அபிலாஷ் எனும் சுனாமி பேபிக்கு உதவக்கூடிய மனம் யாரிடமுள்ளது !

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட நாள். இலங்கையை மட்டுமன்றி ஆசிய, கிழக்காசிய நாடுகளைத் துவம்சம் செய்த சுனாமி என்ற இயற்கை அனர்த்தம். 

1957இல் ஏற்பட்ட பெருவெள்ளத்தைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றோம். (எனக்கு வயது 2 1/2 ) 1978ம் ஆண்டு டிசம்பர் மாதக் கடைசியில் …. (சுனாமி தினத்தில்) வீசிய சூறாவளியைக் கண்டிருக்கின்றோம். அந்த வகையில் 2004ல் ஏற்பட்ட சுனாமி நாம் கண்ட புதிய வகை பேரனர்த்தம். 

Img0110

சுனாமியின் கோரத் தாண்டவத்தால் உயிர் நீத்த அத்தளை உள்ளங்களுக்காகவும் எல்லோரையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனிடம் பிராத்தித்த வண்ணம். 

இன்னும் இருவாரங்களில் சுனாமி ஏற்பட்ட 11ஆவது வருட நிறைவு தினத்தை உறவுகளை இழந்த உள்ளங்கள் நினைவு கூரவுள்ளன. இந்த நினைவு கூரலுடன் சுனாமியில் அள்ளுண்டு சென்ற பெற்றோர் உறவினரையும் பிரிந்து அயலவரால் கண்டெடுக்கப்பட்ட பிறந்து இரண்டு மாதமும் ஒருவாரமும் கொண்ட பாலகன் அபிலாஷைப் பற்றி எவருமே மறந்து விடமுடியாது. இந்தப் பாலகனும் சுனாமியின் ஓர் அடையாளச் சின்னமாகும். 

JEYARAJAH BABY 81

 

கல்முனை பீச்றோட்டில் ஜெயராஜ் ஜூனிதா இளம் தம்பதியரின் தலைமகன் அபிலாஷ் சம்பவ தினத்தன்று தந்தை குருக்கள் மடத்திலுள்ள பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்த வேளை சுனாமி ஏற்பட்ட போது தாய், சேய், அம்மம்மா ஆகியோர் என மூவரும் திசையறியாது பிரிந்து விட்டனர். 

சுனாமி ஏற்பட்ட மறுநாள் அதிகாலை 4.00 மணியளவில் தனது வீட்டுக்கு வந்த அபிலாஷின் தந்தை ஜெயராஜ் வீடும் அதனோடு இணைந்து உடமைகளும் காணாமற் போயிருப்பதைக் கண்டு மனைவி, மகன், மாமி ஆகியோருக்கு என்ன நடந்தது அவர்கள் தவறிவிட்டர்களா அல்லது அகதியாக எங்காவது இருக்கிறார்களா என்று தெரியாமல் அலைக்கழிக்கப்பட்ட நிலையில் யாரோ ஒருவர் சிலர் அம்பாறை வைத்தியசாலை, முகாம்களில் இருப்பதாகத் தகவல் கூறினர். 

இதையடுத்து அங்கு சென்ற ஜெயராஜ் ஒருவழியாக மாமியைக் கண்டு பிடித்து மனைவி, பிள்ளைகள் பற்றிக்கேட்ட போது உலகமே மறு முனையாகச் சுற்றத் தொடங்கியது போன்ற உணர்வு. 

மீண்டும் ஏதோ ஒரு நம்பிக்கையில் கல்முனையை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது என்ன ஆச்சரியம் சம்மாந்துறை பகுதி பிரதான வீதி வழியாக தடுமாறிய நிலையில் அம்பாறையை நோக்கியவாறு மனைவி நடந்து வருவதைக் கண்ட ஜெயராஜ் இறைவனுக்கு நன்றி கூறியவனாக மனைவியை அணுகிய போது ஐயோ பரிதாபம் மனைவி மன நிலை குழப்பிப் போயிருந்தார். 

ASIA-QUAKE-SRI LANKA-BABY

அவரை ஒருவாறு சமாளித்துக் கொண்டு மீண்டும் அம்பாறையில் இருந்த அம்மாவோடு இணைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அபிலாஷின் அம்மா ஜுனிலதா அனுமதிக்கப்பட்டார். 

அபிலாஷின் நிலைப்பாடு தெரியாமல் மூன்று நாட்களாக அம்பாறை அகதி முகாமில் (பன்சல) தங்கியிருந்த ஜெயராஜ் டிசம்பர் 29ம் திகதி காலையில் குடிப்பதற்காக அருகில் இருந்த ஹோட்டலுக்குச் சென்ற போது, ஸ்ரீஸ்கந்தராஜா என்பவரைக் கண்டு கதைத்துக் கொண்டிருந்த போது, மகன் அபிலாஷ் பற்றி கதை வந்தது. அப்போது ‘ஸ்ரீஸ்’ கூறினார். 4,5, மாதக்குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகத் தாம் கேள்விப்பட்டதாகவும் ஜெயராஜிடம் கூறிய போது புதுத் தெம்புடன் நம்பிக்கையும் ஏற்பட்ட நிலையில் மீண்டும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு வந்து மீண்டும் ஒரு சல்லடைத் தேடுதல் நடாத்தப்பட்டது.

30ம் திகதி அதிர்ஷ்ட வசமாக கல்முனை வைத்தியசாலை எல்லைக்குள் முகாமிட்டு அங்கு பணியாற்றியவர்களிடம் எல்லாம் அபிலாஷைப் பற்றி பேசிய போது அங்கே ஒரு தகவல் கசிந்தது.

அழகையா என்ற முதியவர் கண்டெடுத்த குழந்தையை ஒரு தாதியிடம் கொடுத்த கதை வெளிவரத் தொடங்கின. அதைத் தொடர்ந்து வைத்தியசாலை டாக்டர் விடுதியில் தங்கியிருந்த டாக்டர் ஒருவரிடம் அபிலாஷ் பற்றிக் கேட்ட போது அவர் ஆயிரக்கணக்கான பிள்ளைகள், பெரியவர்கள் இறந்துள்ள நிலையில் உமது பிள்ளையைப் பற்றி எவ்வாறு நாம் அறிவது என்று கூறிகையை விரித்து விட்டார். 

unnamed

மிகவும் கவலையுடன் விடுதியை விட்டு வெளியேறும் போது அனேகமாக அவ்வைத்தியரின் மனைவியாக இருக்கவேண்டும். ஜெயராஜை அழைத்து “காணாமற் போனது ஆண்பிள்ளையா? பெண்பிள்ளையா?” என்று கேட்டுவிட்டு அந்தப்பெண் டாக்டரை அழைத்து “இஞ்சப்பாருங்கோ அது பொடியனல்லோ” என்று கூறவும் சந்தேகம் வலுத்த நிலையம் ஜெயராஜ் உடனடியாக நேராக பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடொன்றை பதிவு செய்தார். இச்சம்பவம் 30 அல்லது 31ம் திகதி நடைபெற்றிருந்தது.

பொலிஸாரிடம் முறையிட்டதைக் தொடர்ந்து சுனாமி பேபி அவன் தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தபொலிஸ் பரிதகர்ஏ. எல். எம்.ஜெமீல் மேற்கொண்டார். அவர் மேற்கொண்ட தீவிரபுலன் விசாரணைகளையடுத்து அம்பாறை மாவட்டம் சென்றல் கேம்ப் (மத்திய முகாம்) பிரதேசத்தை அண்மித்த ராணமடு என்ற இடத்தைச்சேர்ந்த வைத்தியசாலையில் பணியற்றிக் கொண்டிருக்கும் ஒரு பெண் மருத்துவ உத்தியோகத்தரின் கைவசம் குழந்தை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அக்குழந்தை பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. 

81192

இதனைத் தொடர்ந்து ஒன்பது பெற்றோர் இக்குழந்தைக்கு உரிமை கோரி வைத்தியசாலைக்குப் படையெடுத்த போதும் முழு வைத்தியசாலையுமே அல்லோலகல்லோலப்பட்டது. இந்த கபளிகரம் காரணமாக ஜெயராஜ் உட்பட அவரது உறவினர்கள் வைத்தியசாலையின் கடமைகளுக்குத் தடையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஒரு நாள் முழுவதும் தடுப்புக்காவலிலும் வைக்கப்பட்டனர். 

கண்டெடுக்கப்பட்ட அபிலாஷ் தொடர்பாக சட்ட நீதி, நடைமுறைகள் பின்பற்றப்பட்டதனால் 2005.01.05ம் திகதி கல்முனை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் முதலாவது வழக்கு விசாரணைக்கு வந்ததைத் தொடர்ந்து வைத்தியசாலையில் பொலிஸ் காவலுடன் உள்ள பிள்ளையை வாரத்தில் இரண்டு நாட்கள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 

unnamed_Fotor

நீதிமன்றத்தில் வழக்கு ஆரம்பிக்கப்பட்ட வேளை தொடக்கம் யுனிசெப் நிறுவனப் பிரதிநிதிகள் குழந்தையின் சார்பில் அனுசரணையாளர்களாகச் செயற்பட்டனர். சட்டத்தரணி மனார்டீன் இக்குழந்தை தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது முழு மனதோடு எவ்வித கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாக வழக்காடியமைக்காக அபிலாஷின் குடும்பத்தவர்கள் சட்டத்தரணி மனார்பீ னுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். 

மொத்தம் 04 தவணைகளில் நடைபெற்ற இவ்வழக்கின்போது பெருமளவிலான உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் வழக்கை நேரடி ஒளிபரப்புச் செய்தமை இலங்கை வரலாற்றில் நீதிமன்ற விசாரணை ஒன்று ஒளிபரப்புச் செய்யப்பட்டமை முதற் தடவையாகும். 

இறுதியாக நீதிமன்ற உத்தரவுப்படி மரபணுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 16.02.2005ல் உண்மையான பெற்றோர் ஜெயராஜ் – ஜுனிலதா தான் என்பதை நீதிமன்றம் உறுதி செய்து பெற்றாரிடம் பிள்ளை ஒப்படைக்கப்பட்டது. தனியார் நிறுவனம் நடாத்தும் குட்மோர்னிங் அமெரிக்கா நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்காக அபிலாஷும் அவனது பெற்றோர்களும் மார்ச் 1 2005ம் ஆண்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியுடன் சேர்ந்து மொத்தம் 12 நாட்கள் (2 நாள் போக்குவரத்து) அமெரிக்காவில் தங்கியிருந்த அபிலாஷின் குடும்பத்துக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பிக்கொண்டிருந்த வேளை அங்கு சமூகமளித்த ஒரு நடிகை உதவி, செய்வதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த உதவி இதுவரை எமக்குக் கிட்டவில்லை. 

அமெரிக்கா அரசு எங்களுக்கு ஒரு வருட காலம் விசா வழங்கியும் 14 நாட்களில் எம்மை அழைத்துச் சென்றவர்கள் அநாதரவாக எமதூரில் இறக்கி விட்டுச் சென்று விட்டனர். 

இன்னொரு தடவை கலிபோர்னியாவைச் சேர்ந்த இருவர் எனது வீட்டுக்கு வந்து செவ்வியெல்லாம் எடுத்து விட்டுச்சென்றனர். அவர்கள் தங்கிய ஹோட்டலுக்கு 50,000, ஒரு இலட்சம் என்று செலவு செய்தனர். ஆனால் எனது குழந்தைக்கு ஒரு டொபியைக் கூட அவர்கள் வாங்கிக் கொடுக்கவில்லை. மேலும் வருடா வருடம் டிசம்பர் 26க்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் எனது வீட்டுக்கு ஊடகவியலாளர்கள் படையெடுப்பர். இதுவரை எந்தவொரு ஊடக நிறுவனமும் எங்களுக்கு உதவவில்லை. 

அரசியல்வாதிகளாலும், தமிழ் மக்களாலும் கூட எனக்கு உதவிகள் ஈட்டவில்லை. நான் ஒரு சிகை அலங்காரத் தொழில் ஒப்பனைத் தொழில் புரிபவன்.

இன்று வரை எனது உழைப்பிலேயே எனது குடும்பம் நடைபெறுகின்றது. 

எங்களைத் தெரிந்தவர்களும், ஊர் மக்களும் உங்களுக்கென்ன வெளிநாட்டுப் பணமும், அரசாங்கப் பணமும் இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் உள்ளது என்று கூறுகின்றார்கள்.

அவர்கள் மீது தவறல்ல. எல்லாம் செவியேறல்தான். நான் இன்றும் செட்டிப்பாளையத்தில் உள்ள எனது சிகை அலங்காரக் கடையில்தான் வேலை செய்கின்றேன் என்பதைப் பெருமையாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்று தனது மன ஆதங்களை என்னிடம் கைபேசியில் கொட்டித் தீர்த்தார். 

image3

 

சுனாமி பேபி 81 இப்போது 13வயது  பையனாக ஆறாம் ஆண்டில் சித்தி எய்தி 7ம் ஆண்டுக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார். இவர் செட்டி பாளை யம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன், இவரது எதிர்கால வாழ்வு நலன் செழிக்க நாம் எல்லோரும் இவரை ஆசிர்வதிப்போம். இதேவேளை சுனாமி ஞாபகார்த்தமாக உறவுகளை இழந்த குடும்பங்களுக்கும், பிள்ளைகளுக்குமாக அபிலாஷும் அவனது பெற்றோரும் நெஞ்சுருகிப் பிரார்த்தனை செய்கின்றனர்.