பிரதமர் மோடியின் விசா தடை நீக்கம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவில் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட விவகாரம் குறித்த ஆவணங்களை வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் தாக்கல் செய்யுமாறு அந்நாட்டு அரசுக்கு அமெரிக்காவின் பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது நடந்த மதக்கலவரங்களைத் தொடர்ந்து, அமெரிக்க அரசால் வழங்கப்பட்ட அவரது சுற்றுலா விசா 2005-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. பின்னர்  2014-ம் ஆண்டு மோடி இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர் இரண்டு முறை அமெரிக்காவுக்கு சென்று வந்து விட்டார்.

a9c1c7b3-afbb-4e4d-bacc-255246925fe2_S_secvpf

இந்நிலையில் மோடிக்கு வழங்கப்பட்ட விசா நடைமுறைகள் குறித்த ஆவணங்களை, தகவல் சுதந்திர சட்டத்தின் கீழ் தருமாறு, அமெரிக்காவில் இயங்கும் சீக்கிய அமைப்பு அரசுக்கு கடிதம் எழுதியது. எனினும், ஆவணங்களை அரசு தராததால் அந்த அமைப்பு அமெரிக்காவில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

அமெரிக்க அதிபர்கள் புஷ், ஒபமா ஆகியோரது ஆட்சிகாலத்தில் மோடிக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் தடைநீக்கம் குறித்த முக்கியமான ஏழு ஆவணங்களை கேட்டு அந்த அமைப்பு வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை கடந்த 9-ம் தேதி விசாரித்த நீதிபதி, அமெரிக்க அரசு மோடியின் விசா குறித்த ஆவணங்களை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் சமர்பிக்குமாறு உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை பிப்ரவரி 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.