கிரீன் கார்ட் ரத்துச் செய்யப்பட்ட நிலையில் வீசாவுக்காக காத்திருக்கும் பொன்சேகா !

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அமெரிக்கா செல்லும் நோக்கில் வீசாவுக்காக காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
Sarath-Fonseka_

ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் ராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா, அமெரிக்கா செல்வதற்காக வீசாவுக்கு விண்ணப்பித்துள்ளார். தற்போதைக்கு இரண்டு வாரங்கள் கடந்தும் இதுவரை அவருக்கான வீசா வழங்கப்படவில்லை. 

ராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்காவின் கிரீன் கார்ட் வதிவிட உரிமை வழங்கப்பட்டிருந்தது. எனினும் அண்மையில் கிரீன் கார்ட் நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து அவரது கிரீன் கார்ட் ரத்துச் செய்யப்பட்டிருந்தது. 

அவர் மீண்டும் கிரீன் கார்ட்டுக்காக விண்ணப்பித்துள்ள போதிலும் அமெரிக்க அதிகாரிகள் அது தொடர்பில் இதுவரை எதுவித பரிசீலனையும் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில் அவரது வீசா விண்ணப்பமும் காரணங்கள் ஏதும் கூறப்படாமல் தாமதிக்கப்பட்டுள்ளது. 

சரத் பொன்சோக ராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் இலங்கை ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கும் மேற்குறித்த சம்பவங்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. 

ஏனெனில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் தொடர்பில் அமெரிக்கா கடுமையான விதிகளைப் பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.