இந்தியா-பாகிஸ்தான் மீண்டும் பேச்சுவார்த்தை: ஐ.நா பொதுச் செயலாளர் பான்-கி-மூன் வரவேற்பு!

இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக இருநாடுகளும் கூட்டாக அறிவித்துள்ளதை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் வரவேற்றுள்ளார்.

Unknown

பாகிஸ்தானில் 2 நாள் சுற்றுப் பயணத்தை முடித்து கொண்டு சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் சர்தாஜ் அஜீசுடன் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இந்திய-பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சமீபத்தில் பாங்காக் நகரில் சந்தித்து பேசியதை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் விரிவான பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அவர்கள் கூறினர். 

மேலும், பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு இரு நாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அப்போது சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

”இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்ப்பதற்கு இரு நாடுகளால் எடுக்கப்படும் எல்லாவிதமான முயற்சிகளையும் ஐக்கிய நாடுகள் சபை எப்போதும் வரவேற்கும்” என்று ஐ.நா தரப்பில் கூறப்பட்டுள்ளது.