சுரேஸ்பிரேமசந்திரனிற்கு இரகசிய சித்திரவதை முகாம்கள் குறித்த விபரங்கள் தெரிந்தால் வழங்குங்கள் !

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமசந்திரனிற்கு இரகசிய சித்திரவதை முகாம்கள் குறித்த விபரங்கள் தெரிந்திருந்தால் அதனை வழங்குமாறு வெளிவிவ கார அமைச்சர் மங்கள சமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

mangala samaraweera
காணமற்போனவர்கள் குறித்த ஐக்கியநாடுகள் குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வேளை நாங்கள் அவர்களை அவர்கள் விரும்பிய இடங்களுக்கு எல்லாம் செல்வதற்கு அனுமதித்தோம். அவர்கள் திருகோணமலை கடற்படை தளத்தில் அமைந்துள்ள இரகசிய தடுப்பு முகாம் போன்ற பகுதிகளிற்கு கூட சென்றனர். அவ்வாறு அனுமதியளித்தமைக்காக அவர்கள் எங்களிற்கு நன்றியை தெரிவித்தனர்,
சுரேஸ்பிரேமசந்திரன் அவ்வாறான இடங்கள் எங்குள்ள என தெரிவித்தால் நாங்கள் அந்த இடத்திற்கு அவர் செல்வதற்கு அனுமதிப்போம். ஆகவே முதலில் முழுமையான விபரங்களை வழங்குங்கள். இலங்கையில் தற்போது அவ்வாறான இரகசிய தடுப்பு முகாம்கள் எதுவும் இல்லை, ஏதாவது தகவல் தெரிந்திருந்தால் தயவுசெய்து எங்களிற்கு தெரிவியுங்கள். திருகோணமலை முகாம் தற்போது செயற்படுவதில்லை,முன்னர் அது காணப்பட்டது,அவ்வாறான முகாம்கள் காணப்பட்டால் நாங்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம். வெள்ளை வான்களின் நடமாட்டங்கள் காணப்பட்டால் அது குறித்த விபரங்களை வெளியிடுங்கள் என மங்கள தெரிவித்தார்.