஆம் ஆண்டில் 50ஈவது அண்டு நிறைவினை அடையும், இரு நாடுகளிற்கிடையில் கட்டியெழுப்பப்பட்ட இராஜதந்திர உறவானது ஜோர்தான் நாட்டின் பயனுறுதிமிக்க ஒத்துழைப்புடனும், தனது உயரிய அர்ப்பணிப்பான செயற்பாட்டாலும் தற்போதய உறவு நிலையிலிருந்து முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல உழைப்பேன்’ என குறிப்பிட்டார்.
மேலும், ஜோர்தான் மன்னரின் தந்தையும் அமரத்துவம் அடைந்த மன்னருமான அல் ஹுசைன் பின் தலால் பின் அப்துல்லா, கடந்த 1976ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற அணிசார நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்குபற்றியமை தொடர்பாகவும் இதன்போது நினைவு கூரப்பட்டது.
மன்னர், தூதுவருடான செய்திப் பரிமாற்றத்தில், பரஸ்பர நல்லாசிகளையும், வாழ்த்துக்களையும் எமது ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் முதலில் தெரிவித்துக் கொண்டதுடன், பாதுகாப்பு, வர்த்க வியாபாரம், கலாசாரம், இருபக்க அரசியல் போன்ற விடயப் பரப்பகளில் கவனம் செலுத்துவதனூடாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதனூடாகவும் இரு நாடுகளிற்கிடையில் ஐக்கியத்தினையும், ஒருமைப்பாட்டினையும் கூட்டாக பரஸ்பரத்துடன் வலுப்படுத்தி மேன்மையடைய தனது ஒத்துழைப்பினை வழங்குவதாக குறிப்பிட்டார்.
ஜோர்தானுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட ஏ.எல்.எம். லாபீர், இலங்கை வெளிநாட்டு சேவையைச் சேர்ந்த முதலாம் தர உத்தியோகத்தர் என்பதுடன் 22 வருட சேவைக் கால அனுபவமிக்க இராஜதந்திரியும் ஆவார்.
கிண்ணியாவை பிறப்பிடமாகக் கொண்ட இவர், விவசாய விஞ்ஞான இளமானி பட்டதாரி என்பதுடன் சட்டத்தரணியுமாவார். இவர் தனது இராஜதந்திர சேவைக்காலத்தில் குவைத், கனடா, ஐக்கிய அரபு இராச்சியம், லெபனான், மற்றும் தாய்லாந்து ஆகிய ஆகிய நாடுகளிலுள்ள இலங்கை தூதுவராலயங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களில் பல்வேறு இராஜதந்திர மட்ட நிலைகளில் கடமையாற்றியுள்ளதுடன் சவூதி அரேபியாவின் ஜித்தாவில் இலங்கைக்கான கொன்சுல் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.