மனித எச்சங்களை பரிசோதிக்க வெளிநாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை!!

 

மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரப் பகுதியில் கடந்த இரு வருடங்களுக்கு முன் கண்டுப்பிடிக்கப்பட்ட மனித எச்சங்களின் கால நிர்ணயங்கள் மற்றும் அதன் வயதுகளை கண்டறிவதற்கு கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் 5 வெளிநாட்டு நிறுவனங்களின் பெயர்களை மன்றில் சமர்பித்துள்ளனர்.

 

இவ் மாதிரி எச்சங்களை அனுப்புவதற்கு முன் மன்றுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் எனவும் காணாமல் போனவர்கள் சார்பாக இவ் வழக்கில் ஆஐராகியிருக்கும் சட்டத்தரணிகளுக்கு முன் இவ் மாதிரி எச்சங்கள் பொதியிட்டே அனுப்ப வேண்டும் என மன்று உத்தரவு பிறப்பித்ததுள்ளது.

 

கடந்த 2013ம் ஆண்டு பிற்பகுதியில் திருக்கேதீஸ்வரம் ஆலய பகுதியிலிருந்து மாந்தை பகுதியிலுள்ள மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக வீதியோரத்தில் குழாய்கள் பதித்து சென்ற வேளையிலே இவ் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.

images

இங்கு கண்டு பிடிக்கப்பட்ட புதைகுழி 32 தினங்கள் முன்னாள் மன்னார் நீதிபதி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அகழ்வு செய்யப்பட்டபோது 83 மனித மண்டையோடுகளும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இது சம்பந்தமான வழக்கு கடந்த வெள்ளிக் கிழமை மன்னார் நீதிமன்றில் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐ முன்னிலையில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது

இவ் வழக்கில் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த குற்றத்தடுப்பு உதவி பொலிஸ் அதிகாரி நானக பண்டார, கே.ஏ.மனோச், மற்றும் காணாமல் போனவர்கள் சார்பாக சட்டத்தரனி வீ.எஸ்.நிரஞ்சன் உட்பட மன்னார் சட்டத்தரனிகளும் ஆஐராகியிருந்தனர்.

கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற இவ் மன்னார் புதைகுழி வழக்கில் குற்றபுலனாய்வு பிரிவினரால் மேலதிக அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்கனவே புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் அனுராதப்புர வைத்தியசாலையில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருக்கின்ற மனித எச்சங்களின் மாதிரிகளை இலங்கையில் இதன் காலங்களை அளவிட முடியாது என்பதற்காக சர்வதேச ரீதியாக வெளிநாட்டில்தான் இதனை பரிசோதித்து இதன் வயது காலங்களை அளவிட முடியும் என ஏற்கனவே மன்றில் தெரிவிக்கப்பட்டதுக்கு இணங்க வெளிநாட்டின் ஐந்து நிறுவனங்களின் பெயரை கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் மன்றில் சிபாரிசு செய்திருந்தார்கள்

அதேவேளையில் காணாமல் போனவர்கள் சார்பாக ஆஐராகியிருந்த சட்டத்தரணி வீ.எஸ்.நிரஞ்சன் மன்றில் தனது வாதத்தில்,

இந்த வருடம் ஆவணி மாதம் 15ஆந் திகதி மன்றில் சமர்பித்த நகர்த்தல் பத்திரம் மூலம் சட்டத்தரணிகளாகிய நாங்கள் மூன்று நிறுவனங்களின் பெயர்களை சிபாரிசு செய்திருந்தோம். 

அந்த மூன்று நிறுவனங்களில் எதாவது ஒன்றை இந்த நீதிமன்றம் தெரிவு செய்து கால நிர்ணய வயதை அளவிடுவதற்கு ஏதுவாகும் என கண்டு கொண்டால் அதற்கு நாங்கள் சம்மதம் தெரிவிப்பதாகவும் அல்லாவிடில் இது விடயமாக எங்களுக்கு ஒரு கால நேரம் தேவைப்படுவதாக சட்டத்தரணிகள் மன்றில் கோரியிருந்தார்கள். 

நீதிபதி சட்டத்தரணிகளுக்கு தெரிவித்தபோது, அமெரிக்காவிலுள்ள ஒரு நிறுவனமும் சீனாவிலுள்ள ஒரு நிறுவனத்துக்குமே குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவு செய்தததுடன் ஏற்கனவே காணாமல் போனவர்கள் சார்பாக ஆஐராகியிருந்த சட்டத்தரணிகளாகிய நீங்கள் வழங்கியிருந்த மூன்று நிறுவனங்களின் பெயர்களுடன் ஐந்து நிறுவனங்களின் பெயர்களை இன்று குற்றத்தடுப்பு பொலிஸார் மன்றில் சமர்பித்துள்ளனர்.

அத்துடன் சட்டத்தரணிகளின் கோரிக்கைகளை மன்று கவனத்தில் எடுத்து மூன்று நிறுவனங்களின் எதாவது ஒன்றுக்கும் இந்த மாதிரிகளை அனுப்பும் படியும் இதை அனுப்புவதற்கு முன் நீதிமன்றின் அனுமதியை பெறப்பட வேண்டும் எனவும் அத்துடன் பாதிப்படைந்த அதாவது காணாமல் போனவர்களின் சார்பாக ஆஐராகியிருக்கும் சட்டத்தரணிகளுக்கு முன்னால் இந்த மாதிரிகள் பொதியிடப்பட்டு அனுப்பப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என இவ் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளார்.

சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டப்பட்ட மூன்று நிறுவனங்களில் ஒன்றில் பெறப்பட்ட அறிக்கையை 2016ம் ஆண்டு மார்ச் மாதம் நாலாம் திகதி இவ் அறிக்கையை மன்றில் சமர்பிக்கும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நேரத்தில் குற்றபுலனாய்வு பிரிவினர் இந்த எச்சங்களை அளவிடுவதற்கு பெருந்தொகையான செலவுகள் ஏற்படும் எனவும் நீதிமன்றின் கவனத்துக்கு மீண்டும் கொண்டு வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.