ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய மலாய் தேசிய அமைப்பின் (உம்னோ) வருடாந்த மாநாட்டில் விசேட அதிதியாக பங்குபற்றினார். மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த விஜயத்தின் போது அமைச்சர் ஹக்கீம் உம்னோ அமைப்பின் செயலாளர் நாயகம் மலேசிய சமஷ்டி எல்லைகள் அமைச்சருமான அத்னான் மன்சூரை அவ்வமைப்பின் தலைமையகத்தில் சந்தித்து முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம் மற்றும் இரு தரப்பு உறவுகள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.
ஐக்கிய மலாய் தேசிய அமைப்புக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குமிடையில் நீண்ட காலமாக நிலவிவரும் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது பற்றியும் அவர்கள் கலந்தாலோசித்தனர். அத்துடன் நல்லாட்சி, அபிவிருத்தி என்பன தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் பரஸ்பரம் தூதுக்குழுக்களை அனுப்புவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
அமைச்சர் ஹக்கீம், செனட்டரும் மலேசியாவின் மலாக்கா மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான அலி ருஸ்தம்மையும் சந்தித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் அன்வர் உலூமுதீன் ஆகியோரும் அமைச்சருடன் அங்கு சென்றிருந்தனர்.
ஜெம்சாத் இக்பால்