Ashraff. A. Samad
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் எனது அமைச்சின் கீழுள்ள எந்தவொரு நிறுவனமும் வெளிநாடுகளுக்கு தாரைவார்க்கப்படமாட்டாது என்று நான் உறுதியாக நம்புகின்றேன். பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இந்த உயர் சபையில் குறிப்பிட்டது போன்று காங்கேசந்துறை சீமெந்துத் தொழிற்சாலை பாகிஸ்தான் நாட்டுக்கு வழங்கப்படவில்லையெனவும் பத்திரிகைகளில் வெளிவந்த அந்த செய்தி தவறானது எனவும் நான் கூற விரும்புகின்றேன். எனினும் எனது அமைச்சு தொடர்பில் சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி நல்ல பல ஆலோசனைகளை வழங்கினார். அத்துடன் நல்ல விடயங்களையும் முன்வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இங்கு பல்வேறு விடயங்களை தெரிவித்தார். வாழைச்சேனை கடதாசி ஆலையின் நிலை குறித்தும் தெளிவுபடுத்தினார். வடக்கிலே மூடப்பட்டுக் கிடக்கும் தொழிற்சாலை தொடர்பிலும் எனது கவனத்தை செலுத்துமாறு வேண்டினார். எனினும் வடமாகாணத்திலே ஆட்சியிலுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமயிலான மாகாண அரசும் தமிழ்க் கூட்டமைப்பினரும் எமக்கு பூரண ஒத்துழைப்பு நல்கினால் யுத்தகாலத்தில் மூடப்பட்டுக் கிடந்த இந்த தொழிற்சாலைகளை மீள ஆரம்பிப்பதற்கும் மீளக்கட்டியெழுப்புவதற்கும் எனது அமைச்சு முழுமையான நடவடிக்கை எடுக்குமென உறுதியளிக்கின்றேன்.
பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அலுவிகார பித்தளைத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தெரிவித்தார். எதிர்வரும் சனிக்கிழமை இது தொடர்பில் நாம் உயர்மட்ட கலந்துரையாடலொன்றை நடாத்தவுள்ளோம் என்பதை உறுதியுடன் கூறுகின்றோம்.
திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அந்த மாவட்டத்தில் மூங்கில் வளர்ப்பு, ஆடைத் தொழிற்சாலைகளின் தேவை பற்றியும் சுட்டிக்காட்டினார். அடுத்த வருட வரவு செலவுத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கைத்தொழிற்சாலை ஒன்றை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கைத்தொழில் துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் எமக்குண்டு. பரந்தன் இரசாயன தொழிற்சாலை, கான்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதன் மூலம் சுமார் 3000 தொடக்கம் 4000 பேர் வரையிலானவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க முடியுமென பூரணமாக நம்புகின்றோம். தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடம் மூடப்படும் அபாய நிலை கருதி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் வேண்டுகோளுக்கமைய அந்தப் பிராந்தியத்தில் கைத்தொழில் பேட்டை ஒன்றை அமைக்க முன்வந்துள்ளோம். இதனால் பொறியியல் மாணவர்களின் தொடர்ச்சியான கல்விக்கு இந்த முயற்சி பெரிதும் உதவுமென நம்புகின்றோம்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 10 இலட்சம் பேருக்கு வேலை வழங்கும் உத்தேசத்திட்டத்திற்கு இந்த அமைச்சு தன்னாலான அத்தனை பணிகளையும் நல்குமென உறுதியளிக்கின்றேன். அடுத்தவருடம் இந்த நாட்டிலே கைத்தொழில் புரட்சியொன்றை ஏற்படுத்துவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
எனது அமைச்சின் கீழ் பல நிறுவனங்கள் இருப்பதாக இந்தச் சபையில் எடுத்துக் காட்டப்பட்டது. அமைச்சர் கபீர் ஹாஷிம் மிகவும் தெளிவாக இங்கு குறிப்பிட்டது போன்று எனது அமைச்சின் கீழும் பல லேபல் நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் கடந்தகால முகாமைத்துவமே இது தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியவை.
லங்கா சதொச, வருடமொன்றுக்கு 15 கோடி ரூபா நஷ்டத்தில் இயங்குகின்றது. அதே போன்று, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தில் கடந்த காலங்களில் பல்வேறு முறைகேடுகளும் ஊழல் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளன. சுமார் ஆயிரம் கணனிகள் களஞ்சியசாலையில் பயன்பாடற்று கிடக்கின்றன. தேர்தல் காலங்களில் தேர்தல் வேலைகளுக்காக இவைகளை கொண்டுவந்தனரோ, என்னவோ. எனினும், இது தொடர்பில் நிதி மோசடி ஆணைக்குழுவுக்குஎதிர்வரும் வாரங்களில் முறையிடவுள்ளோம். இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தில் கடந்த காலங்களில் டெண்டர் பத்திரம் கோருவதில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது நாம் பகிரங்க கேள்விப்பத்திர நடைமுறையைப் பின்பற்றி வருகிறோம்.
லக்சல மற்றும் இன்னோரன்ன நிறுவனங்களில் கோடிக்கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளது. எல்லா விடயங்களையும் விலாவாரியாக எனக்கு இங்கு கூறுவதற்கு நேரம் இடமளிக்கவில்லை.
எனினும், லக்சல, அரச வர்த்தக கூட்டுத்தாபணம், கிரபைட் லங்கா லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு புதிதாக அமர்த்தப்பட்டுள்ள தலைவர்கள் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி இந்த நிறுவனங்களை செயல்திறன் மிக்கதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்துளேன்.
வர்த்தக திணைக்களத்தின் மூலம் வெளிநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்த நாம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளோம். பாகிஸ்தான் – இலங்கை வர்த்தக உடன்படிக்கையின் மூலம் சுமார் 4000 கும் மேற்பட்ட பொருட்களை வரி இல்லாமல் ஏற்றுமதி செய்ய முடியும். இதன் மூலம் உள்ளூர் மக்களின் வேலையில்லாப் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வுகான நாம் நடவடிக்கை எடுப்போம்.
அமைச்சர் மலிக் சமரவீரவின் அமைச்சுடன் இணைந்து எனது அமைச்சு வெளிநாட்டு வியாபாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயற்படுத்த முனைந்துள்ளோம். இறுதியாக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை பிரதி அமைச்சர் சம்பிகா பிரேமதாச, அமைச்சின் செயலாளர் தென்னகோன், அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.