மழை ஓய்ந்தும் வடியாத தண்ணீரும் முடியாத சோகமும் : சாக்கடையில் நடக்கும் அவலம் !

சென்னையில் மழை ஓய்ந்து 4 நாட்கள் கடந்து விட்டது.

ஆனால் இன்னும் பல தெருக்களில் வெள்ளம் வடியவில்லை. தேங்கி நிற்கும் தண்ணீரில் சாக்கடை கலந்து இருப்பதால் கருமை நிறத்துடன் மாறி துர்நாற்றம் வீசுகிறது. சுற்றிலும் கொசு மொய்க்கிறது.

குறிப்பாக திருவொற்றியூர் கார்கில் நகர், அன்னை சத்யா நகர், அம்பத்தூர், சூளை, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் ராம்நகர், வேளச்சேரி, சோழிங்க நல்லூர், கல்லுக்குட்டை, ஈஞ்சம்பாக்கம், தாம்பரம், அனகாபுத்தூர், முடிச்சூர், லட்சுமிபுரம், எருமையூர், ஊரப்பாக்கம், ஆதனூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவு தண்ணீர் இன்னும் குட்டை போல் தேங்கி கிடக்கிறது.

80ac5d94-2cd0-4563-9379-cbe8cd1f2512_S_secvpf

தண்ணீரை வெளியேற்ற மின் மோட்டார்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. கோவிலம்பாக்கத்தில் 3 ராட்சச மோட்டார்கள் கடந்த 4 நாட்களாக இரவு பகலாக இயக்கப்பட்டு தண்ணீரை அகற்ற முயன்ற போதும் இன்னும் தண்ணீர் வடியவில்லை. இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

விருகம்பாக்கம், ராஜமன்னார் சாலை, காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் முழங்கால் அளவு வெள்ளம் நிற்கிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து உள்ளது. இந்த பகுதிகள் சகதிகள் நிறைந்து வயல்வெளியில் நடப்பது போல் மக்கள் நடக்கிறார்கள்.

சாக்கடை தண்ணீரில் நடந்துதான் வீடுகளுக்கு செல்ல வேண்டியது உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

இந்த தர்ம சங்கடமான சூழ்நிலையில் இருந்து மீள இன்னும் எத்தனை நாள் ஆகுமோ? என்று தவிக்கிறார்கள்.

லாரி லாரியாக குப்பைகளை அகற்றினாலும் ஓரிரு இடம் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாமல் பெரு வாரியான தெருக்களில் குப்பைகள் மலை போல் குவிந்து உள்ளன.

இதனால் அந்த பகுதியில் சுகாதாரகேடு நிலவுகிறது. இரவு கொசு தொல்லை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார்கள்.

சென்னையை பொருத்தவரை வாடகைக்கு குடியிருப்பவர்கள்தான் அதிகம். இந்த வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளதால் துர்நாற்றத்தை போக்கவும் வீடுகளில் படிந்த கரைகளை துப்புரவுப்படுத்தவும் ஒயிட்வாஷ் மற்றும் பெயிண்டிங் செய்ய வேண்டியுள்ளது. சொந்த வீட்டுக்காரர்கள் கடன் பட்டாவது அந்த பணியில் ஈடுபடுகிறார்கள். வாடகைக்கு குடியிருப்பவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார்கள்.