ஜப்பானின் ஒரு பில்லியன் டொலர் நிதிஉதவியில் கண்டி நகரில் அபிவிருத்தி : ஹக்கீம் !

ஜப்பான் வழங்கும் ஒரு பில்லியன் டொலர் பாரிய நிதியுதவியுடன் கண்டி நகரை அபிவிருத்தி செய்வதற்கு முழுமையான செயல்திட்டமொன்றை துரிதமாகத் தயாரிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
பிரஸ்தாப நிதியுதவியை வழங்க முன்வந்துள்ள ஜப்பானிய உயர்மட்டக்குழு எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி இலங்கை வரவுள்ளதால் அதற்கு முன்னர் உரிய செயல்திட்டத்தை தயாரித்து முடிக்குமாறும் அமைச்சர் ஹக்கீம் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

01_Fotor
வெள்ளிக்ழமை (11) பிற்பகல் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சில் கண்டி நகர அபிவிருத்தி தொடர்பான பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

04_Fotor
அண்மையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைச்சர் ஹக்கீம் ஏற்பாடு செய்திருந்த, அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, லக்ஷ்மன் கிரியல்ல, எம்.எச்.ஏ.ஹலீம், சரத் அமுனுகம மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அவற்றின் உயரதிகாரிகள் பங்குபற்றிய ஆரம்பக் கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் அமைச்சில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 
கண்டி நகர போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகள், மாற்று வீதிகளை அமைத்தல், யுனொஸ்கோவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மரபுரிமை நகரான கண்டியில் வசதி குறைந்த சேரி வாழ் மக்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளல் மற்றும் கலையம்சம் பொருந்திய தபால் நிலையக் கட்டடத்தை சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஒத்துழைப்புடன் நவீன மயப்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் இக்கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டன.

05_Fotor
அமைச்சின் செயலாளர் பீ.எம்.யூ.டீ. பஸ்நாயக்க, செயல்திட்ட செயலாளர் என்.டீ.ஹெட்டிஆராச்சி மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, விவசாயத் திணைக்களம், கண்டி மாநகர சபை ஆகியவற்றின் உயரதிகாரிகள் உட்பட பலர் இதில் பங்குபற்றினர்.
ஜெம்சாத் இக்பால்