விளையாட்டு வரலாற்றில் டோனிதான் சிறந்த கேப்டன் : விராட் கோலி புகழாரம் !

இந்தியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெறுகிறது. இந்த தொடரில் இடம்பெற்றுள்ள அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகள், போட்டிகள் நடைபெறும் இடங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

virat-kohli-pti_m

இதற்கான நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ரகானே மற்றும் தவான் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது விளையாட்டு வரலாற்றில் டோனி சிறந்த கேப்டன் என்று கோலி புகழாரம் சூட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் விராட் கோலி பேசியதாவது:-

விளையாட்டு வரலாற்றில் சிறந்த கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் டோனி. அமைதி மற்றும் இக்கட்டான நிலையில் பதற்றம் அடையாமல் இருப்பது ஆகிய விஷயங்களை அவரிடம் இருந்து கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.

மற்ற கேப்டன்கள் படைத்த சாதனைகள் எதையும் டோனி முறியடிக்காமல் இல்லை. 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய சாதனை. டி20 பற்றி யாவரும் அறிந்திருக்காத காலத்தில் உலகக்கோப்பையை வென்றது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சாம்பியன் டிராபியை வென்றது எளிதல்ல. அது நம்மைப்பற்றி பெருமைப்படுத்தும் உணர்வாக தெரிகிறது. ரகானே டி20 போட்டிகளில் முற்றிலும் மாறுபட்டு காணப்படுவார்.

இவ்வாறு அவர் பேசினார்.