வரும் 9ல் ஏழைகளுக்கான காப்பீடு திட்டம் -மோடி

NarendraModi3_Fotor

 

ஏழை மக்கள் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு அளிக்கும் வகையில், ஆயுள் காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, இம்மாதம், 9ல், துவக்கி வைக்கவுள்ளார். 

 மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த பின், ஏழை மக்களும் எளிதாக வங்கி சேவையை பெறும் வகையில், ‘ஜன்தன் யோஜனா’ என்ற திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. அடுத்த கட்டமாக, நாட்டு மக்கள் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு அளிக்கும் வகையிலான, ஆயுள் காப்பீடு 
மற்றும் ஓய்வூதிய திட்டத்தை இம்மாதம், 9ல், பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் துவக்கி வைக்கவுள்ளார். மற்ற மத்திய அமைச்சர்கள், மாநில தலைநகரங்களில் இந்த திட்டத்தை துவக்கி வைக்கின்றனர். அந்தந்த மாநில முதல்வர்களும், இந்த விழாக்களில் பங்கேற்கவுள்ளனர். 

 அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி, மூன்று திட்டங்களை துவக்கி வைக்கவுள்ளார். இதில், ‘பிரதம மந்திரி சுரக் ஷா பீமா யோஜனா’ என்ற திட்டம், விபத்து காப்பீடு தொடர்பானது. இத்திட்டத்திற்கான ஆண்டு பிரீமியம், 12 ரூபாய் மட்டுமே. மொத்த காப்பீட்டு தொகை, 2 லட்சம் ரூபாய். 18 முதல், 70 வயது வரையுள்ள அனைத்து வங்கி கணக்குதாரர்களும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.’பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ என்ற திட்டம், ஆயுள் காப்பீடு தொடர்பானது. இந்த திட்டத்துக்கான ஆண்டு பிரீமியம், 330 ரூபாய் மட்டுமே. 18 முதல், 50 வயது வரையுள்ள அனைத்து வங்கி கணக்குதாரர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும். 

 இந்த திட்டங்களுக்கான பிரீமியம் தொகை, சம்பந்தப்பட்டோரின் வங்கி கணக்குகளில் இருந்து, ‘ஆட்டோ டெபிட்’ முறையில், தானாகவே பிடித்தம் செய்யப்படும். மூன்றாவதாக, ‘அடல் ஓய்வூதிய திட்டம்’ துவக்கி வைக்கப்படுகிறது. வயது முதிர்ந்தவர்களின் வருவாய் பாதுகாப்புக்காக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.