துருக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானத்தின் கறுப்பு பெட்டியை ஆய்வு செய்ய இங்கிலாந்து நிபுணர்களுக்கு அழைப்பு!

8df4098c-2e6e-42af-a875-121eb6625441_S_secvpf
சிரியாவில் ஒரு பகுதியை பிடித்து வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியா அதிபருக்கு ஆதரவாக இந்த நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது.

ரஷ்ய விமானங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பகுதிகளில் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இந்த விமானங்கள் துருக்கி எல்லைக்குள் பறப்பதாகவும், இது தொடர்ந்து நீடித்தால் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் துருக்கி எச்சரித்து வந்தது. இந்த நிலையில் ரஷ்ய விமானம் ஒன்று அத்து மீறி எல்லைக்குள் வந்ததாக கூறி அந்த விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது. விமானம் சிரியா எல்லைக்குள் போய் விழுந்தது.

இதுபற்றி ரஷ்யா கூறும் போது, எங்கள் விமானம் துருக்கி எல்லைக்குள் செல்லவில்லை. சிரியா எல்லைக்குள் பறந்த போதுதான் துருக்கி சுட்டு வீழ்த்தி இருக்கிறது என்று கூறியது. ஆனால், இதை துருக்கி மறுத்தது. மேலும் ரஷ்ய விமானத்துக்கு துருக்கியில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஆடியோ டேப்பையும் துருக்கி வெளியிட்டது.

இந்த நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்து கறுப்பு பெட்டியை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. அந்த பெட்டியில் பதிந்திருக்கும் உரையாடல்களை முழுமையாக திரட்ட ரஷ்யா முடிவு செய்துள்ளது. இதற்காக இங்கிலாந்து நிபுணர்களை உதவிக்கு அழைத்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இதற்கான அழைப்பை விடுத்துள்ளதாக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.