உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர கிளர்ச்சி குழுக்களுடன் சிரியா அதிபர் பேச்சுவார்த்தை !

அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவின அதிபராக பசார் அல் ஆசாத் இருந்து வருகிறார். எகிப்து, லிபியா, துனிசியா நாடுகளில் 2011–ம் ஆண்டு அந்த நாட்டு அதிபர்களுக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சி ஏற்பட்டது.

அதே நேரத்தில் சிரியாவிலும் அதிபர் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சி உருவானது. ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி படையினர் அரசு படைகளை தாக்கின. இரு தரப்புக்கும் இடையே 4 ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது.

siriya president asaad
இதில் இதுவரை 2½ லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அரசு படைக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் சண்டை நடந்து கொண்டு இருந்ததை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்த நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றிக் கொண்டனர்.

ஒரு பக்கம் கிளர்ச்சி படையின் தாக்குதல், மற்றொரு பக்கம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல் என சிரியா நாடே சின்னாபின்னமாகி வருகிறது.

இந்த நாட்டில் அமைதி ஏற்படுத்த அரபு நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டன.

கடந்த மாதம் 17 நாடுகள் ஒன்று சேர்ந்து இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தின. அப்போது அதிபர் ஆசாத்தும், கிளர்ச்சி படையினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.

6 மாதங்களுக்கு பொதுவான அரசு ஒன்றை சிரியாவில் ஏற்படுத்துவது, அதன் பிறகு 18 மாதத்துக்குள் தேர்தல் நடத்தி புதிய அரசை தேர்வு செய்வது என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அதிபர் ஆசாத் முதலில் ஒப்புதல் தெரிவிக்கவில்லை. ஆனால், இப்போது அவர் இறங்கி வந்துள்ளார். இதையடுத்து அதிபர் ஆசாத்துக்கும், கிளர்ச்சி படையினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 1–ந் தேதியும், 2–ந் தேதியும் இந்த பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் உள்ள ஓட்டலில் நடைபெறுகிறது. முதலில் 100 பேர் கொண்ட குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதன் பிறகு ஆசாத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறும். இதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முக்கிய பிரதிநிதியாக பங்கேற்று பேச்சுவார்த்தையை முன்நின்று நடத்த உள்ளார். பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் சிரியாவில் மீண்டும் அமைதி திரும்பும் நிலை உருவாகி உள்ளது