கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் வசிக்கும் மக்களின் குடிநீர் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வரவு – செலவு திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்ததாவது,
மகாவலி அபிவிருத்தி மற்றும் அமைச்சு தொடர்பான இக்குழு நிலை விவாதத்தில்; பங்கேற்பதையிட்டு மகிழ்கின்றேன். அதேபோன்று நீர் பாசன மற்றும் நீர் வள முகாமைத்துவ அமைச்சர் விஜித முனிசொய்சா எனது அமைச்சுக்கு வழங்கும் ஆதரவுக்கு மதிப்பளித்து அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் ஒரு புதிய நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்கு உதவியிருந்தார்.
நீர்பாசன அமைச்சும், நீர் வழங்கல் அமைச்சும் ஒன்றொடொன்று இணைந்து செயற்படும் அமைச்சுக்களாகும். உண்மையில் நாட்டு மக்களுக்கு நீர் வழங்குவதற்காக நீர்த் தேக்கங்களின் தேவைப்பாடு எமக்கு இன்றியமையாததாகவுள்ளது.
ஆகவே, நாட்டு மக்களுக்கு குடிநீரை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் எனது தலைமையின் கீழ் நீர் வழங்கல் அமைச்சில் நடைபெற்ற ஒரு கூட்டத்திற்கு அமைச்சர் விஜிதமுனி சொய்சா சமூகமளித்திருந்தார். அத்துடன் மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் அதில் பங்குபற்றினார்;. அப்பொழுது நாங்கள் மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கும் உரிய பல தேவைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடினோம். எதிர்காலத்தில் அங்கு அமுல்படுத்தவுள்ள பல திட்டங்களை பற்றியும் கருத்திற்கொண்டோம்.
ஹெட ஓயாவில் நீர்த்தேக்கத்தை நிறுவி நீரை சேகரிப்பதற்குரிய கருத்தொன்றை முன்வைத்துள்ளோம். அதுபோல் கும்புகன் ஓயா பகுதியில் சில நீர்த்தேக்கங்கள்; காணப்படுகின்றன. இந்த நீர்த் தேக்கங்களின் அபிவிருத்தியானது பல பகுதிகளுக்கும் நீர் வழங்களை அதிகப்படுத்துவதற்கு வசதியளிக்கும்.
மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் ஹெட ஓயா திட்டமானது மிகவும் முக்கியமான நீர்பாசன திட்டமாகும். இத் திட்டத்தின் மூலம்; புத்தல, சியம்பலாண்டு;வ, லஹூகல பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க முடியும். அதேபோன்று பொத்துவில் பகுதிக்கும் நீர் வழங்களை மேற்கொள்ளலாம்.
குறிப்பாக, பொத்துவில் பகுதியில் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள். பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிலும் லஹூகல பிரதேச செயலாளர் பிரிவிலும் உள்ள நீர் அருவிகள் வரட்சியினால் வற்றிப்போயுள்ளன. அங்கும் குடிநீர் பிரச்சினைகள் உள்ளன.
ஆகவே, நீண்ட காலமாக மக்களுக்கு பாரிய இடராக இருந்த குடிநீர் பிரச்சினையையிட்டு லஹூகல, சியம்பலாண்;டுவ, பொத்துவில் பகுதிகளுக்கு நீர் வழங்குவதற்குரிய மாற்றுவழியாக ஹெட ஓயா நீர்த் தேக்கத்தை அமைக்கும் இத்திட்டத்தை முன்னெடுப்பது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்.
லஹூகல நீர்த்தேக்கத்தை பொறுத்தவரையில் அது மொனராகல மற்றும் புத்தல பகுதிகளுக்கு நீர் வழங்களை விரிவுபடுத்தும். இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீரைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த இரு நீர்தேக்கங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சை அணைக்கட்டு வாவியின் ஆய்வு முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. அணைக்கட்டை சில அங்குலத்தால் உயர்த்த முடியுமென்றால் அவ் அணைக்கட்டின் மூலம் ஏறாவூர், வாழைச்சேனை, வடக்கு பகுதிகளுக்கு நீரை வழங்க முடியுமென கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
என்றாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு இவ்விடயம் தொடர்பில் சில சந்தேகங்கள் காணப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் உன்னிச்சையை சூழவுள்ள சில கிராமங்களுக்கு நீர் கிடைக்காமல் போகுமென அவர்கள் சந்தேகிக்கின்றனர்.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தற்போது உன்னிச்சை வாவியை சூழவுள்ள பகுதிகளுக்கு நீர் வழங்கல் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது. நீர்பாசன திட்டத்தில் அந்த கிராமங்களை நிச்சயம் உள்ளடக்குவோம். ஆகவே, அம்மக்களுக்கு குடிநீர் இல்லாமல் கஷ்டப்படும் நிலை ஒருபோதும் ஏற்படாது என நான் திட்டவட்டமாக கூறுகின்றேன்.
அக்கிராம மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்கு உன்னிச்சை வாவியின் ஆய்வு முடிவின் பிரகாரம் இரண்டு அங்குலத்தால் அதிகரித்து இந்த நீர்பாசன திட்டத்தை அமுல்படுத்தினால் வழங்க முடியும். இதன் மூலம் நான் குறிப்பிட்ட பிரதேசங்களுக்கும் நீரை வழங்க முடியும். அதற்காக நீர்பாசன திணைக்களத்தின் ஒத்துழைப்பு எமக்கு தேவைப்படுகிறது.
நீர்பாசன திணைக்களத்தின் மற்றுமொரு மாற்றுவழி தான் ரூகம் மற்றும் கித்துல் வாவிகளை ஒன்றிணைத்து நீர் வழங்கும் யோசனையாக காணப்படுகின்றது. இதை நாம் விரைவாக ஆரம்பித்தால் வாழைச்சேனை, கல்குடா பகுதிகளுக்கு நீர் வழங்களுக்கு வசதியாக இருக்கும். அப்பகுதி சுற்றுலாத்துறைக்கு உகந்த இடங்களாகும். அங்குள்ள நவீன ஹோட்டல்களில் நீர் வசதி; குறைவாகவே காணப்படுகின்றது.
இந்நிலையில் நீர்பாசன திணைக்களம் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தி இவ்விரண்டு திட்டங்களில் ஏதாவதொரு திட்டத்தையாவது விரைவாக அமுல்படுத்துமென நினைக்கின்றேன்.
அதேபோல், யான் ஓயா திட்டத்தின் ஊடாக குச்சவெளி பிரதேசத்திற்கு நீர்வழங்க முடியுமென்றால் அது அங்கு சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமையும். அநுராதபுர மாவட்டத்திலுள்ள மக்களுக்கும் இது உதவும். ஆகவே, யான் ஓயா கருத்திட்டத்தை மிக விரைவாக முன்னெடுக்கப்படுவதன் மூலம் இப்பகுதிகளுக்கு தூய குடிநீரை வழங்க முடியும்.
ஜனாதிபதி தமது மேற்பார்வையின் கீழ் செயலணியொன்றை உருவாக்கியுள்ளார். அவர்களால்; முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து அம்மக்களுக்கான நீர்வழங்களை வழங்க வேண்டுமென நான் கேட்டுக் கொள்கின்றேன்.
உமா ஓயா திட்டம் பல பிரச்சினைகளுக்குள் சிக்குண்டுள்ளது. அங்குள்ள சுரங்கம்; மற்றும் நீர் கசிவு காரணமாக பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன. தற்போது திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இந்த நீர் கசிவு பிரச்சினை தடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டங்கள் அனைத்தும் ஒழுங்கான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும். இந்நீர் தேக்க திட்டங்கள் ஒழுங்காக முன்னெடுக்கப்படுமானால் எமக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை மேலும் விரைவுபடுத்தலாம்.