கல்லெறி மீதான சொல்லெறிகள் !

மரணத்தை ஒவ்வொரு ஆத்மாவும் சுவைத்தே தீர வேண்டும் என்று ஆன்மீகம் சொல்கின்றது. அது வரைக்குமான போராட்டம்தான் வாழ்க்கை என்பது. மரணம் நிச்சயிக்கப்பட்டதொன்று. அதனை உலகத்தில் நியாயப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்படுபவைதான் விபத்துக்கள், நோய்கள், முதுமை, மரண தண்டனைகள், கொலைகள், யுத்தங்கள் எல்லாம். இருப்பினும் மறதிக்கும் தவறுக்கும் மத்தியில் படைக்கப்பட்ட மனிதனுக்கு மரணம் என்பது தண்டனையாக விதிக்கப்படும் போது, அதிலிருக்கின்ற வலி முன்கூட்டியே உணரப்படத் தொடங்குகின்றது.

stoned

மெல்ல மெல்ல வலி அதிகரித்து ஒரு உச்சப் புள்ளிக்கு சென்று, மூச்சடங்குகின்றது.
இவ்வாறான ஒரு உணர்வை இலங்கைப் பெண்ணொருத்தி இன்று அராபிய தேசத்தில் உணர்ந்து கொண்டிருக்;கின்றாள். வேறொரு ஆணுடன் தகாத உறவு வைத்துக் கொண்டமை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இலங்கைப் பெண்ணுக்கும், ஆணுக்கும் சவூதி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தின் பிரகாரம் இதனை ‘விபச்சாரமாக’ அடையாளம் கண்டுள்ள அந்நாட்டு நீதித்துறை, ஆணுக்கு 100 கசையடியும் பெண்ணுக்கு கல்லால் எறிந்து கொல்லும் தண்டனையையும் வழங்கி இறுதித் தீர்ப்பளித்திருக்கின்றது. கடந்த வாரத்தில் இவர்களுக்கான தண்டனை நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், கடைசி நேரத்தில் தண்டனை வழங்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டிருக்கின்றது.

 

கருத்து மோதல்கள்
ஓரிரு வருடங்களுக்கு முன்னர் ரிசானா நபீக் என்ற ஒரு இலங்கை யுவதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை இன்னும் மறந்துவிடாத நிலையில், மற்றுமொரு இலங்கைப் பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளமை உள்நாட்டில் கடுமையான கருத்து மோதல்களை தோற்றுவித்திருக்கின்றது. இஸ்லாமிய ஷரீஆ சட்டம் சரியா? தவறா? என்று சிலர் விவாதித்துக் கொண்டிருக்க, இன்னும் சிலர் குறித்த பெண்ணை மீட்பதற்கான மனிதாபிமான போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் குற்றங்கள் குறைவடையும் என்ற சித்தார்ந்தத்தை பொதுவாக எல்லோரும் ஏற்றுக் கொள்கின்ற போதும், உயிரை பறித்தல் அதுவும் கல்லால் எறிந்து கொல்லுதல் என்பது குற்றவாளி திருந்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதில்லையே என்று முற்போக்காளர்கள் கூறுகின்றனர். இந்த மனப்பதிவுதான் இன்று இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையிலான தீர்ப்புக்களை விமர்சிக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த மேற்படி குற்றவாளிகள் இருவரது பெயர்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. குறிப்பிட்ட பெண்ணின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது குடும்பத்தினரின் கௌரவத்தை கருத்திற் கொண்டு பெயரை வெளியிடாமல் இருப்பதற்கு அரசாங்கம் கடுமையாக முயற்சி செய்கின்றது. உண்மையில் இது மிகவும் பாராட்டப்பட வேண்டியதே. என்றாலும் அவரது பெயர், மதம், கல்வியறிவு போன்ற விடயங்கள் கைவசம் இருந்தால், சவூதி அரேபியாவின் தீர்ப்பு பற்றிய நியாயங்களை ஆராய்வது இயல்பாக இருக்கும். அந்தவகையில், மருதானையைச் சேர்ந்த 45 வயதான, திருமணம் முடித்து – குழந்தைகளுக்கு தாயான ஒரு முஸ்லிம் பெண் இவர் என்று நம்பகமாக தெரியவருகின்றது. அதனை வைத்துக் கொண்டே நிலைமைகளை அணுக வேண்டியுமிருக்கின்றது.
அரசாங்கத்தகவல்களின் பிரகாரம், 2013ஆம் ஆண்டு இப்பெண் சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார். 2014ஆம் ஆண்டில் மேற்படி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். இவ்வருடம் ஜூன் மாதமளவில் இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட போதும் ஜூலை 6ஆம் திகதியே சவூதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு இவ்விடயம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அமைச்சு இவ்விடயத்தை ஒரு மாதத்தின் பின்னரே அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தெரிவித்திருக்கின்றது. இந்நிலையில், குற்றமிழைத்த இருவரையும், குறிப்பாக பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்ற குரல்கள் இலங்கையில் பரவலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

 

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் காரசாரமான கருத்து மோதல்கள் இடம்பெற்றுள்ளன. மறுபுறத்தில், இப்பெண்ணை மரண தண்டனையில் இருந்து மீட்பதற்காக மனித உரிமை மற்றும் சமூக நல அமைப்புக்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இவ்வழக்கில் தலையிட்டு மன்னிப்பு வழங்கக் கூடிய அதிகாரம் சவூதி மன்னருக்கே இருப்பதால், ஒக்டோபர் 25ஆம் திகதியிடப்பட்ட மேன்முறையீட்டு மனுவொன்றை இலங்கை வெளிவிவகார அமைச்சு சவூதிக்கு சமர்ப்பித்திருக்கின்றது. உண்மையில் இப்பெண்ணுக்கு மனிதாபினமான அடிப்படையில் மன்னிப்பளிக்குமாறு கோரும் கருணை மனுவாகவே இது றியாத்தை சென்றடைந்திருக்கின்றது.

 

கடந்த வாரம் நிறைவேற்றப்படவிருந்த மரணதண்டனை தீர்ப்பு இதற்கமைய பிற்போடப்பட்டுள்ளது.
சவூதியில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய வெளிநாடொன்றின் ஊடாக இவ்விடயம் ராஜதந்திர ரீதியாக அணுகப்படக் கூடும் என்ற ஊகமும் இருக்கின்றது. எவ்வாறிருப்பினும் யாரென்று முகமறியா பெண்ணுக்காக, அதுவும் மானக்கேடான குற்றச்சாட்டு ஒன்றை 4 தடவைகள் நீதிமன்றில் ஒப்புக் கொண்டவர்களுக்காக இலங்கையில் உள்ள எல்லா மக்களும் பேதங்களை மறந்து தொடர்ச்சியாக மன்றாட்டங்களை முன்வைத்து வருகின்றனர் என்பது சற்று ஆறுதல் அளிக்கின்றது.
பிற்போடப்பட்ட தண்டனை

 

மரண தண்டனை என்பது உலகுக்கு புதிதான ஒன்றல்ல. தலையை துண்டித்தல், கல்லால் எறிந்து சாகக்கொல்லுதல், கல்லில் கட்டி கடலில் எறிதல், கம்பத்தில் கட்டிவைத்து சுடுதல், கழுத்துவரை நிலத்தில் புதைத்து யானையால் மிதிக்கச் செய்தல், காட்டு விலங்குகளுக்கு இரையாக்குதல், தூக்கிலிடல், உயிருடன் புதைத்தல், நஞ்சூட்டுதல், மின்னதிர்ச்சி கொடுத்தல் என பலமுறைகளில் உலக நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றம் அமுலில் இருந்திருக்கின்றது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கூட இதில் ஏதாவது ஒரு முறைமை கடைப்பிடிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் பின்வந்த காலங்களில் பல நாடுகள் மரண தண்டனை நிறைவேற்றத்தை வழக்கிழக்கச் செய்து விட்டன. அநேக முஸ்லிம் நாடுகள் உள்ளடங்கலாக சில நாடுகளே மரண தண்டனையை இப்போதும் அமுல்படுத்துகின்றன.
எவ்வாறிருப்பினும், குறிப்பிட்ட ஒரு சமூகம் குற்றங்களின் பாரதூரத்தை பெரியளவில் உணர்வதற்கு எப்போது தலைப்படுகின்றதோ அப்பொதெல்லாம் மரண தண்டனை வேண்டுமென கோருவதை நாம் காண்கின்றோம். இலங்கையில் ஒரு பாலகி, காமுகன் ஒருவனால் வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் ஷரீஆ சட்டம் இலங்கையிலும் வேண்டுமென சிங்கள அடிப்படைவாதிகளும் குரல் கொடுத்தமை இதற்கு நல்லதொரு உதாரணமாகும்.

 

சவூதி அரேபியாவில் மரண தண்டனை தீர்ப்புக்கள் வழங்கப்படுகின்ற போது உள்நாட்டில் அது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறுவது வழக்கமானது. அந்த வகையில், இலங்கைப் பெண்ணை கல்லால் எறிந்து கொல்லுமாறு தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பையும் முஸ்லிம்கள் பார்ப்பது வேறு கோணத்தில். தமிழர்களும் சிங்களவர்களும் பார்ப்பது வேறு கோணத்தில். தமது கோணத்தில் இருந்து இதனை நோக்குமாறு மாற்று மதத்தவரை முஸ்லிம்கள் கட்டாயப்படுத்த முடியாது. அதுபோலவே, ஷரீஆவுக்கு வெளியில் நின்று இவ்விடயத்தை பார்க்குமாறு முஸ்லிம்களுக்கு ஏனைய மதத்தவர் கட்டளை பிறப்பிக்கவும் முடியாது. இவ்வாறு இப்பெண்ணின் மரண தண்டனை விடயத்தில் இருவேறுபட்ட பார்வைக் கோணங்கள் இருந்தாலும், அவர் விடுதலையாக வேண்டும் என்ற மனிதநேய எதிர்பார்ப்பு இலங்கையில் வாழும் எல்லா மதத்தவர்களுக்கும் இருக்கின்றது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
சவூதி அரேபியா என்பது இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்களின் மையப் புள்ளி. அங்கு ஷரீஆ சட்டமும் அதன்படியான மரண தண்டனையும் காலகாலமாக அமுலில் இருக்கின்றது. இந்நிலையில், இலங்கையர் ஒருவர் அந்த நாட்டுக்கு வேலைக்குச் செல்வது என்றால் அந்த நாட்டின் சட்டவிதிகளுக்கு உட்பட்டே நடக்க வேண்டும். அரேபியர் ஒருவர் இலங்கைக்கு வந்து ஏதேனும் குற்றமிழைத்தால் இலங்கையின் நீதித்துறை அவரை சவூதிச் சட்டங்களின் படி கையாள்வதில்லை. மாறாக உள்நாட்டுச் சட்டப்படியே அவர் தண்டிக்கப்படுவார். இவ்வாறான சம்பவங்கள் நிறையவே இடம்பெற்றிருக்கின்றன. அதுபோலவே இதுவும் நோக்கப்பட வேண்டும்.

 

சவூதி அரேபியாவுக்கோ அல்லது வேறெந்தவொரு நாட்டுக்கோ யாரேனும் செல்வதென்றால் அதற்கான விசாவுக்கு விண்ணப்பிக்கும் போதும் தொழில் ஒப்பந்தம் செய்யும் போதும் அந்நபர் தெரிந்தோ தெரியாமலோ சம்பந்தப்பட்ட நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உடன்படுகின்றார். இதை அவர் விளங்கிக் கொள்கின்றாரோ இல்லையோ, ஆனால் அவ்வாறு அவர் விளங்கிக் கொண்டு செயற்படுகின்றார் என்றே சட்டம் கருதும். இதற்கப்பால் வேறு பேச்சில்லை. ஒரு நாட்டுக்குள் பிரவேசிக்கும் போது அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உடன்படுவதாக ஒப்புதல் வழங்கிய பணியாளர்கள், உடனடியாக அந்நாட்டின் சட்டங்கள், குற்றத்திற்கான தண்டனைகளை அறிந்து கொள்ள வேண்டியது கடமையாகும். அல்லது இலங்கை அரசாங்கம் அதைச் செய்திருக்க வேண்டும்.

 

பிறகு குற்றமிழைத்துவிட்டு ‘ஒன்றுமறியாமல் அதைச் செய்து விட்டதாக’ ஒப்பாரி வைப்பது சட்டத்தின் முன் எடுபடாது.
இஸ்லாமிய ஷரீஆ சட்டம் என்பது மிகவும் தொன்மையானதாகும். இதில் குறைகாண்பதற்கான அருகதை யாருக்கும் இல்லை. சவூதி அரேபியாவில் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பதற்காக அந்நாட்டின் சட்டத்தை ஒரு காட்டுமிராண்டிச் சட்டம் எனவும், ஷரீஆ சட்டத்தை காலத்திற்கு பொருந்தாத ஏற்பாடு எனவும் உள்நாட்டில் சிலர் விமர்சிப்படுவது அபத்தமானதாகும்.

 

இலங்கை போன்ற நாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு வாழ்கின்றார்கள் என்றாலும், ஷரீஆ சட்டம் விமர்சிக்கப்படுவதை அவர்களால் எவ்வகையிலும் ஜீரணித்துக் கொள்ள முடியாது என்ற விடயத்தை ஏனைய சமூகத்தை சேர்ந்தவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். கடும்போக்கு சக்திகளும், தங்களை மனித உரிமையின் காவலர்களாக காட்டிக் கொள்வோரும் சவூதி அரேபிய சட்டத்தை விமர்சிக்கின்ற தோரணையில், இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தை மலினப்படுத்தும் வேலையை செய்வது, தேவையற்ற பிச்சினைகளுக்கே இட்டுச் செல்லும் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.

 

தவறான கருத்தாடல்கள்

 

ஆனால் முஸ்லிம்கள் சில விடயத்தில் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மார்;க்கத்தின் மீதான பற்றை வெளிக்காட்டும் முயற்சியில் பிற மதத்தவர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது. முன்னமே சொன்னது போல், முஸ்லிம்கள் ஷரீஆ சட்டத்தை நோக்குகின்ற விதமும் சிங்களவர்களும் தமிழர்களும் அதை நோக்குகின்ற விதமும் மாறுபட்டதாக இருக்கின்றது என்பதை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதன்படி நடுநிலையாக இருந்து சில விடயங்களை அணுக வேண்டிய கடப்பாடு இருக்கின்றது.
இவ்விடத்தில் ஒரு முக்கியமான சம்பவத்தை குறிப்பிட வேண்டும். அதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ‘இலங்கைப் பெண்ணொருவருக்கு சவூதி சட்டத்தின் பிரகாரம் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவரை இத்தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும்’ என்று பேச ஆரம்பித்தார். அப்போது அவருக்கு பதிலளிக்கும் முகமாக அமைச்சர் றிசாட் பதியுதீனும் இன்னும் ஓரிரு முஸ்லிம் எம்.பி.க்களும் சபையில் காரசாரமான கருத்துக்களை முன்வைத்தனர்.

 

இரு வேறு சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகள் ஒரு பொதுவான விடயத்திற்காக தர்க்கித்துக் கொண்டனர். இருவரது நோக்கமும் அப்பெண் உயிருடன் திரும்பி வர வேண்டும் என்பதாக இருந்த போதும், அதை பேசிய விதம் மாறுபட்டதாக இருந்ததை எல்லா மக்களும் தொலைக்காட்சியூடாக அவதானித்தனர்.
சுமந்திரன் இவ்விடயத்தை பேச ஆரம்பித்த சில வினாடிகளிலேயே முஸ்லிம் தரப்பு இதற்கு பதிலளிக்கத் தொடங்கிவிட்டது. அவர் வேறு கோணத்தில் பேசுகின்றார் என்று நினைத்துக் கொண்டு முஸ்லிம் தரப்பு பதிலளித்தது போலிருந்தது. அவருக்கு விளக்கமளிப்பதை விடவும் சுமந்திரனது பேச்சுக்கு குறுக்கீடு செய்து, ‘ஷரீஆவை பற்றி விமர்சிக்க முடியாது’ என்ற கருத்தை திணிக்க முனைவதாக தோன்றியது.

 

இது விடயத்தில் சுமந்திரன் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். அது என்னவென்றால், இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் எப்படி ஷரீஆ சட்டத்தை பார்க்கின்றார்களோ, அவ்வாறே அமைச்சர் றிசாட்டும் பார்க்கின்றார். இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களிடம் சென்று நீங்கள் யாராவது இவ்வாறு பேசினால் என்ன பதில் சொல்வார்களோ அதைத்தான் றிசாட்டும் தனது நிலைப்பாடாக முன்வைத்திருக்கின்றார். இதனை பிற சமூகத்தவரும் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கின்றேன்.
மறுபுறத்தில், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒரு விடயத்தை தெளிவாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது, சுமந்திரன் எம்.பி. எப்பேற்பட்டவர் என்பதை நாம் நன்றாக அறிவோம். அவர் ஒரு இஸ்லாமிய எதிர்ப்பாளராக அடையாளப்படுத்த முடியாதவர். மாறாக, ‘வடக்கில் இருந்து புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது ஒரு இனச்சுத்திகரிப்பே’ என்று பகிரங்கமாக உரைத்த நிகழ்காலத்தின் ஒரேயொரு தமிழ் அரசியல்வாதி என்பதை முஸ்லிம் அமைச்சர்களும் மக்களும் மறந்து விடக்கூடாது. இவ்வாறு கருத்து வெளியிட்டமைக்காக தமிழ் பக்கச்சார்பாளர்கள் மத்தியில் அவர் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எவ்வாறு விமர்சிக்கப்பட்டார் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். இப்படியான ஒருவரே, சவூதியின் தீர்ப்பு பற்றி பேசியுள்ளார்.
தமிழர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும், அவர்களுடன் இணைந்தே தீர்வினைப் பெறவேண்டும் என்று சொல்லிக் கொள்கின்ற முஸ்லிம் தலைமைகள், சுமந்திரன் மனம் கோணும்படி அவரை கையாண்டால், எதிர்காலத்தில் இவர் போன்றவர்கள் முஸ்லிம்களுக்கு சார்பாக எவ்வாறு குரல் கொடுப்பார்கள்? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேசியத் தலைவர்கள் என்று மார்தட்டிக் கொள்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் இருந்த சபையில் றிசாட் பதியுதீனும் இன்னும் ஓரிரு எம்.பி.க்களுமே எழுந்து இவ்விடயத்தை பேசியுள்ளார்கள் என்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியது என்பதில் மறுபேச்சில்லை. ஆனால், தாம் யாருக்கு எதிராக பேசுகின்றோம் என்பதையும் பேச்சின் பாணியையும் மிகக் கவனமாக தீர்மானிக்க வேண்டும்.

 

சவூதியிலுள்ள சட்டத்திற்காக தர்க்கம் புரியவதைவிட விளக்கமளிக்கும் தேவையே இன்று ஏற்பட்டிருக்கின்றது.
‘சவூதிச் சட்டத்தை யாரும் விமர்சிக்க முடியாது. ஷரீஆ சட்டம் என்றால் அப்படித்தான். கொலை என தீர்மானித்தால், அதை மாற்ற முடியாது’ என்ற விதத்தில் முஸ்லிம்கள் பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதைவிடவும் முக்கியமாக செய்ய வேண்டிய பணி என்னவென்றால் சிங்களவர்களுக்கும் தமிழர்களும் அதை விளங்கப்படுத்துவதாகும். ஷரீஆ சட்டம் என்றால் என்ன, சவூதி அரேபியாவில் அது எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றது?, இந்த சட்டத்தின் படி இலங்கைப் பெண்ணும் ஆணும் எவ்வாறு குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளனர்?, அந்தக் குற்றம் எந்தளவுக்கு பாரதூரமானது?, குற்றவாளி ஒருவரை விடுவிப்பதற்கு ஷரீஆவில் ஏதாவது ஏற்பாடுகள் உள்ளனவா? போன்ற விடயங்களையே விலாவாரியாகச் சொல்ல வேண்டும்.
அதன்பின், குறித்த பெண்ணை உயிருடன் மீட்டு வருவதற்கான தன்னார்வத்தையும் முஸ்லிம்கள் வெளிப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், பிற மதங்களை பின்பற்றும் மக்கள் இஸ்லாமிய சட்டத்தை தவறாக ஏடைபோடுவதை குறைத்துக் கொள்ளலாம். ஆனால் இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூக அமைப்புக்களும், பொது மக்களும், அரசியல்வாதிகளும், உலமாக்களும் இப்பணியை எந்தளவுக்கு செய்திருக்கின்றார்கள் என்பது மீளாய்வுக்குரியது.

 

பிறமதத்தவரின் நிலைப்பாடு

 

இலங்கைச் சூழலில், விபச்சாரம் என்பது ஒரு மரண தண்டனைக் குற்றமல்ல. அத்துடன் திருமணத்திற்கு அப்பாலான உறவுகளை வைத்துள்ள, கல்லெறிந்து கொல்லப்பட வேண்டிய எத்தனையோ பேர் நமது நாட்டில் இன்னும் மைனர் மாதிரி உலவித் திரிகின்றார்கள். ஏனென்றால், விபச்சாரி ஒருத்தியை தேடிச் சென்று பணம் கொடுத்து உறவு கொள்வதையே இங்குள்ள மக்கள் பொதுவாக விபச்சாரம் என்று வரையறுத்திருக்கின்றார்கள். இந்நிலையில் சவூதிக்குச் சென்ற குடும்பப் பெண் செய்தது விபச்சாரம் என்றாலும் பிற மதத்தவருக்கு அது ஒரு பாரிய குற்றமாக தென்படாது என்பதை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன், ஒரே குற்றமிழைத்த வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஆண் மகனுக்கு கசையடிகளும், பெண்ணுக்கு கல்லால் எறிந்து கொல்லும் மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது ஏன்?; என்ற குழப்பமும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். எனவே இவ்வாறு தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் எழுகின்ற ஆயிரம் கேள்விகளுக்கான தெளிவான விளக்கங்களை அளிப்பதன் ஊடாகவே, முஸ்லிம்கள் இஸ்;லாமிய சட்டத்தின் கண்ணியத்தை காத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.
இது இவ்வாறிருக்க, ஷரீஆ சட்டத்தையும் சவூதி அரேபிய சட்டத்தையும் முஸ்லிம்கள் போட்டுக் குழப்பிக் கொண்டுள்ளதாக தோன்றுகின்றது. சவூதி அரேபிய சட்டத்தைப் பற்றி மாற்று மதத்தவர் விமர்சனங்களை முன்வைத்தால் அதனை ஷரீஆவுக்கு எதிரான விமர்சனமாக கருதக் கூடாது. ஷரீஆ சட்டம் என்பது எல்லாவற்றுக்கும் அடிப்படையானது. அதனையே தமது நாட்டிலும் அமுல்படுத்தியுள்ளதாக சவூதி அரேபியா பிரகடனம் செய்திருக்கின்றது. ஆனால் நூற்றுக் நூறுவீதம் சவூதி இச்சட்டத்தை இஸ்லாமிய முறைப்படி நடைமுறைப்படுத்துகின்றதா என்பதில் கடுமையான சந்தேகங்கள் இருக்கின்றன. சவூதி வெளிநாட்டு பணியாளர்கள் விடயத்தில் ஷரீஆ விதிமுறைகளை எந்தளவுக்கு நியாயமாக கையாள்கின்றது என்பதை அந்நாட்டுக்கு தொழிலுக்காக சென்று வந்தவர்களைக் கேட்டால் தெரியும்.
சவூதி இச்சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தியிருந்தால் இலங்கைப் பணிப்பெண்கள் துன்புறுத்தப்படல், வன்கொடுமைகளுக்கு உள்ளாதல், இலங்கையில் இருந்து செல்வோருக்கு மாதக் கணக்காக சம்பளம் கொடுக்காமலும் திருப்பி அனுப்பாமலும் வைத்திருத்தல் எனத் தொடரும் பல அசாதாரண நிலைமைகள் ஏற்பட்டிருக்காது. இவ்வாறான நிலைமைகள் எல்லாவற்றையும் முஸ்லிம்கள் எவ்வாறு எடுத்துக் கொண்டாலும், இது பிற மதத்தவருக்கு ஷரீஆ மீதான தப்பபிப்பராயத்தையும் சவூதி பற்றிய தவறான தோற்றப்பாட்டையுமே ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் இலங்கை முஸ்லிம்கள் நிலைமைகளை கையாள வேண்டும்.
தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணின் விவகாரத்திற்கு வருவோம். இது தெளிவாக ஒரு குற்றம் என்பதை அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றார்கள். குறித்த இலங்கைப் பெண் ஒரு முஸ்லிமாக அல்லாமல் இந்துவாக அல்லது பௌத்த மதத்தை பின்பற்றுபவராக இருப்பாராயின், அவரது பெயர் மாற்றப்பட்டு சவூதிக்கு அனுப்பப்பட்டிருக்கிறாரா என்பதை பார்க்க வேண்டும். திருமணம் முடித்த ஒரு பெண் தனது கணவரோ அல்லது மஹ்ரமி எனப்படும் (திருமணம் முடிக்க முடியாத) சகோதர முறைக்காரரோ இல்லாமல் பயணிக்க முடியாது என்று இஸ்லாம் சொல்கின்றது. அப்படியென்றால், ஷரீஆ சட்டம் அமுலில் இருக்கின்ற ஒரு நாட்டில் ஒரு மஹ்ரமி துணையில்லாத பெண் உள்நுழைவதற்கு இடமளித்தது எந்தச் சட்டம்? உண்மையில் அவ்வாறான சட்டம் ஒன்றே அங்கு அமுலில் உள்ளது என்றால் இது போன்ற மேலும் பல கேள்விகளுக்கு பதில்காண வேண்டும். அதில் ஒரு கேள்விக்கான விடைக்கு மழுப்பலான பதிலளிக்கப்படுமாயின் அங்கே சட்டத்தின் நடைமுறைப்படுத்தல் சவாலுக்குட்படுத்தப்படுகின்றது. இந்த அடிப்படையில் அந்தப் பெண்ணின் விடுதலையை சவூதி அரசாங்கம் பரிசீலிக்கலாம்.

 

ஒரு உயிர் போய்விடக் கூடாது என்பதற்காக இன்று சவூதிக்கு கருணை மனுக்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விபச்சாரம் என்ற அவரது குற்றம் நியாயப்படுத்தக் கூடியதல்ல என்றாலும், ஒரு மனிதாபிமான அடிப்படையில் அப்பெண் சார்பான இலங்கை அரசாங்கத்தின் மேன்முறையீட்டை அந்நாட்டு மன்னர் கருணைக் கண்கொண்டு பார்க்க வேண்டும். குற்றவாளிகள் இருவரையும் இலங்கை சட்டத்திற்கு பாரப்படுத்தும் ஒரு முடிவுக்கு சவூதிச் சட்டம் இடமளிக்குமாக இருந்தால், அது வரவேற்கத்தக்கதே. முஸ்லிம் கவுன்ஸில் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று, பல்லின நாடொன்றில் வாழும் இலங்கைப் பெண்ணை சவூதி அரசாங்கம் மன்னிப்பளித்து விடுதலை செய்யுமாக இருந்தால், இலங்கையில் இஸ்லாம் மதம் மற்றும் ஷரீஆ பற்றிய நல்லபிப்பராயம் ஏற்படும் என்பது திண்ணம்.
இதற்கப்பால் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

 

ஏ.எல். நிப்றாஸ்                nifras

(வீரகேசரி 12.12.2015)