மாகாண சபைகளுக்கு சுயமாக செயற்படும் வகையிலும் தேசிய பிரச்சினைக்கு தீர்வாகவும் மாகாண சபை முறை கொண்டுவரப்பட்டாலும் இன்றுவரை அந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை என ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் பெருநகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.
பிரதேச சபை தலைவர்களுக்கு சர்வாதிகார அதிகாரத்தை வழங்கும் சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். மாகாணசபைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினாலும் தேசிய பிரச்சினைக்கு மாகாணசபை முறை தீர்வாக அமையவில்லை.
ஐ.தே.க ஆட்சியில் சுதந்திரக் கட்சியின் கீழுள்ள மாகாணசபைகளுக்கு குறைவாக நிதி ஒதுக்கப்பட்டது. சு.க ஆட்சியில் ஐ.தே.கவின் கட்டுப்பாட்டின் கீழிருந்த மாகாண சபைகளுக்கு குறைவாக நிதி ஒதுக்கப்பட்டது. இன்று ஐ.தே.கவும், சு.கவும் கூட்டாட்சியிலும் நிதி குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகளுக்கு சுயமாக செயற்படவே மாகாணசபை முறை கொண்டுவரப்பட்டது. அந்த நோக்கமும் நிறைவேற்றப்படவில்லை. பிரதேச சபைத் தலைவர்களுக்கு சர்வாதிகாரம் வழங்கும் சட்டத்தை அதிசாங்கம் நீக்க வேண்டும்.
காசோலைகளுக்கு கையெழுத்திடும் அதிகாரம் மட்டுமன்றி வரவுசெலவுத்திட்டம் தோற்றாலும் தொடரந்தும் செயற்படுவதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. கேள்விமனு கோரலில் இடம்பெறும் மோசடிகள் தடுக்கப்பட வேண்டும். அமைச்சர்களைவிட உள்ளூராட்சி சபை தலைவர்களுக்கு கூடுதல் நிதி மோசடி செய்ய வாய்ப்புள்ளது. தலைவருக்கு நெருக்கமானவருக்கே கேள்விமனு வழங்கப்படுகிறது.
மாகாண சபைகளையன்றி உள்ளூராட்சி சபைகளையே பலப்படுத்த வேண்டும். அவைதான் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.