193 நாடுகளை அங்கத்தினராக கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கியுள்ளன. சுமார் 70 ஆண்டுகளாக ஆண்களே வகித்துவரும் இந்த பதவிக்கு இம்முறை ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படுவார் என பரவலாக பேசப்பட்டுவரும் நிலையில் அந்த பெண் யார்?, அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? என்பதை அறிந்துகொள்ளும் ஆவல் உலக மக்களிடையே மேலோங்கியுள்ளது.
ஐ.நா. சபையின் முந்தைய மற்றும் தற்போதைய பொதுச் செயலாளரான பான் கி மூனின் பதவிக்காலம் 31-12-2016 அன்று முடிவடைகின்றது.
இதையடுத்து, புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டதற்கு அடையாளமாக ஐ.நா. சபையின் தலைவர் மோகென்ஸ் லைகெட்டாஃப்ட் புதிய பொதுச் செயலாளர் பதவிக்கு தங்கள் நாட்டை சேர்ந்த ஆண் மற்றும் பெண் வேட்பாளர்களின் பெயரை முன்மொழியுமாறு உறுப்பு நாடுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தங்கள் நாட்டைச் சேர்ந்த பெண் வேட்பாளரை முன்மொழிவதில் உறுப்பு நாடுகள் முன்னுரிமை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய பொதுச் செயலாளரான பான் கி மூனின் ஆசையும், எதிர்பார்ப்பும் இதுவாகவே உள்ள நிலையில் ஐ.நா. சபையின் முன்னாள் தலைவரான – மேக்கடோனியா நாட்டைச் சேர்ந்த ஸ்ர்க்ஜான் கெரிம் மற்றும் குரோஷியா நாட்டைச் சேர்ந்த வெளியுறவுத்துறை பெண் மந்திரி வெஸ்னா புஸிக் ஆகியோர் இந்த பதவிக்கு போட்டியிடப் போவதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மீதியுள்ள 191 நாடுகள் தங்களது சார்பில் யாரை முன்நிறுத்தப் போகின்றன? என்பது இன்னும் ஓராண்டு காலத்தில் தெரிந்துவிடும். ஐக்கிய நாடுகள் சபையின் சட்டதிட்டங்களின்படி, பாதுகாப்பு கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்டு, அதிகமான பொதுச்சபை உறுப்பினர்களின் வாக்குகளை பெறும் ஒரு வேட்பாளர் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார்.
ஆனால், இந்த மரபு முழுமையாக கடைபிடிக்கப்படுவதில்லை. சுமார் 70 ஆண்டுகளாக ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளின் பேராதரவுடனும் வெட்டுரிமை (வீட்டோ பவர்) படைத்த அமெரிக்கா, பிரிட்டைன், பிரான்ஸ், சீனா மற்றும் ரஷியா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் ஒப்புதலுடனும்தான் ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த புதிய பொதுச் செயலாளர் யார்? என்பது தீர்மானிக்கப்படுகின்றது.
அதன்பின்னர், பொதுச்சபையில் நடைபெறும் வாக்கெடுப்பு எல்லாம் வெறும் கண்துடைப்பு நடைமுறைகளாகவே கருதப்படுகின்றது.
கடந்தகால தேர்தல்களில், தங்களுக்கு நிதியுதவு மற்றும் ராணுவரீதியான உதவிகளை செய்துவரும் வளர்ந்த நாடுகளின் பினாமிகளாக பல சிறிய நாடுகள் வாக்களித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
எது, எப்படியோ, 97 ஓட்டுகளுக்கு மேலாக பெற்றுவிடும் ஒருவர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார், அடுத்த ஐந்தாண்டுகள் வரை பதவி வகிப்பார். உறுப்பு நாடுகளின் ஒப்புதலுடன் தற்போதைய பொதுச் செயலாளரான பான் கி மூனைப் போல் மேலும் ஐந்தாண்டுகள் வரை பதவிக்கால நீட்டிப்பும் வழங்கப்படலாம்.