ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் தொடர்ந்து வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் நிதித்துறை தலைவர் அபு சலே என்ற முவாப்பக் முஸ்தபா முகமது அல் கார்முஷ், மேலும் 2 கூட்டாளிகளுடன் அமெரிக்காவின் வான்தாக்குதலில் கடந்த மாதம் கொல்லப்பட்டு விட்டது இப்போதுதான் தெரிய வந்துள்ளது.
இந்த தகவலை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
இதுபற்றி அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் ஸ்டீவ் வாரன், பாக்தாத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கருத்து தெரிவிக்கையில், “ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் மூத்த தளகர்த்தராக அபு சலே திகழ்ந்து வந்தார். அனுபவம் வாய்ந்தவர். அவர் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார்” என்றார்.
இதேபோன்று, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்க தாக்குதல் துறை தூதரான பிரெட் மெக்குர்க், ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில், “அபு சலே, தனது 2 கூட்டாளிகளுடன் இருக்கையில், அமெரிக்க வான்தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார். ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் நிதித்துறை மந்திரிபோல செயல்பட்டு வந்தவர் அபு சலே” என குறிப்பிட்டுள்ளார். அபு சலே கொல்லப்பட்டிருப்பது, ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.