டிசம்பர் 10 : உலக மனித உரிமைகள் தினம் !

 மனிதர்கள் மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான விட்டுக் கொடுக்க முடியாத மறுக்க முடியாத உரிமைகளை மனித உரிமைகள் என்று அழைக்கிறோம். 
ஓவ்வொரு மனிதனும் தான் வாழ்வதுடன் பிறரையும் வாழவிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக டிசம்பர் 10 ஆம் திகதி மனித உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்துவதே இதன் நோக்கம். உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் சமமானவர்களே. ஒருவரிடமிருந்து நாம் எவ்வித உரிமையை எதிர்பார்க்கிறோமோ அதே உரிமையை மற்றவர்களுக்கும் வழங்க வேண்டும். யாரும் யாரையும் அடிமைப்படுத்தக் கூடாது.
world-human-rights-day-poster_23-2147527392_Fotor
மானிடக் குடும்பத்தினரின் உள்ளார்ந்த கௌரவத்தையும்¸ அவர்களின் சமமான பிரிக்க முடியாத உரிமைகளையும் அறிந்து ஏற்பதே உலகில் சுதந்திரம் நீதி மற்றும் சமாதானத்தின் அடித்தளம் ஆகும் என சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் முன்னுரை எடுத்துக் கூறுகிறது. 
இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பிளேட்டோ அரிஸ்டோட்டில் போன்றோர் இயற்கைச் சட்டம் பற்றிய கோட்பாடுகளையும் பின்னர் கொன்பூசியஸ் (Confucius) தனிநபர் கௌரவம் பற்றியும், எல்லா மக்களுக்கும் உரிய கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் பற்றியும் கூறியுள்ளனர். பின்னர் அரசியல் ஞானியான ஜோன் லொக் ((John Locke 1680) அவர்கள் மனிதன் இயற்கையாகவே சுதந்திரத்துடனும் சமத்துவத்துடனும் பிறந்தவன் எனவே சட்டமானது அவனின் உயிருக்கும் உடைமைக்கும் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினார். 
சுதந்திரமாக பிறந்த மனிதன் அடிமையாக வாழாது சுதந்திரமாகவே வாழ வேண்டும் என்று பிரான்ஸ் நாட்டின் அறிஞர் ரூசோ கூறினார்.
இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்து இழப்பு படுகொலைகள் அட்டூழியங்கள் மற்றும் மனிதப் பேரழிவுகளின் பின்னர் தோற்றம் பெற்ற ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்டதே மனித உரிமைப் பிரகடனம்.
மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதும் அல்ல. எனவே ஒருவரின் உரிமையை பறிக்க எவருக்கும் உரிமையில்லை.
1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவான அடுத்தாண்டு பெப்ரவரி மாதம் 16ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக் குழு உதயமானது. 53 நாடுகளை அங்கமாக கொண்ட இக்குழு முதல் வேலையாக சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அன்றைய அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. 
இக்குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
டிசம்பர் 10 1948ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் இந்தப்பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியது. டிசம்பர் 10 என்ற இதே நாளை 1950ம் ஆண்டிலிருந்து சர்வதேச மனித உரிமைகள் தினமாக அறிவித்து கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகத்தில் பிறக்கும் எல்லா மனிதர்களும் சமமான உரிமைகளும் அடிப்படைச் சுதந்திரங்களும் கொண்டிருக்கின்றனர் என்ற உண்மையைத்தான் இந்த நாளில் உலகம் உரத்து கூற வேண்டியுள்ளது.
மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும் வகையிலும் மனித உரிமைகள் தொடர்பான விஷயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் இந்த தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.
1948ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் சாசனம் 30 உறுப்புரைகளை கொண்டது.
உலகில் பிறப்புரிமை எழுத்துரிமை கருத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பெற்று அனைவரும் சுதந்திரமாக வாழ வேண்டும். ஒருவர் பிறக்கும் போதே அவருக்கான மனித உரிமைகள் வந்து விடுகின்றன. உயிர் வாழ்வதற்கான உரிமைகள் கருத்துச் சுதந்திரம் மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்கான கல்வி மருத்துவம் சுகாதாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் மற்றும் ஒரு மனிதனாக வாழ்வதற்கு அவசியமான உரிமைகள் அனைத்தையும் மனித உரிமைகள் எனலாம். இது அனைத்து மக்களும் அங்கீகரிக்கக்கூடிய சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றவை.
நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல், நீதி, ஆகியவற்றில் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு நாடு, மதம், இனம், மொழி, ஜாதி, வசதி, என்ற காரணங்களால் இந்த உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்பதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல், உள, வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனிமனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள் மனிதன் சுதந்திரமாக சுமூகமாக நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன.
மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள் வாழும் உரிமை சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை நகர்வுச் சுதந்திரம், பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை என்பன முக்கியமானவை.
1950ஆம் ஆண்டிலிருந்து டிசம்பர் 10 ஆம் திகதி ‘சர்வதேச மனித உரிமைகள் தினமாக’ கொண்டாடப்பட்டு வருகிறது. ‘சகல மனிதப்பிரஜைகளும் சமத்துவமானதும் விட்டுக் கொடுக்க முடியாததுமான உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரந்திரங்களுடனேயே பிறக்கின்றனர்’ என்ற உண்மையை உணர்த்தும் வகையிலான நிகழ்வுகளும் செயற்திட்டங்களும் இத்தினத்தில் முழு உலகிலும் முன்னெடுக்கப்படுகின்றன. 
இன்று மனித உரிமைகளை பேணிக்காத்து மேம்படுத்துவதற்கான உலகளாவிய ஒரு நியமமாக இந்தப்பிரகடனம் மாறிவிட்டது. இப்பிரகடனத்தில் இலங்கை அரசும் கைச்சாத்திட்டுள்ளது.
அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனமானது தன்னளவிலான ஒரு உடன்படிக்கை மட்டுமேயாகும். அதில் குறிப்பிடப்படும் உரிமைகளை மேலும் உறுதிப்படுத்தி நிறைவேற்றி கொள்வதற்காக அதனுடன் இணைந்த சில சர்வதேச உடன்படிக்கைகளையும் பின்னர் ஏற்படுத்தியுள்ளனர். அவற்றில் பெண்கள் உரிமைகள் பற்றிய சமவாயம் மற்றும் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம் என்பன மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றன. இவற்றின் மூலம் உலகவாழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி பாதுகாத்துக் கொடுப்பதே இதன் நோக்கமாகும்.
மனித உரிமை பிரகடனம் 30 உறுப்புரைகளை உள்ளடக்கியுள்ளது.
இதில் 1ஆம் உறுப்புரை சுதந்திரமாக பிறக்கும் மனிதர்கள் யாவரும் சமமானவர்களெனவும் மதிப்பையும் நியாயத்தையும் கொண்டவர்களெனவும் கூறுகின்றது. 2ஆம் உறுப்புரை இன மத மொழி பால் நிறம் அரசியல் வேறுபாடின்றி சமூக வேறுபாடின்றி இப்பிரகடனம் சகலருக்கும் உரித்தானதாக கூறப்படுகின்றது. 
உறுப்புரை 3 – 21 வரையுள்ளவற்றில் மனித இனத்தின் சிவில் அரசியல் உரிமைகள் பற்றி கூறப்படுகின்றது. அதாவது பாதுகாப்பு அடிமைத்தனம் சித்திரவதை சட்டத்தின் முன்னால் சமத்துவம் வேறுபாடு அடிப்படை உரிமைகள் கைது நீதி நிரபராதி அரசியல் தஞ்சமும் துன்புறுத்தலும் திருமணம் சொத்துரிமை சிந்தனை உரிமை பேச்சு சுதந்திரம் தகவல் பரிமாற்ற உரிமைஇ ஒன்று கூடும் சுதந்திரம் போன்றவற்;றை பற்றி அவை கூறுகின்றன. 
மற்றைய சரத்துகளான 22 – 27 வரை மனித இனத்தின் பொருளாதார சமூக கலாசார உரிமைகளை உள்ளடக்கியுள்ளன. அதாவது வேலை உடை உணவு தங்குமிடம் மருத்துவ பராமரிப்பு கல்வி போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் இறுதி சரத்துக்களான 28 – 30 வரை இச்சாசனத்தின் நடைமுறை பொறுப்பு உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. 
இந்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கடமைப்பாடு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் உரியது.
கல்வியில் மனித உரிமைகளின் தாக்கத்தை பார்க்கும் போது ஐ. நா. பொதுச்சபை பிரகடனத்தினது மனித உரிமைகளின் உறுப்புரை 26 (1), (2) இல் கூறப்பட்டுள்ளவாறு ‘ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமை ஆரம்பக்கல்வியின் அவசியம் கல்வி இலவசமாக வழங்குவது பற்றியும் கல்வி மனிதனது ஆழுமை விருத்தியில் முழுமையாக வியாபித்து அதனூடாக எங்கும் நன்னெறியுடன் கூடிய சமாதானம் பொலிவடைந்து காணப்படல் வேண்டும்’ எனும் கூற்றுக்கேற்ப கல்வி மிகமுக்கியமான உரிமையாக காணப்படுகிறது. 
கல்விக்கான உரிமைகள் விடயத்தில் இலங்கை முதன்நிலை வகிக்கிறது. இலவசக்கல்வி, எல்லோருக்கும் கல்வி, கட்டாயக் கல்வி வயதின் வரையறை, இலவச பாடநூல், இலவச உடை, இலவச உணவு இன்னோரன்ன விடயங்களினூடாக கல்வி பெறுவதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக எழுத்தறிவு வீதம் இன்று ஆசிய நாடுகளில் ஒரு முதன்மையான நிலையில் மேம்பட்டுக் காணப்படுவதற்கு இவ்வாறான கல்வி நடவடிக்கைகள் காரணமாய் அமைந்துள்ளன. 
மனித உரிமைகள் பிரகடனம் உருவாக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் உலகலாவிய ரீதியில் அடிப்படை உரிமைகள் எந்த அளவிற்கு பாதுகாக்கப்படுகிறது என்பது விமர்சனத்திற்குரியது. குறிப்பாக ஏட்டளவில் உள்ள மனித உரிமைகள் பிரகடனம் நடைமுறையில் அடக்கப்படும் சமுகத்திற்கு பகற் கனவாக அல்லது எட்டாக் கனியாகவே உள்ளதாக கண்காணிப்பாளர்கள் எடுத்துரைக்கின்றனர்.
எனினும் நாடுகளுக்கிடையிலான யுத்தம், உள்நாட்டு மோதல்கள், வர்க்கப் போராட்டங்கள் போன்றவைகள் நிகழும் சந்தர்ப்பத்திலேயே அநேகமான மனித உரிமைகள் மீறப்படுகின்றன.
எனவே தனிப்பட்ட அளவில் நமக்கு நம் உரிமைகள் உரியவை. அதே போல பிறருடைய உரிமைகளை நாம் மதிக்க வேண்டும். இதற்கு சட்டங்களினால் மாத்திரம் பரிகாரம் காணமுடியாது. அனைவரினது மனப்பாங்கிலும் மாற்றம் வந்தால் மாத்திரமே உரிமைகளை பாதுகாக்க முடியும்.
ஏனையவர்கள் எமக்கு வார்த்தைகளாலும் செயல்களாலும் எதை செய்யக்கூடாது என நாம் எண்ணுகின்றோமோ அவற்றை மற்றவர்களுக்கு நாம் செய்யாது இருக்கும் போது மட்டுமே நமது உரிமைகள் எமக்கு உரித்துடையனவாகும்.
 
 றிப்கா அன்சார்,
பிரதி அதிபர்
அல் ஹிலால் வித்தியாலயம்
சாய்ந்தமருது.