அதிகரித்துவரும் மதவெறுப்புணர்வை தணிக்கும் வகையில் முஸ்லிம், சீக்கியர்களுக்கு வெள்ளை மாளிகை அழைப்பு!

White-House-America11

எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாடு உலக மக்களிடையே மெல்ல, மெல்ல விடைபெற தொடங்கியுள்ளது. என்மதம் என்றால் சம்மதம், உன்மதம் என்றால் சம்ஹாரம் என்ற மதவன்முறை சார்ந்த புதிய வெறுப்புணர்வு கலாச்சாரம் உலகம் முழுவதும் வேரூன்ற தொடங்கியுள்ளது.

இந்தியாவில் மாட்டிறைச்சி சமைத்து உண்டதாக பரவிய வதந்தியின் விளைவாக தாத்ரியில் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடங்கி, பாகிஸ்தானில் புனிதநூலை அவமதித்ததாக பரப்பப்பட்ட வதந்தியின் பலனாக எரியும் செங்கல் சூளை நெருப்பில் தூக்கி எறியப்பட்டு ஒரு தம்பதியர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம்வரை உலகம் முழுவதும் அன்றாடம் மதம்சார்ந்த வன்முறை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே வருகின்றன.

குறிப்பாக, கடந்த இரண்டாண்டுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தலையெடுக்க ஆரம்பித்த பின்னர், மேற்கத்திய நாடுகளில் ஆங்காங்கே வன்முறை வெறியாட்டங்களும், தீவிரவாத தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. அவர்களிடம் வாங்கிய அடியை யாருக்கு கொடுப்பது? என்பது தெரியாமல் ஆள்தேடும் உள்ளூர் நபர்கள், அப்பாவிகளான சிறுபான்மையின சமுதாயத்தினர் மீது தங்களது பகையையும், வன்மத்தையும் வெளிப்படுத்த தொடங்குகின்றனர்.

அவ்வகையில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் போன்ற சிறுபான்மையின மக்களின்மீது சமீபகாலமாக எதிர்பாராத தாக்குதல்களும், மதவெறுப்புணர்வால் அவர்களை நிராகரிக்கும் சம்பவங்களும் பெருகி வருகின்றன. 

கடந்த இரண்டாம் தேதி கலிபோர்னியா நகரில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு முஸ்லிம் தம்பதியர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டதையடுத்து அங்கு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த வெறுப்புணர்வுக்கு தூபமிடுவதுபோல், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ‘இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது’ என வெளியிட்ட விஷக்கருத்து, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களிடையே அமெரிக்காவின் மீதும், கிறிஸ்துவ மதத்தின்மீதும் அதிருப்தியையும், பகையையும் சம்பாதித்து தந்துள்ளது. 

டொனால்ட் டிரம்ப்-ஐப்போல் நாட்டுக்கொரு புல்லுருவி ஆங்காங்கே மக்களுக்குள் சிண்டுமுடியும் வேலையை செய்து வந்தாலும், இந்தியாவைப் பொருத்தவரை மனிதநேயத்துக்கு முன்னர் மதநம்பிக்கையும், மததுவேஷமும், மதவெறுப்புணர்வும் ஒரு பொருட்டே அல்ல என்பதை சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பின்போது மதஅடையாளங்களை மறந்தும், சில இடங்களில் மதஅடையாளங்களை மறைத்தும் மக்களுக்கு உதவிய அன்பு உள்ளங்கள் ஒட்டுமொத்த உலகத்துக்கும் நிரூபித்துள்ளன.

ஆனால், இந்த நிரூபணம் அமெரிக்காவில் வாழும் மக்களிடையே அதிகரித்துவரும் மதம்சார்ந்த வெறுப்புணர்வை ஆற்றுப்படுத்துமா? என்பது சந்தேகமே..!

இந்நிலையில், கடந்த வாரம் கலிபோர்னியா நகரில் ஒரு சீக்கிய ஆலயம் சூறையாடப்பட்டது. தலைப்பாகையுடன் கால்பந்து போட்டியை காணச் சென்ற ஒரு சீக்கியரை அனுமதிக்க ஸ்டேடியம் நிர்வாகிகள் மறுத்துள்ளனர். 

இதைப்போல் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டேவரும் மதம்சார்ந்த வெறுப்புணர்வை தணிக்கும் வகையில், தங்கள் நாட்டு அரசு உங்கள் சமுதாயத்துக்கு எவ்வளவு ஆதரவாக செயல்பட்டு வருகின்றது? என்பதை விளக்கும் வகையில் அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் சீக்கிய மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அதிபரின் வெள்ளை மாளிகையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பங்கேற்க மாட்டார் என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் தெரிவித்துள்ளார்.