மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் குப்தில் இரட்டைச் சதமடித்து அசத்த, 143 ஓட்டங்களால் அபாரவெற்றி பெற்ற நியூசிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
11 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிகள் யாவும் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் நியூசிலாந்து , அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கான வாய்ப்பை பெற்றுள்ளன.
நியூசிலாந்தின் வெலிங்டனில் இன்று இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் ஒன்றையொன்று சந்தித்தன.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நியூசிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து இமாலய ஓட்டத்தை குவித்தது.
நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 393 ஓட்டங்களை குவித்தது.
நியூசிலாந்து அணி சார்பாக மாட்டின் குப்தில் 237 ஓட்டங்களையும் டெய்லர் 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
அதிரடியாக விளையாடி இரட்டைச் சதம் பெற்ற குப்தில் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் இரட்டைச் சதம்பெற்ற 5 ஆவது வீரர் என்ற பெருமையையும் நியூசிலாந்து அணி சார்பாக இரட்டைச் சதம் பெற்ற முதலாவது வீரர் என்ற பெருமையையும்பெற்றார்.
இது ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பெறப்பட்ட 6 ஆவது இரட்டைச் சதம். உலகக்கிண்ணப் போட்டியில் பெறப்பட்ட இரண்டாவது இரட்டைச் சதம்.
இதேவேளை, இந்த உலகக்கிண்ணப் போட்டிகளில் கிறிஸ் கெயில் பெற்ற 215 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடித்தார்.
பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணிசார்பாக டெய்லர் 3 விக்கெட்டுகளையும் ரசல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இமாலய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நியூசிலாந்தின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது சகல விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 30.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ஓட்டங்களைப் பெற்று 143 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் கிறிஸ் கெய்ல் 67 ஓட்டங்களையும் ஹோல்டர் 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய போல்ட் 4 விக்கெட்டுகளையும் சௌத்தி மற்றும் வெட்டோரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப் போட்டியில் இரட்டைச்சதம்பெற்ற குப்தில் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.
143 ஓட்டங்களால் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி தென்னாபிரிக்க அணியை எதிர்வரும் 24 ஆம்திகதியும் அவுஸ்திரேலிய அணி இந்திய அணியை எதிர்வரும் 26 ஆம் திகதியும் சந்திக்கவுள்ளன.
இதேவேளை உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடும் இரு அணிகளும் எவை என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.
அரையிறுதிப் போட்டியில் விளையாடவுள்ள அணிகள் அனைத்தும் பலம்பொருந்திய அணிகளாக காணப்படுவதால் எந்த அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும் என்பைதை கணிப்பிடுவது கடினமாகும். எனவே பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எந்த அணி 11 ஆவது உலகக் கிண்ணத்தை வெல்லும் என்பதை.
இம்முறை தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் முதன்முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்ற வாய்ப்புக்கள் உள்ளதால் பலவியூகங்களை அமைந்து விளையாடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.