கல்லெறிந்து கொல்லுகையில் களேபரம்..!!

sri-lanka--saudi-arabia

“பாட வாய்ப்புக் கிடைத்தால் கிழவியும் பாடுவாள்” என்ற முது மொழிதான் இச் சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது.இலங்கை மருதானையைச் சேர்ந்த ஒரு பெண் சவூதியில் விபச்சாரம் புரிந்துள்ளார்.இதனை இப் பெண்ணே ஏற்றுக் கொண்டுள்ளதாக இலங்கை அரசின் இது தொடர்பான செய்திகள் தெரிவிக்கின்றன.இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் இப் பெண்ணை கல்லெறிந்து கொல்ல சவூதி நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனை அறிந்த இலங்கையின் பல பாகத்திலுமுள்ளோர் கொதித்தெழுந்துள்ளனர்.இவ் விடயமானது இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய விவாதப் பொருளாகவே மாறியுள்ளது.இஸ்லாத்தை விமர்சிக்க எங்கே? சந்தர்ப்பம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த பலருக்கு இது இனிப்பான செய்தியாய் மாறியுள்ளது.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய த.தே.கூவின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இத் தண்டனையை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.இன்னும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சவூதிக்கு பெண்களை அனுப்பக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.மறு பக்கம் இச் செயற்பாடு முஸ்லிம்களின் தற்கால எதிரி பொது பல சேனாவின் உச்சியை குளிரச் செய்துள்ளது.இத் தண்டனையை விமர்சிப்பதும் இஸ்லாமிய ஷரீயாச் சட்டத்தை விமர்சிப்பதும் ஒன்றாகும்.இஸ்லாமிய ஷரீயாச் சட்டத்தை விமர்சிப்பதை எந்த ஒரு முஸ்லிமாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.இக் கருத்துக்கள் பாராளுமன்றத்தில் வெளிடப்பட்ட போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அதனை எதிர்த்து கருத்துத் தெரிவித்துள்ளனர்.இச் சர்ந்தர்ப்பத்தில் இஸ்லாத்தை திறம்பட தெளிவுபடுத்தக் கூடிய ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞரின் தேவையை பாராளுமன்றம் உணர்ந்தது.இது இலங்கை முஸ்லிம் சமூகம் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயங்களில் பிரதான ஒரு விடயமாகும்.

சவூதி நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் ஒரு நாடாகும்.இந்த நாட்டில் இஸ்லாமிய ஷரீயாச் சட்டம் அமுலில் இருப்பதை விமர்சிக்க வேறு எந்த மதத்தினருக்கும் உரிமை இல்லை.இது பற்றி முஸ்லிம்கள் மாத்திரமே கேள்வி எழுப்பத் தகுதியானவர்கள்.ஒரு குற்றாவாளி தான் செய்த குற்றத்திற்காக உலகில் இஸ்லாம் வரையறுத்துள்ள தண்டனையை பெறுவாராக இருந்தால் அக் குற்றவாளி மறுமையில் அக் குற்றத்திற்கான தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வார்.நபியவர்களிடம் தாங்கள் மறைமுகமாக செய்த குற்றங்களைக் கூறி தாங்களாவே நபித் தோழர்கள்,ஸஹாபா பெண் மணிகள் தண்டனை பெற்ற வரலாறுகள் அதிகம் உள்ளன.ஒரு முஸ்லிம் உலக வாழ்க்கையை தற்காலிகமானது எனக் கருதுபவன்.அவனுக்கு மறுமையே முதன்மை இலக்கு.மறுமையில் தனது இலட்சியத்தை அடைய இக் குறித்த தண்டனையை அக் குறித்த நபருக்கு வழங்குவதே இஸ்லாமிய அடிப்படையில் பொருத்தமானது.இக் குறித்த பெண் முஸ்லிம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இத் தண்டனையை எதிர்ப்பவர்கள் விபச்சாரத்தை ஆதரிக்கின்றார்களா? அல்லது விபச்சாரத்திற்கு மரண தண்டனை பொருத்தமானதல்ல எனக் கருதுகின்றார்களா? அல்லது மரண தண்டனையினையே எதிர்க்கின்றார்களா? அல்லது கல்லெறிந்து கொல்லுவதை எதிர்க்கின்றார்களா? என்பன ஆய்வுக்குட்படுத்த வேண்டிய விடயங்களாகும்.நிச்சயமாக இவர்கள் யாரும் விபச்சாரம் தவறல்ல எனக் கருதமாட்டார்கள்.பூங்குடு தீவு மாணவி  வித்தியா,தென் மாகாணத்திலேயே சேயா காமுகர்களால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட போது,தற்போது இத் தண்டனையை விமர்சிக்கும் இப் பாராளுமன்றத்திலேயே மரண தண்டனை அவசியம் என்ற கருத்து மேலோங்கிக் காணப்பட்டது.டில்லியில் ஓடும் ரயிலில் மிகவும் அகோரமான விதத்தில் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவியின் விடயத்தில் குறித்த குற்றவாளிகளில் ஒருவர் 18 வயதை அடையாத காரணத்தினால் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை தோன்றியது.இதன் போது அக் குறித்த குற்றவாளியின் தாயே அக் குறித்த குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கக் கோரிக்கை விடுத்திருந்தார்.ஒரு மகனிற்கு வழங்கப்படும் தண்டனையை ஒரு தாயினால் பொருந்திக்கொள்ள முடியுமாக இருந்தால் அத் தண்டனையை அனைவரும் ஏற்றுக்கொள்வர்கள்.இவ் விடயமானது சில குற்றங்களுக்கு மரண தண்டனையே பொருத்தமானது என்பதை புடை போட்டுக் காட்டுகின்ற அதே வேளை அதை சமூகமும் ஏற்றுக்கொண்டுள்ளது..

எத்தனை ஆயிரம் பேரைக் கொன்று இலங்கை அரசு யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தது? இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான  யுத்தத்தின் போது எத்தனை அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்? தீவிரவாத முலாத்தினைப்  பூசி எத்தனை சிரியா,ஈராக்,ஆப்கானிஸ்தான்,லிபியா,எகிப்து போன்ற நாடுகளில் உள்ள மக்களினை உலக நாடுகள் அழித்துக் கொண்டிருக்கின்றன? அதாவது,இக் குறித்த நிகழ்வுகளில் குறித்த குற்றங்களைச் செய்யும் நபர்கள் மாத்திரம் கொல்லப்படுவதில்லை.அவர்களோடு சேர்த்து அவர்கள் எண்ணிக்கையின் பல மடங்கு அப்பாவி மக்களும் கொல்லப்படுகின்றனர்.இதனை உலக மக்கள் வேடிக்கை தானே பார்க்கின்றனர்?.அங்கு கொல்லப்படுபவர்களை தீவிரவாதிகள் என்றே வைத்துக்கொள்வோம்.தீவிர வாதிகளுக்கு உயிர் இல்லையா? இங்கு கூட வெளிப்படையாக மரண தண்டனை தான் வழங்கப்படுகிறது.ஆனால்,என்ன? இதற்கு யுத்தம்,தீவிரவாத ஒழிப்பு போன்ற பெயர் சூட்டப்பட்டிருக்கும்.சிலரைக் கொல்வதன் மூலம் தான் பலர் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்களாக இருந்தால் அதனைச் செய்வதில் தவறில்லை என்பதுவே இங்குள்ள மறைமுக நியாயம்.இதனை உலக மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.மரண தண்டனை என பெயர் சூட்டி மரண தண்டனை வழங்கப்படும் போது மாத்திரம் எதிர்ப்பது அவர்களின் அறியாமையினையே எடுத்துக்காட்டுகிறது.மேலுள்ள பல விடயங்கள் சில குற்றங்களுக்கு மரண தண்டனை பொருத்தமானது என்பதை தெளிவுபடுத்துவதோடு அதனை மக்களும் நேரடியாகவும்,மறைமுகமாகவும் ஏற்றுக்கொண்டுள்ளதை விளக்குகிறது. 

கல்லெறிந்து கொல்லுகை என்பது பார்ப்பதற்கும்,ஏற்றுக் கொள்வதற்கும் மிகவும் கஸ்டமான ஒரு தண்டனை தான் என்பதை மறுப்பதற்கு இல்லை.நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் வானத்திலுள்ளவர்கள் உங்கள் மீது இரக்கம் காட்டுவார்கள் எனக் கூறும் இஸ்லாம் விபச்சாரம் செய்தோர் மீது தண்டனை வழங்கும் விடயத்தில் இரக்கம் காட்ட வேண்டாம் என்றே கட்டளையிட்டுள்ளது.இஸ்லாம் இவ் விடயத்திற்கு இந்தளவு பாரதூரமான தண்டனையை வரையறுத்துள்ளது என்றால் அவ் விடயத்தின் பாதிப்பும் அந்தளவு இருக்கும் என்பது தான் அங்கு பொதிந்துள்ள செய்தியாகும்.இலங்கையின் பண்டைய காலத்தில் சில குற்றங்களுக்கு யானையினால் மிதித்து தண்டனை வழங்கியதற்கான சான்றுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.நாம் மருந்து அருந்தும் போது அம் மருந்து கசக்கின்றது என்பதற்காக அருந்தாமல் இருக்க முடியாது.இது போன்ற ஒரு விடயமாகவே இங்கும் நாம் எமது பார்வையைச் செலுத்த வேண்டும்.ஒரு தண்டனை வழங்கப்படும் போது அத் தண்டனை எதற்காக வழங்கப்படுகிறதோ அதன் நோக்கம் கல்லெறிந்து கொல்லுவதன் மூலம் தான் நிறைவேறும் என்றால் அதனை செய்வதில் தவறில்லை.

ஒரு தண்டனை வழங்கப்படும் போது அத் தண்டனையின் மூலம் அக் குறித்த நபர் அக் குற்றத்திலிருந்து மீளும் வகையில் அமைய வேண்டும்.இதனைப் போன்று இவருக்கு வழங்கப்படும் தண்டனை ஏனையோருக்கு படிப்பினையாகவும் அமைய வேண்டும்.இக்  கடுமையான சட்டம் அமுலில் இருந்தும் இக் குற்றம் நடைபெறுகிறதென்றால் இக் குறித்த நபரை அக் குற்றத்தை மீளச் செய்யாமல் தடுப்பதென்பது இயலாத காரியம் என்று தான் கூற வேண்டும்.பஞ்சினால் ஒத்தனம் வழங்கி தண்டனை வழங்கினால் தண்டனை என்ற ஒன்று வழங்கப்படுவதில் என்ன தான் அர்த்தமிருக்கிறது? .இஸ்லாம் விபச்சாரத்தினை கடுமையானதொரு குற்றமாக கருதுகிறது.இதன் காரணமாக இஸ்லாம் இதற்கு மிகக் கடுமையான தண்டனை வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளது.இதனைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் விபச்சாரத்தின் மீது மிகக் கடுமையான அச்சம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.மக்கள் குற்றம் என விபச்சாரத்தை விட்டும் அகலாது போனாலும் பயத்தினாலாவது அக் குற்றத்தைச் செய்யாது தவிர்ந்திருக்க இச் சட்டம் உதவுகின்றதல்லவா?

இஸ்லாம் திருமணம் செய்த ஒருவர் விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து கொல்லுமாறும்,திருமணமாகாதவர் எனில் நூறு கசை அடி அடிக்குமாறும் கட்டளை இட்டுள்ளது.இஸ்லாத்தைப் பொறுத்தமட்டில் விபச்சாரம் பற்றிய விடயத்தில் மிகக் கடுமையாக நடந்துகொள்ள சில நியாயமான காரணங்களும் உள்ளன.இன்று எக் காரணிகளால் எல்லாம் விபச்சாரம் தூண்டப்படுமோ அத்தனை காரணிகளையும் இஸ்லாம் தடை செய்துள்ளது.விபச்சாரம் போன்ற மிகக் கேவலமான கலாச்சாரத்தை இச் சமூகம் பின் பற்றக் கூடாது என்பதற்காக் மிகக் கடுமையான சில சட்டங்களையும்,சலுகைகளையும் வரையறுத்துள்ளது.இஸ்லாம் ஒரு குறித்த ஆணிற்கு நான்கு திருமணம் செய்ய அனுமதித்துள்ளது.ஒரு பெண் தன் கணவனைப் பொருந்திக் கொள்ளாத போது அத் திருமணத்திலிருந்து விலகி இன்னுமொரு திருமணம் செய்ய அனுமதித்துள்ளது.இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமையும் திருமணம் செய்யுமாறு  ஆர்வமூட்டியுள்ளது.கனவன் மனைவிக்கிடையிலான உடல் உறவை இஸ்லாம் சதகா எனக் கூறி கணவன் மனைவிக்கிடையிலான உறவைத் தூண்டியுள்ளது.இவ்வாறான சலுகைகளையும்,ஆர்வமூட்டல்களையும் வழங்கிவிட்டே விபச்சாரத்திற்கு இக் கடுமையான சட்டத்தை அமுல் செய்துள்ளது.எனவே,இஸ்லாம் இவ் விடயத்தில் கடுமையாக நடந்து கொள்வதற்கு இவைகளும் நியாயமான காரணிகளாகும்.

விபச்சாரம் சிறியதொரு விடயமாக கருதப்படுவதாலேயே அநேகமானவர்கள் இத் தண்டனைக்கு எதிராக போர்க் கொடி தூக்குகின்றனர்.அப்படி என்ன விபச்சாரத்தினால் ஏற்படுகிறது? விரும்பிய ஆண் விரும்பிய பெண்ணுடன் இணைவதால் என்ன பாதிப்பு? என்ற வினாக்களுக்கு சரியா விடையைப் பெறும் போது இவ்வாறான சிந்தனைகள் எழாது.இந்த உலகத்தில் விபச்சாரம் சாதாரண ஒரு விடயமாக பரிணமிக்குமாக இருந்தால் திருமணத்தின் பக்கம் இளைஞர்களின் நாட்டங்கள் குறைவடைந்து விபச்சாரத்தின் பக்கம் நாட்டம் கொள்ளத் தொடங்குவர்.இதன் விளைவாக திருமணக் கட்டமைப்பு செல்லாக் காசாக மாறும்.விபச்சாரம் செய்பவர்கள் பொதுவாக பிள்ளைகள் பெற்றுக் கொள்ள விரும்பாததன் காரணமாக மனித இனப் பெருக்கம் குறைவடையும்.தாய்,தந்தை,மகன் போன்ற குடும்ப உறவுகள்,குடும்பக் கட்டமைப்புக்கள் இல்லாதொழிக்கப்படும்.மனிதனைப் பொறுத்தமட்டில் ஆடு,மாடுகள் போன்று கண்டதைக் கடித்து வாழ்க்கை நடத்தக் கூடியவன் அல்ல.ஒரு குறித்த வயதை எட்டும் வரை குறித்த சிலரின் தேவைகளினை உணரக் கூடியவன்.இவ் விடயமானது உலகம் ஒரு சீரிய முறையில் இயங்குவதையே சவாலுக்குட்படுத்தும்.ஒரு கொலை நடக்கும் போது அதன் பாதிப்பு குறித்த சிலருக்குத் தான் ஏற்படுகிறது.விபச்சாரம் சாதாரண ஒரு விடயமாக பரிணமிக்குமாக இருந்தால் அது உலக கட்டமைப்பையே சீரழித்து விடும்.கொலையை விட விபச்சாரத்தின் மூலமே அதிக பாதிப்புக்கள் ஏற்படப்போகிறது.

உடல் உறவு என்பது ஒரு கனவன்,மனைவிக்கிடையில் நடக்கும் ஒரு புனிதமான உறவாகும்.இயற்கையாக மனிதனில் தூண்டப்படும் ஒரு ஈர்ப்பானது இந்த உறவின் பால் மனிதனை நாட்டம் கொள்ளச் செய்கிறது.இந்த உறவின் மூலமே குழந்தைகள் உருவாகின்றன.இருவர் விபச்சாரம் செய்யும் போது உலகிலுள்ள அனைத்துப் பெண்களும் புனிதமாகக் கருதும் ஒரு பெண்ணின் கற்பு களங்கப்படுத்தப்படுகிறது.அதாவது நானும் நீங்களும் உருவாகக் காரணமான அந்த உறவு அங்கு களங்கப்படுத்தப்படுகிறது.இப்படியான ஒரு புனித உறவானது காமத்திற்கான ஒன்றாக மாற்றப்படுவதையும்,பார்க்கப்படுவதற்கான சூழல் உருவாவதையும்  ஒரு போதும் ஏற்க முடியாது.இன்று கற்பழிப்பிற்கு எதிராக பெண்கள் மிகக் கடுமையாக போராடிக் கொண்டிருப்பது இக் கற்பினை பாதுகாக்கவே! இக் கற்பினைப் பாதுகாக்கும் நோக்கில் எத்தனை பெண்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்?

திருமணமாகாத இருவர் விபச்சாரம் செய்யும் போது அவர்கள் இருவரினையும் திருமணம் செய்வித்து அதனால் ஏற்படும் சில பிரச்னைகளுக்கு ஓரளவு முற்றுப் புள்ளி வைத்துவிடலாம்.இதனால் தான் என்னவோ? இஸ்லாம் திருமணமாகாதவர் விபச்சாரம் செய்யும் போது அவருக்கு கசையடியையே தண்டனையாக வரையறுத்துள்ளது.இந்த உறவில் உள்ள இன்னுமொரு விசேடம் தான் இரு பாலினர் ஒன்றிணைந்தால் குறித்த இருவரும் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி இறைவன் நாடினால் (மத சார்பற்ற ரீதியில் கூறுவதனால் அனைத்து காரணிகளும் சரியாக அமைந்தால்) பிள்ளை உருவாகும் (இது நபி மொழியொன்றின் சுருக்கமான கருத்தும் கூட).சிலர் இதற்கெல்லாம் இன்றைய நவீன காலத்தில் பாதுகாப்பு வழி முறைகள் உள்ளது என்ற விடயத்தினை தூக்கிப் பிடித்துக் கொண்டு விதண்டாவாதற்கு வரலாம்.என்னதான் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அவைகளை ஒரு பூரண பாதுகாப்பு நடவடிக்கையாக குறிப்பிட முடியாது.உலகில் ஆண்டு ஒன்றிற்கு சுமார் 4.4 கோடி கருக்கலைப்பு நிகழ்கிறது.இவர்கள் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளத் தெரியாதவர்கள் அல்ல.இதில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பின் காரணமாக ஆண்டுதோறும் எழுபதாயிரம் பெண்கள் உயிரிழக்கின்றனர்.இவ்வாறான மரணங்கள் எல்லாம் விபச்சாரத்தின் மூலமே ஏற்படுகிறது.இக் கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது இச் சட்டத்தின் மீது கொண்ட அச்சம் காரணமாக விபச்சாரம் குறைவடையும்.விபச்சாரம் குறைவடையும் போது இவ்வாறான பாதுகாப்பற்ற கருக்கலைப்பின் மூலம் ஏற்படும் மரண சம்பவங்கள் குறைவடையும்.அதாவது ஒருவருக்கு வழங்கப்படும் மரண தண்டனை பலரைக் காக்கப்போகிறது.

மேலும்,விபச்சாரத்தின் மூலம் பிறந்த  குழைந்தையினை கையிலேந்தி தாலாட்டுப்பாட யாரும் விரும்புவதில்லை.இப் பிள்ளை ஒரு அவமானச் சின்னமாக கருதப்படும்.அதாவது இறைவனின் படைப்பொன்று விபச்சாரத்தின் காரணமாக அவமானச் சின்னமாக மாற்றப்படுகிறது.இப் பிள்ளையை கருவில் அழிக்க பலரும் நாட்டம் கொள்வார்கள்.கருவில் உருவாகிய பிள்ளையை அழிப்பதற்கும் உலகை கண் விழித்துப் பார்த்த குழந்தையை அழிப்பதற்கும் இடையில் எதுவித வேறுபாடுமில்லை.எனினும்,எமது கண்களுக்கு கருவில் அழிப்பது விஞ்ஞான வளர்ச்சியாக தென்படும்.அதாவது மனித அங்கீகாரம் பெற்ற கொலைகள் (கருக்கலைப்பு) ஆண்டுதோறும் சுமார் 4.4 கோடி நிகழ்கிறது.இஸ்லாத்தின் இக் கடுமையான சட்டத்தின் மூலம் இக் கொலைகள் குறையப்போகிறது..உலகினை கண் விழித்துப் பார்த்த குழந்தை ஒன்றினை வெளிக்காட்ட விரும்பாத எத்தனையோ தாய் மார் பிறந்த பச்சைக் குழந்தையைக் கொன்று புதைத்துள்ளனர்.பிறந்த குழைந்தையினை வீதியில் வீசி நாய் தூக்கி வந்த சந்தர்ப்பங்களும் உள்ளன.நாய் ஒரு பிள்ளையைத் தூக்கிக் கொண்டு வருவதை பார்க்கும் மனிதர்களிடம் அப் பிள்ளையை வீசிய தாயைக் கொடுத்தால் அவர்கள் கடித்து குதறுவதில் நாய்களும் தோற்றுவிடும்.குழந்தை கொல்லப்படுவதானது வெளிக் கண்களுக்குப் புலப்படும் போதே மனிதன் ஆவேசப்படுகிறான்.இந்த நிகழ்வுகளின் போது அக் குறித்த தாயைக் கொன்றாலும் தவறில்லை என்ற முடிவுக்கும் வருகிறான்.இது நிகழ்வதற்கு எது காரணமோ அதற்கு இஸ்லாம் மரண தண்டனை வழங்கும் போது மாத்திரம் எதிர்ப்பது ஏன்?

விபச்சாரத்தின் மூலம் கருக்கொண்டு பிறந்த குழந்தை மீது அக் குறித்த தாய் கூட பெரிதும் கரிசனை காட்டாத சந்தர்ப்பங்களையே நடைமுறை வாழ்வில் காணமுடிகிறது.அந்த பிள்ளை ஏதோ ஒரு கோணத்தில் தான் விரும்பிய பிரகாரம் வாழும்.பதப்படா பூமியில் ஒரு போதும் வேளாண்மை செய்ய முடியாது.நச்சு முட்கள் செறிந்த பற்றைகள் தான் அதனை ஆளும் என்பது இயற்கையின் நியதிகளில் ஒன்றாகும்.அக் குழந்தை எப்படித்தான் ஒழுக்க விழுமியங்களோடு வளர்க்கப்பட்டாலும் சமூகத்தில் அக் குழந்தைக்குரிய அந்தஸ்து வழங்கப்படாது.மாணவர்களின் கிண்டல்களின் முன் சரியான உளக் கட்டமைப்புடன் பாடசாலை சென்று கல்வி கற்பது கூட சவாலுக்குரிய விடயமாகும்.அதிலும் பெண் குழந்தை என்றால் அவளின் பிறப்பே அவள் தாய் செய்த குறித்த குற்றத்தை செய்ய உளவியல் ரீதியாக தூண்டப்படுவாள்.அதாவது விபச்சாரத்தின் காரணமாக பிறந்த குழந்தையின் சந்ததிகள் மிகக் கேவலமான கலாச்சாரத்தை நோக்கித் தள்ளப்படும்.இதுவெல்லாம் கற்பனை அல்ல நடப்பதை சீர் தூக்கிப் பார்த்தாலே ஏற்றுக் கொள்ளும் விடயங்களாகும்.இக் குற்றத்தைப் புரிந்த பெண்ணின் பெயரினைக் கூட வெளியிடாமல் இலங்கை அரசு இவ் விடயத்தை மிகவும் கவனமாக கையாள்கிறது.அதாவது இப் பெண்ணின் பெயர் வெளிப்பட்டால் அப் பெண்ணின் சமூக அந்தஸ்து கேள்விக்குட்படுத்தப்படும் என்பதற்காகும்.ஒரு விதத்தில் நோக்கும் போது இலங்கை அரசை பாராட்ட வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு இலங்கையருக்கும் உள்ளது.அந்தப் பெண்ணின் பெயர் வெளிப்படும் போது அப் பெண்ணால் சமூக அந்தஸ்துள்ள பெண்ணாக வாழ முடியாதென்பதை இவ் விடயம் சுட்டிக் காட்டுகின்றது.இதன் மூலம் சமூக அந்தஸ்து கேள்விக்குள்ளான ஒரு பெண் உலகில் வாழ்வதென்பது சவாலானது என்பதை இலங்கை அரசு கூட ஏற்றுக் கொள்கிறது.இதனைத் தடுப்பதற்கு கடுமையான சட்டங்கள் தான் அவசியமாகிறது.

முறையற்ற பாலியல் தொடர்புகள் மூலம் மிகக் கடுமையான பாலியல் நோய்கள் உருவாகின்றன.இதில் இது வரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத எயிட்ஸ் குறிப்பிடத்தக்கது.இக் குறித்த நோயின் விளைவுகளை மக்களுக்கு அறிவுறுத்தும் பொருட்டு உலக எயிட்ஸ் தினமாக செப்டெம்பர் முதலாம் திகதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இத் தொற்றுக்கு உள்ளாகும் குறித்த நபர் மரணத்தை எதிர்கொள்வார்.இக் குறித்த மருந்து கண்டுபிடிக்கப்படாத எயிட்ஸ் நோய் மக்களுக்கு கூறும் ஒரு விடயம் தான் “மனிதன் முறையான பாலியல் தொடர்புகளில் மாத்திரமே ஈடுபட வேண்டும்” என்பதாகும்.இதனையே இஸ்லாமும் முஸ்லிம்களுக்கு கூறுகிறது.தவறான பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எயிட்ஸ் கூட மரண தண்டனையைத் தான் வழங்குகிறது.இது இஸ்லாத்தை இவ் விடயத்தில் நிறுவும் நடை முறைச் சான்றும் கூட.இவர் மாத்திரம் மரணித்தால் பறவாயில்லை என்று விட்டு விடலாம்.

ஒரு குறித்த நபர் முறையற்ற பாலியல் நடத்தையால் இக் குறித்த நோய்க்கு உள்ளாகிய நிலையில் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது இக் குறித்த நோய் அவரது மனைவிக்கு கடத்தப்படும்.இதன் மூலம் அவரது மனைவி அக் குறித்த நோயின் விளைவுகளை எதிர்கொள்வார்.இதன் காரணமாக இவரது மனைவியின் கற்பொழுக்கம் சமூகங்களிடையே கேள்விக்குட்படுத்தப்படும்.மேலும்,இவர் யார்? யாருடன் எல்லாம் பாலியல் தொடர்பு கொள்கிறாரோ? அவர்கள் எல்லாம் இக் குறித்த நோய்க்கு உள்ளாகி மரணத்தினை தழுவுவார்கள்.அதாவது இக் குறித்த முறையற்ற பாலியலில் ஈடுபட்ட நபரின் மூலம் பலருக்கு இந் நோய் கடத்தப்படும்.இதன் மறு வடிவம் “இக் குறித்த நோய்க்கு உள்ளானவர் பலரினைக் கொல்லப்போகிறார்” என்பதாகும்.இக் குறித்த நோய் உள்ளவர் தனக்கு இந் நோய் இருப்பதாக அறிவதற்கே சில வருடங்கள் எடுக்கும்.அது துலங்கலைக் காட்டுவதற்கு முன்பே இவரின் மூலம் பலர் இந் நோயினை அடைந்து கொள்வர்.இப்படியாகன மிகப் பாரதூரமான விளைவுகள் இவ் விபச்சாரம் மூலம் ஏற்படுகின்றது.இதன் காரணமாகத் தான் என்னவோ? இஸ்லாம் விபச்சாரத்திற்கு  மிகக் கடுமையான தண்டனையை அமுல் செய்துள்ளது.

சவூதியில் விபச்சாரம் செய்யும் ஒருவரை கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்ற கடுமையான சட்டம் அமுலில் உள்ளது.சவூதியில் நடைபெறும் குற்றத்திற்கு சவூதிச் சட்டமே நடைமுறைப்படுத்தப்படும்.ஒரு நாடு இன்னுமொரு நாட்டின் சட்டத்தில் கை வைப்பது அழகானதல்ல.ஒரு நாட்டின் சட்டத்தில் இன்னுமொரு நாடு கை வைப்பது அதன் இறையாண்மையில் கை வைப்பது போன்றாகும்.சமீபத்தில் இலங்கையைச் சேர்ந்த றிஸானா என்ற சிறுமிக்கு சவூதியில் மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது.இக் குறித்த சிறுமியை விடுவிக்கும் அதிகாரம் சவூதி மன்னனுக்கு கூட இருக்கவில்லை என்பதை அன்று அம் மன்னன் இச் சிறுமியைக் காப்பாற்ற அதீத சிரத்தை எடுத்தும் இயலாமல் போன விடயம் சுட்டிக் காட்டுகிறது.குறித்த கொலைக் குற்றம் சுமத்தியவர் றிஸானாவினை மன்னித்திருந்தால் றிஸானா அக் கணமே விடுவிக்கப்பட்டிருபார்.

ஆனால்,இப் பெண் விபச்சாரக் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.எனவே,விபச்சாரத்திற்கு என்ன தண்டனையோ அத் தண்டனை இங்கே வழங்கப்படும்.இக் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டுள்ள பெண்ணிற்கான தண்டனையை குறைக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.சவூதி போன்ற நாடுகளில் நீதிபதிகளுக்கு உயர் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கும்.மன்னர்களுக்கு கூட கட்டுப்பட மாட்டார்கள்.சவூதியில் மட்டுமல்ல எந்த நாட்டில் உள்ள நீதிபதியும் எவ் ஆட்சியாளருக்கும் அஞ்சவும் மாட்டார்,அஞ்சவும் கூடாது.இலங்கையின் நீதித்துறைக் கட்டமைப்பில் அரசியற் தலையீட்டைக்  கட்டுப்படுத்தற்கென்றே சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இலங்கை போன்ற நாடுகளை விட சவூதியில் நீதிபதிகளுக்கான அதிகாரங்கள் ஒரு படி மேல் காணப்படும்.இப் பெண்ணை சவூதி அரசு விடுவிப்பதற்கான சாதகத் தன்மை மிகக் குறைவு.மேலும்,இப் பெண்ணை விடுவிப்பதானது சவூதியில் இச் சட்டத்தை நடைமுறைபடுத்துவதனை கேள்விக்குட்படுத்தும்.இப் பெண்ணிற்கு ஒரு சட்டம் ஏனையோருக்கு ஒரு சட்டம் என நடைமுறைப்படுத்த முடியாது.நபிமொழியொன்றில் “தனது அன்பு மகள் பாத்திமா களவு செய்தாலும் கை வெட்டித் துண்டிப்பேன்”.என்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.இப் பெண்ணை விடுதலை செய்தால் ஏனையோரையும் விடுவிக்க வேண்டும் என்ற ஒரு இக்கட்டான நிலைக்கு சவூதி அரசு தள்ளப்படும்.இப் பெண் விடுதலையாவது அவ்வளவு இலகுவானதல்ல.

சவூதி நாட்டில் இச் சட்டம் நடைமுறையில் உள்மையை சிறு பிள்ளையும் அறியும்.அறியாமையால் இக் குற்றம் நிகழ்ந்துள்ளது என நியாயம் கற்பிப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது.இப் பெண் சவூதியில் இக் குற்றத்தினை புரிந்துள்ளதன் காரணமாக சவூதியில் நடைமுறையில் உள்ள கலாச்சாரம் இப் பெண்ணினால் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.இப் பெண்ணை ஏதோ ஒரு சிறப்புச் சலுகை மூலம் சவூதி அரசு விடுவித்தாலும் இதற்கு பிறகு இவ்வாறான ஒரு சலுகையை சவூதி அரசு வழங்குவது சாத்தியமற்ற ஒன்று.இச் சட்டத்தினை இலங்கை அரசு ஏற்காது போனால் குறித்த நாட்டிற்கு தனது மக்களினை அனுப்புவதைத் தான் தடை செய்ய வேண்டும்.அல்லாது போனால் குறித்த நபர்கள் அக் குற்றத்தினை புரியாமல் இருப்பதற்கான தகுந்த அறிவுருத்தல்களை வழங்க வேண்டும்.

இப் பிரச்சனை தோற்றம் பெற்றதன் பிற்பாடு கூட இலங்கை அரசு சவூதி போன்ற நாடுகளுக்கு அனுப்பும் பெண் வேலையாட்கள் பற்றி மாத்திரமே கரிசனை கொண்டுள்ளது.இது போன்ற கரிசனை றிஸானா மரண தண்டனைக்கு உட்பட்ட காலப்பகுதியில் தோன்றி மிகக் குறுகிய காலத்தினுள் மறைந்தமை குறிப்பிடத்தக்கது.ஏன் ஆண்கள் விபச்சாரம் செய்ய மாட்டார்களா? அல்லது ஆண்கள் விபச்சாரம் செய்து பிடிபட்டால் இத் தண்டனை வழங்கப்படாதா? சவூதி போன்ற நாடுகளுக்கு பெண்களை வேலைக்கு அனுப்புவதற்கு முஸ்லிம்களிடையே பலத்த விமர்சனம் உள்ளது.கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் இவ் விடயத்தினை அடிக்கடி நினைவூட்டுவார்.இலங்கையில் வேலை வாய்ப்புக்கள்,கைத்தொழில் முன்னேற்றற்றுவதன் மூலம் இதனைத் தடுக்க வேண்டும்.

ஒரு இலங்கை முஸ்லிம் பெண் மீது இலங்கை அரசிற்கு இத்தனை அக்கரையா? நுரைச்சோலை சுனாமி வீட்டுத் திட்டமானது இன வாத பிரச்சனையால் இன்றும் மக்களிடம் கையளிக்க முடியாத நிலையில் உள்ளது.முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனாவின் கோரத் தாண்டவம் அளுத்கமையில் இடம்பெற்றது யாவரும் அறிந்ததே!எத்தனையோ விடயங்கள் இவ் நல்லாட்சியில் சிறிது சிறிதாக கிளறப்பட்டுக் கொண்டிருக்கின்றது.இதனை பெயருக்காவது கிளறியுள்ளார்களா? இதன் பிரதான சூத்திரதாரி இன்றும் இனவாதத்தை கக்கிக்கொண்டு தானே உள்ளார்.இப்படி இலங்கை முஸ்லிம்கள் அனுபவிக்கும் இடர்கள் எத்தனையோ இலங்கையில் கொட்டிக் கிடக்கிறது.சவூதியில் மரண தண்டனைக்குள்ளான முஸ்லிம் பெண் மீது காட்டும் அக்கரையின் ஒரு சிறு பகுதியேனும் இலங்கை அரசு இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மீது காட்டுவதாக அறிய முடியவில்லை. 

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் 

சம்மாந்துறை.